
வெளியே சசிகலாவைப் பற்றி ஊழல், லஞ்சம், அதிகார ஆட்டம் எனப் பலவிதமான குற்றச்சாட்டுகள் இருக்கலாம்.
ஜனவரி 27-ம் தேதி. சசிகலாவின் நான்கு வருட சிறைத்தண்டனை முடிந்து, விடுதலைக்கான ஆவணங்கள் கையெழுத்தான நேரம். கொரோனா சிகிச்சைப் பிரிவில் இருந்த சசிகலாவிடம் புது செல்போனும் முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண்கள் எழுதப்பட்ட டைரியும் கொடுக்கப்பட்டன. நான்கு வருடங்களாகச் சிறையில் இருந்த சசிகலா எத்தனையோ பேருடன் பேச விரும்பியிருப்பார்! தண்டனை முடிந்ததால் அவர் போனில் பேச மருத்துவமனை நிர்வாகமும் அனுமதித்தது. ‘சசிகலா முதலில் யாருக்கு போன் செய்வார்’ என உறவு வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு. ஆனால், டிஸ்சார்ஜ் ஆன டிசம்பர் 31-ம் தேதி வரை சசிகலா ஒருவருக்குக்கூட போன் செய்யவில்லை. அவ்வளவு வைராக்கியம்.



“நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவங்களுக்கே கொரோனாத் தொற்று சரியாக 15 நாள்களுக்கும் மேல் ஆகும். ஆனா, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இருந்துமே, அட்மிட்டான ஐந்தாவது நாளே உங்க தொற்று குணமாகிடுச்சு. உங்களோட தைரியம்தான் முக்கிய காரணம்” - விடைபெறும் நேரத்தில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவர்கள் சொல்ல, நம்பிக்கையாக நிமிர்ந்திருக்கிறார் சசிகலா.
“தண்டனை முடிகிற நேரத்துல திடீர்னு ஹாஸ்பிடல்ல சேர்த்து கொரோனான்னு சொன்னப்ப, ‘நம்மள சுத்தி என்ன நடக்குது’ன்னு குழப்பமாகிட்டேன். அடுத்த நிமிஷமே ‘செத்தா அம்மாகிட்ட போவோம்… பொழைச்சா மக்கள்கிட்ட போவோம்’னு நினைச்சு தைரிய மாகிட்டேன். மனநிலைய மாத்திக்கிறதுதானே எல்லாக் காயங்களுக்குமான மருந்து” என மருத்துவர்களிடம் சொல்லியிருக்கிறார் சசிகலா.
மருத்துவர்கள், செவிலியர்கள் அத்தனை பேரிடமும் கன்னடத்திலேயே சரளமாகப் பேசி சசிகலா நன்றிகூற, “இந்த அளவுக்குக் கன்னடம் பேசுறீங்களே?” என ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள். “இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு? கர்நாடக ஜெயில்ல அடைச்சதால கன்னடத்துல பேசுறேன். இங்கிலாந்து ஜெயில்ல அடைச்சிருந்தா இங்கிலீஷ்ல பேசியிருப்பேன்…” என்று சசிகலா சொல்ல, மருத்துவமனையே கலகலத்திருக்கிறது.

சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, முதலமைச் சராகவும் முடிசூட நினைத்த நேரத்தில்தான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதித்து தீர்ப்பு வந்தது. கோட்டையில் ஆள நினைத்தவரைச் சிறைக்குள் அனுப்பி வைத்தது காலம். எப்படிப்பட்டவர்களும் இதில் நிலைகுலைந்திருப்பார்கள். உடல்நிலை, பாதுகாப்பு என எதையாவது காரணம் காட்டி, அதிலிருந்து தப்பிக்க, கால அவகாசம் வாங்க முயன்றிருப்பார்கள். ஆனால், நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுக்க, வழக்கறிஞர்கள், போலீஸ்காரர்கள் புடைசூழ சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் போன காட்சி, தெலுங்குத் திரைப்படங்களில்கூடப் பார்த்திராத பரபரப்பு.

நான்கு வருடச் சிறைக்காலத்தில் உடல்நிலையைக் காரணம் காட்டி ஒரு முறைகூட சசிகலா மருத்துவமனைப் பக்கம் போகவில்லை. ‘‘சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் அடிக்கடி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறார். அதேபோல் நீங்களும் செய்யலாம்’’ என வழக்கறிஞர்கள் சொன்னபோது, அதை மறுத்தார் சசிகலா. வருமான வரி கட்டுபவர் என்கிற விதத்தில் சசிகலாவுக்குச் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ‘நான் சாதாரண சிறைவாசியாகவே இருக்கிறேன்’ எனச் சொல்லி கடைசி வரை அப்படியே இருந்தார்.
வெளியே சசிகலாவைப் பற்றி ஊழல், லஞ்சம், அதிகார ஆட்டம் எனப் பலவிதமான குற்றச்சாட்டுகள் இருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால், பெங்களூரு சிறைக்குள் கன்னடம் கற்க, தியானம் பயில, தோட்ட வேலைகள் பார்க்க, கடிதங்கள் எழுத என அவருக்கு நேரம் போதவில்லை என்பதே உண்மை. அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் சிலர் எழுதிய கடிதங்களுக்கு அவர் பதில் எழுதவில்லை. ஆனால், தொண்டர்கள் பலர் எழுதிய கடிதங்களுக்கு அவர் தவறாமல் பதில் எழுதினார்.

சசிகலா எழுதிய பதில் கடிதங்களை நம்மிடம் காட்டிய முன்னாள் அதிகாரி ஒருவர், “சசிகலாவை எழுதப் படிக்கத் தெரியாதவராகவும் மிகக் கொடூரமானவராகவும் நாம் கற்பனை செய்துவிட்டோம். ஆனால், அவர் எனக்கு எழுதிய கடிதங்களைப் பார்த்து அசந்து போய்விட்டேன். அவருடைய கடிதங்களில் அடித்தல், திருத்தல் இருக்காது. ஒரு தவறு கண்டுபிடிக்க முடியாது…” என்கிறார்.
சசிகலாவின் ரீ-என்ட்ரி எப்படி இருக்கப் போகிறது? ‘தலைவி என்கிற மனநிலையில் வழக்கமான தடாலடி காட்டுவாரா, அல்லது, சைலன்ட் சக்தியாகச் செயல்படப் போகிறாரா’ எனப் பல கேள்விகள் பரபரத்தன. ‘இனி அதிரடிதான்’ என்பதுபோல், விக்டோரியா மருத்துவமனையிலிருந்து கிளம்பும்போது, எப்போதும் ஜெயலலிதா பயன்படுத்தும் அதே சென்டிமென்ட் காரில் அ.தி.மு.க கொடியைக் கட்டச் சொல்லி வெளியே வந்தார் சசிகலா. எம்.நடராஜனின் (சசிகலாவின் கணவர்) தம்பி எம்.ராமச்சந்திரன் காலில் விழ, சசிகலா அதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் கிளம்பலாம் எனச் சொல்ல, காரில் ஏறினார் சசிகலா. தொண்டர்கள் பூக்களையும் துளசியையும் தூவி கோஷங்கள் எழுப்ப, கார்கள் புடைசூழப் புறப்பட்டார். தேவனஹல்லி அருகே உள்ள கோடலகுருக்கி பண்ணை விடுதி வரை கார்களின் அணிவகுப்பு, கோஷங்கள், தனியார் செக்யூரிட்டி, போலீஸ் பரபரப்பு என சசிகலா வருகையைப் பார்த்து மிரண்டுபோனார்கள் பெங்களூருவாசிகள்.
பெங்களூரில் அவர் தங்கும் ஏற்பாடுகளை சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் பார்த்துக்கொண்டார். சசிகலாவின் தம்பி திவாகரன், அவர் மகன் ஜெயானந்த் இருவரும் ஆப்சென்ட். தினகரன் தீவிர யோசனையிலேயே நின்றுகொண்டிருந்தார். சசிகலாவுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு மீடியாக்களிடம் வந்தவர், “அ.ம.மு.க தொடங்கப்பட்டதே அ.தி.மு.க-வை மீட்கத்தான்” என்றார் ஒரே போடாக. அடுத்தடுத்த கேள்விகளைப் பத்திரிகையாளர்கள் கேட்க, “ஒரு வாரம் கழித்து அரசியல் பேசலாம்” எனச் சொல்லிப் புறப்பட்டார் தினகரன். அதைத் தொடர்ந்து விவேக் உட்பட மற்ற உறவினர்களையும் போகச் சொல்லிவிட்டார் சசிகலா.
பெங்களூரு நிலவரங்களையும் உறவு வட்டாரங்களையும் விசாரித்த வகையில் ‘சசிகலாவின் அடுத்த இன்னிங்ஸ் அமர்க்களமாகவே இருக்கும்’ என்கிறார்கள். சிறையிலிருந்து விடுதலையான 27-ம் தேதி, கட்சிக்காரர்களை உற்சாகமாக்க சசிகலாவை ஓர் அறிக்கை வெளியிடச் சொல்லியிருக்கிறார்கள் உறவினர்கள். ஆனால், அதை மறுத்துவிட்டார் சசிகலா. நேரடியாகவே மக்களைச் சந்திக்கிற மனநிலையில்தான் சசிகலா இருக்கிறார். ‘‘எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற நிலையில் எனக்கு யோசனை சொல்லாதீர்கள். தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசாதீர்கள்’’ என உறவுகளுக்கும் கடிவாளம் போட்டிருக்கிறார்.
“நான்கு வருட சிறைவாசம் சசிகலாவை பலவீனமாக்கவில்லை; அவரை இன்னும் சக்தி மிக்கவராக மாற்றியுள்ளது. ஏமாற்றம், தோல்வி, துரோகம் என அவர் பார்க்காததில்லை. ஆனால் அதையெல்லாம் எண்ணி மறுபடியும் கலங்கிக்கொண்டிருக்க சசிகலா விரும்பவில்லை. நெருக்கடியான நேரத்தில் தனக்காக நின்றவர்களையும், கட்சிக்காரர்களையும் சந்திப்பதுதான் அவருடைய முதல் வேலை. ‘பாதுகாப்பு என்கிற பெயரில் கெடுபிடி பண்ணாதீங்க. சொந்தபந்தம்னு சொல்லி ஆடாதீங்க’ எனக் கறார் காட்டியிருக்கிறார் சசிகலா. இதுவரை பார்த்திராத புது சசிகலாவைத் தமிழகம் பார்க்கப் போகிறது” என்கிறார்கள் அவருக்கு மிக நெருக்கமாக நிற்பவர்கள்.
வெளியே வந்த சசிகலா மிகச் சிலரிடம் மட்டுமே பேசியிருக்கிறார். கட்சி, ஆட்சி, எதிர்காலம் என ஆர்வத்தோடு அவர்கள் பலவிதமான கேள்விகள் கேட்க, அனைத்துக்கும் சேர்த்து சசிகலா சொன்ன ஒரே பதில் இதுதான்: “நான் கட்சிக்காரங்களோட கூவத்தூர்ல இருந்தப்பதான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்தது. நான்கு வருஷ தண்டனைன்னு தெரிஞ்ச உடனே, அந்தத் தீர்ப்பைக்கூட நான் முழுசா வாசிக்கலை. அம்மாவோட ஆட்சியை அம்போன்னு விட்டுட்டுப் போயிடக் கூடாதுன்னு நினைச்சேன். கட்சிக்காரங்களுக்கு தைரியம் சொல்லி கடகடன்னு வேலைகளைப் பார்த்தேன். அம்மாவோட ஆட்சியை உருவாக்கிட்டுத்தான் ஜெயிலுக்குப் போனேன். ‘பெங்களூரு போயி என்ன பண்ணப் போறோம்’னு அப்போ எனக்குத் தெரியாது. ஆனா, ‘சென்னை போய் என்ன பண்ணப் போறோம்’னு இப்போ எனக்கு நல்லாத் தெரியும்!

”சசிகலா கையில் பிரிக்கப்படாத கடிதம்!
சசிகலா மிகப் புதிரானவர். ஜெ. மறைந்த சூழலில் அவரை முதல்வராகப் பதவி ஏற்கச் சொல்லி அப்போலோவிலேயே வற்புறுத்தினார் ஓ.பன்னீர்செல்வம். கட்சிக்காரர்கள், உறவினர்கள் அனைவருமே அதைத்தான் வலியுறுத்தினார்கள். ஆனால், பெரிதாய் ஆர்வம் காட்டாத சசிகலா, சில நாள்களிலேயே பொதுச் செயலாளராகி முதல்வர் நாற்காலியை நோக்கி நகர்ந்ததுதான் ஆச்சர்யம். உடை தொடங்கி பயணிக்கும் கார் வரை சசிகலாவை இன்னொரு ஜெயலலிதாவாக மாற்றிய சிலர்தான், கூவத்தூர் களேபரம் வரை அவரைக் கொண்டுவந்து விட்டார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த நிலையில் டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் உள்ளிட்டவர்களைத் தாண்டி எடப்பாடி பழனிசாமியைப் பரிந்துரைத்தார் சசிகலா. பழனிசாமிமீது அவ்வளவு நம்பிக்கை. அவரும் மாறியதில், சுக்குநூறானது சசிகலா கனவு. “பழனிசாமியும் இப்படிப் பண்ணிட்டாரே?” எனச் சிறையில் சந்தித்தவர்கள் சொல்ல, “என்ன பண்றது, அவருக்கும் குடும்பம் இருக்குல்ல” எனச் சிரித்திருக்கிறார் சசிகலா. விசுவாசம் குறித்தும், உறவுகளின் நெருக்கடி குறித்தும், பழனிசாமி தரப்பில் ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட கடிதம், இன்றுவரை சசிகலாவின் கையில் பிரிக்கப்படாமலேயே இருக்கிறது.

கட்சி அலுவலகம் போவாரா?
காரில் அ.தி.மு.க கொடியைக் கட்டியபோதே, சசிகலாவின் அடுத்த மூவ் தடாலடிதான் என முடிவாகிவிட்டது. கூட்டணியைக் கட்டமைக்கவே படாதபாடுபடும் அ.தி.மு.க., சசிகலாவிடம் சமாதானம் பேசத் தயாராகிவிட்டதாகவே சொல்கிறார்கள். சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ‘‘தயவுபண்ணி அந்தம்மா சம்பந்தமா யாரும் பேசாதீங்க’’ எனக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் முதல்வர் பழனிசாமி. அதேசமயத்தில், ‘பயந்த மாதிரி காட்டிக்கொள்ளக்கூடாது’ என்பதற்காக அமைச்சர் ஜெயக்குமாரை மட்டும் பேச வைத்திருக்கிறார்.
இப்போதைக்கு போஸ்டர் ஆதரவாகத் தொடங்கியிருக்கும் வரவேற்பு, கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வரை நீளும் என நினைக்கிறார் சசிகலா. ஆனால், ‘அதிகாரத்தைக் கடைசிவரை சுவைக்க நினைப்பவர்கள் அசைய மாட்டார்கள். நம் பக்கத்திலேயே இருப்பார்கள்’ என நம்புகிறது ஆளும் தரப்பு.
தன் தயவு இல்லாமல் நிச்சயம் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெல்லாது என்பது சசிகலாவின் கணக்கு. சென்னை வரும்போது ஜெ. நினைவிடத்துக்குச் செல்லும் முடிவில் இருக்கிறார் சசிகலா. ‘‘கட்சி அலுவலத்துக்கே அவர் போனாலும் ஆச்சர்யம் இல்லை’’ என்கிறார்கள் உடனிருப்பவர்கள். தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத் திட்டமும் சசிகலாவின் எண்ணமாக இருக்கிறது. ‘சமாதானமா, சட்டப் போராட்டமா, எதிர்த்துப் போட்டியா’ என்ற மூன்று வழிகளில் எதற்கும் தயார் என்ற மனநிலையில் இருக்கிறார் சசிகலா. ஆனால், `மேலே இருக்கிறவர் என்ன நினைக்கிறாரோ?’ என்பது புரியாமல், டெல்லியின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறார்கள் பன்னீரும் பழனிசாமியும்.
அவர்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு… பணிவதுதான். யாருக்குப் பணிவது என்பது மட்டுமே கேள்வி!