மக்களின் கலர் டிவி மோகம்:
மகாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரில் பிறந்தவர் வேணுகோபால் தூத். முன்னதாக அவருடைய தந்தை நந்த்லால் மாதவ்லால் தூத், 'வீடியோகான்' குழுமத்தைத் தொடங்கியிருந்தார். பின்னாளில் தன்னுடைய தந்தையின் குழுமத்தை விரிவுபடுத்தி, மாபெரும் தொழிலதிபராக மாற வேண்டும் என்ற ஆசை வேணுகோபால் தூத்தைத் தொற்றிக்கொண்டது.
அந்த நேரத்தில்தான் 'தூர்தர்ஷ'னும் தன் தொலைக்காட்சி சேவைகளைக் கறுப்பு, வெள்ளையிலிருந்து வண்ணத்துக்கு மாற்றிக்கொண்டிருந்தது. மக்களும் ஆர்வமாக கலர் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்கி பயன்படுத்தத் தொடங்கினார்கள். எனவே, இந்தத் துறையில் கால்பதிப்பதன் மூலம் மாபெரும் வெற்றியைப் பெறலாம் எனத் திட்டமிட்டார், தூத்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு:
மேலும், இதற்காக ஜப்பானுக்குச் சென்று பிரத்யேகமாகப் படித்தார். தனியாகத் தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்க முடியாது என்பதால், அந்தத் துறையில் கோலோச்சிவரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 'தோஷிபா' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். இறுதியாக 1986-ம் ஆண்டு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பில் 'வீடியோகான்' குழுமம் களம் கண்டது. மெல்ல மெல்ல கலர் டி.வி துறையில் தனக்கெனத் தனி இடம் பிடித்தது. அப்போது ஆண்டுக்கு 1 லட்சம் `டி.வி'கள் விற்பனையானதாகக் கூறப்பட்டது.
பின்னர் இந்த அனுபவத்தைக்கொண்டு 1990-களில் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பிலும் கவனம் செலுத்தியது. தான் நினைத்ததுபோலவே வெற்றிவாகையும் சூடியது. பிறகு மொபைல் போன் சேவையில் வீடியோகான் நிறுவனம் இயங்கியது. இதுவரை வெற்றி மட்டுமே பெற்றுவந்த அந்த நிறுவனத்தின் வீழ்ச்சி இங்கிருந்துதான் தொடங்கியது. அப்போது நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது.

தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் வழக்கு:
இதில் 21 லைசென்ஸுகள் வீடியோகான் நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இதனால் வேணுகோபால் தூத் அதிர்ச்சியைச் சந்தித்தார். மறுபுறம் உலக அளவில் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் விற்பனையில் முன்னணியில் இருக்கும் 'எல்ஜி', 'சாம்சங்' உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் நுழைந்தன. அவர்கள் ஏற்கெனவே உலகளாவிய சந்தையில் பெற்ற வெற்றியின் மூலம் கிடைத்த அனுபவத்தைக்கொண்டு தங்களின் ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கினர்.
இதனால் மக்களின் பார்வை அந்த நிறுவனங்களின் பக்கம் சென்றது. கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தையிலிருந்து பின்னோக்கி நகர்ந்தது, 'வீடியோகான்.’ மேலும், நிதி நெருக்கடியையும் சந்தித்தது. பிறகு, 'வீடியோகான்' நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது வங்கிகளுக்கு நிறுவனம் பெரும் தொகை பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

கொள்கைகளை மீறிக் கடன்:
இதையடுத்து 'வீடியோகானை’ யாரும் வாங்க முன்வரவில்லை. இதற்கிடையில் கடன் மோசடியில் சிக்கினார் வேணுகோபால் தூத். இறுதியாக சிபிஐ-யால் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். அதாவது ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாகச் சந்தா கோச்சார் பதவி வகித்தபோது வங்கி ஒழுங்குமுறை விதி, ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை மீறி வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், இதற்குப் பிரதிபலனாக சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நியூபவர் ரீனிவபிள்ஸ் நிறுவனத்தில் வேணுகோபால் தூத் ரூ.64 கோடியை முதலீடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், இந்தத் தொகை வீடியோகான் குழுமத்துக்கு ஐசிஐசிஐ வங்கிக் கடன் வழங்கிய 2010 மற்றும் 2012-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பகுதி பகுதியாகச் செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கிக் கடன் மோசடி வழக்கில் அதன் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான சந்தா கோச்சார், அவரின் கணவர் தீபக் கோச்சார் ஆகியோரைக் கைதுசெய்தது. மும்பை நீதிமன்றத்தின் முன்பு, அவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்தச் சூழ்நிலையில், தற்போது இந்த வழக்கில் 3-வது முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் வீடியோகான் குழும அதிபர் வேணுகோபால் தூத்தையும் சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்திருக்கிறார்கள். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.