உலகம் முழுக்க இதய நோய் பிரச்னையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. அதற்குத் தீர்வளிக்கும் வகையில் இதய நோய்க்கான மேம்பட்ட சிகிச்சைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ரத்தக் குழாய்களில் உள்ள பிரச்னைகளை சரிசெய்வதற்கான சிகிச்சைகளைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இதய நோய்களின் ஒரு பகுதியான படபடப்பு, மயக்கம் போன்றவற்றுக்கான சிகிச்சையான ‘எலெக்ட்ரோ ஃபிசியாலஜி (Electrophysiology)’ பற்றிய விழிப்புணர்வு இங்கு பலருக்கும் இல்லை.

எலெக்ட்ரோ ஃபிசியாலஜி என்பது என்ன? எலெக்ட்ரோ பிசியாலஜி சிகிச்சை முறைகள் என்னென்ன..? விளக்கம் தருகிறார், திருச்சி, காவேரி மருத்துவமனையின் முதன்மை எலெக்ட்ரோ ஃபிசியாலஜிஸ்ட் & கார்டியாலஜிஸ்ட் டாக்டர் T. ஜோசப்.
“எலெக்ட்ரோ ஃபிசியாலஜி என்பது இதயத்தின் எலெக்ட்ரிக்கல் சம்பந்தமான செயல்பாடுகள் பற்றியது. இதயத்தின் முக்கிய செயல்பாடான பம்பிங் செய்வதற்கு, எலெக்ட்ரிக் கரன்ட் தேவை. அந்த எலெக்ட்ரிக் கரன்ட் எப்படி இதயத்தில் வேலை செய்கிறது, அதன் மூலமாக இதயம் எப்படி பம்ப் செய்கிறது என்பதைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வதுதான் எலெக்ட்ரோ ஃபிசியாலஜி. கார்டியாலஜியின் மேம்பட்ட சிகிச்சை முறைகளில் ஒன்று இந்த எலெக்ட்ரோ ஃபிசியாலஜி. ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற இதய ரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கான சிகிச்சைகளைச் கார்டியாலஜிஸ்ட் செய்வார். எலெக்ட்ரோ ஃபிசியாலஜிஸ்ட், இதயத்தின் எலெக்ட்ரிக்கல் சிஸ்டத்தைப் பற்றி நுட்பமாக ஆய்வுசெய்து அதற்கான சிகிச்சையைச் செய்வார்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இதயம் என்பது ஒரு பம்பிங் மெஷின். உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்வதுதான் அதனுடைய வேலை. இது கிட்டத்தட்ட ஒரு மோட்டார் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதைப் போல. அந்த வகையில் இதயம் ஒரு மோட்டார் என்றால், அந்த இதயம் என்னும் மோட்டார் இயங்குவதற்கு கரன்ட் தேவை. அந்த கரன்ட் ஆனது இதயத்தின் வலது பக்கத்தில் பேட்டரி மாதிரி இருக்கும். அதிலிருந்து பல நரம்புகள் மூலமாக மின்சாரம் சென்று இதயத்தைத் துடிக்க வைக்கிறது. அப்படி மின்சாரத்தினை எடுத்துச் செல்லும் எலெக்ட்ரிகல் சர்க்கியூட்டில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வதையே ‘இபி ஸ்டடி’ (EP Study - Electrophysiology Study) என்கிறோம்.
சிலருக்கு இதய படபடப்பு, மயக்கம் அல்லது இதயம் கொஞ்சம் குறைவாகத் துடிப்பது போன்ற பிரச்னைகள் இருக்கலாம். இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சமீபகாலங்களில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலர் உயிரிழப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இப்படியான பிரச்னை இருப்பவர்களுக்கு முதலில் இபி ஸ்டடி செய்து, இந்தப் பிரச்னையின் மூலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இபி ஸ்டடியின் போது, கால் வழியாக அல்லது கழுத்து வழியாக சிறு துளையிட்டு, சில கருவிகளைச் செலுத்தி இதயத்தினுடைய எலெக்ட்ரிக்கல் செயல்பாடுகளை முதலில் ஆய்வு செய்வோம். அதன்பிறகு இதயத்திலுள்ள சர்க்யூட்களில் எங்கு பிரச்னை இருக்கிறதோ, அந்த இடத்தில் ரேடியோ ஃப்ரிக்குவென்சி அப்லேஷன் (Radiofrequency ablation) என்ற தெர்மல் எனர்ஜி மூலம் சரி செய்வோம். அதன்மூலமாக நோயாளிகள் படபடப்பு மற்றும் மயக்கத்திலிருந்து பூரணமாக குணமாக முடியும்.

இந்தச் சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு எவ்வித மயக்க மருந்துகளும் கொடுக்கப்படுவதில்லை. ஊசிகள் மட்டும் போடப்படும். தனக்கு என்ன சிகிச்சை நடக்கிறது என்கின்ற சுயநினைவுடனேயே நோயாளி இருப்பார். இந்தச் சிகிச்சையில் எந்தவித ரிஸ்க்கும், பக்க விளைவுகளும் கிடையாது. வெளிநாடுகளில் நோயாளிகள் காலையில் வந்து சிகிச்சையை முடித்துவிட்டு மாலையே வீடு திரும்பி விடுகிறார்கள். ஆனால், நாம் சிகிச்சை முடிந்து ஒரு நாள் நோயாளியை கண்காணிப்பில் வைத்து, மறுநாள் டிஸ்சார்ஜ் செய்கிறோம். மேலும், இந்தச் சிகிச்சைக்குப் பிறகு எந்தவிதமான மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்றார் டாக்டர் ஜோசப்.
எலெக்ட்ரோ பிசியாலஜி சம்பந்தமான கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.