குளித்தலையைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் கைதுசெய்யப்பட்ட சூழலியல் போராளி முகிலன், தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இச்சூழலில், விகடனின் #DoubtOfCommonMan பகுதியில் வாசகர் சரவணன், "முகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். வாசகி சரோஜா பாலசுப்பிரமணியனும் இது தொடர்பான கேள்வியைப் பதிவு செய்திருக்கிறார்.

முகிலன், 141 நாள்கள் தலைமறைவாக இருந்தபோது என்ன நடந்தது, அவரைக் கடத்தியவர்கள் யார், குளித்தலை பெண் கொடுத்த பாலியல் வழக்கின் பின்னணி என்ன, ஏன் இதுவரை முகிலன் வாக்குமூலம் கொடுக்காமல் இருக்கிறார்... இப்படி இந்த விவகாரத்தில் நிறைய ரகசியங்கள் புதைந்துகிடக்கின்றன.
இந்தக் கேள்விகள்குறித்து ஆராய்வதற்கு முன், சிறு ஃபிளாஷ்பேக்!
முகிலன், ஈரோடு மாவட்டம் சென்னிமலையை பூர்வீகமாகக் கொண்டவர். தொடக்கத்தில், தொழிற்சங்கப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற இவர், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக சுப.உதயகுமார் நடத்திய போராட்டங்களிலும் முன்வரிசையில் நின்றார். அதுவே அவருக்கு, 'சூழலியல் போராளி' என்ற அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. தொடர்ந்து, இயற்கையை சிதைக்கும் சக்திகளுக்கு எதிராக தமிழகம் முழுக்க தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார்.
ஆறு வருடங்களுக்கு முன்பு, கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல்கொள்ளை பெருமளவு நடந்துகொண்டிருந்தது. அரசும் மணல் குவாரிகளை நடத்தியது. அதைத் தடுத்துநிறுத்தி, நதியைப் பாதுகாக்கும் நோக்கில், 'சிகாகோ' விஸ்வநாதன் என்பவர் 'காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பில் இணைந்து மணல் மாஃபியாக்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த ஆரம்பித்தார் முகிலன். நல்லக்கண்ணு, பழ.நெடுமாறன், வைகோ என நிறைய தலைவர்களை கரூருக்கு அழைத்துவந்து போராடவைத்தார். இதனால், அரசே நடத்திய பத்துக்கும் மேற்பட்ட மணல்குவாரிகள் மூடப்பட்டன. போராட்டத்துக்காக அடிக்கடி கரூர் வந்துசெல்லவேண்டியிருந்தது. அந்த சிரமம் கருதி, புகளூரில் உள்ள விஸ்வநாதன் வீட்டிலேயே தங்கினார் முகிலன். முகிலனின் களப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட குமாரபாளையத்தைச் சேர்ந்த பெண்ணும், முகிலனோடு போராட்டங்களில் கலந்துகொண்டார். அதற்காக, கரூர் வரும்போது அந்த பெண்ணும் விஸ்வநாதன் வீட்டிலேயே தங்கினார்.
இந்தச் சூழலில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களுக்காகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள், கரூர் மணல்குவாரிகளுக்கு எதிரான போராட்டங்களின்போது தொடுக்கப்பட்ட வழக்குகளுக்காகக் கைதுசெய்யப்பட்ட முகிலன், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 'அங்கே, எனக்கு பாதுகாப்பில்லை' என்று முகிலன் முறையிட, அங்கிருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். ஜாமீன் கேட்காமல் பலமாதங்களை சிறையிலேயே கழித்தார். அந்த காலக்கட்டங்களில், சிறைக்குச் சென்று முகிலனை தொடர்ச்சியாக சந்தித்தவர்கள், அவரது வழக்கறிஞரும், அந்த குமாரபாளையம் பெண்ணும்தான். அப்போது, முகிலன் தரும் தகவல்களை அந்த பெண்தான் ஊடகங்களுக்கு வழங்கிவந்தார்.
அதன்பிறகு, ஒருவழியாக முகிலன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். கரூர் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்குக்காக கரூரில் அறை எடுத்துத் தங்கி, கையெழுத்துப் போட்டுவந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டத்தில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 'கூட்டத்தைக் கலைக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், எதேச்சையாக நிகழ்ந்த உயிரிழப்புகள் இவை' என்று அரசு சொன்னது. ஆனால், அந்த விவகாரத்தில் தலையிட்ட முகிலன், 'இது போலீஸாரின் திட்டமிட்ட சதி' என்று சொல்லி, அதற்கான வீடியோ ஆதாரங்களைத் திரட்டி வெளியிட்டார். அதனால், தமிழக அரசு; ஸ்டெர்லைட் ஆலை; காவல்துறை என மூன்று தரப்புகளும் ஆடிப்போயின. கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அது தொடர்பான சில ஆதாரங்களை வெளியிட்ட முகிலன், "விரைவில் முக்கிய ஆவணங்களை வெளியிடுவேன்" என்றார். அன்று இரவு 12 மணிக்கு, 'மதுரை கிளம்புகிறேன்' என்று நண்பர்களுக்குத் தகவல் தந்துவிட்டு கிளம்பினார். சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்குச் சென்ற அவர், திடீரென மாயமானார்; அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆனது.

இதனால் பதறிப்போன முகிலனின் மனைவி பூங்கொடி, "என் கணவரை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்தான் கடத்தியிருக்க வேண்டும். அவர்களால் என் கணவர் உயிருக்கு ஆபத்து" என்று கதறியபடி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணை, சிபிசிஐடி வசம் கைமாறியது. இந்நிலையில், குமாரபாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட அந்த பெண், குளித்தலை மகளிர் காவல்நிலைத்தில் "முகிலன் நெடுவாசல் போராட்டத்தின்போது, என்னை பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டார். என்னை திருமணம் செய்துகொள்வதாக அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை" என்று முகிலன் மீது புகார் கொடுத்தார். இதனால், முகிலன் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாள்கள் கரைய, 'முகிலன் எங்கே இருக்கிறார்?' என்று ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது. ஐ.நா சபை வரை முகிலன் மாயமான விவகாரம் எதிரொலித்தது.
ஒருகட்டத்தில், 'முகிலன் உயிரோடுதான் உள்ளாரா?' என்கிற அளவுக்கு விவகாரம் மாறியது. ஆனால் அந்த இளம்பெண்ணோ, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து, 'முகிலனை யாரும் கடத்தவில்லை. நான் கொடுத்த பாலியல் வழக்கை சந்திக்கப் பயந்து, ஓடி ஒளிந்திருக்கிறார். கொஞ்சநாள் கழித்து அவரே ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து வருவார் பாருங்கள். வழக்கமாக அடிக்கடி அவர் நடத்தும் நாடகத்தைதான் இப்போதும் அரங்கேற்றியிருக்கிறார்' என எழுதிவந்தார். முகிலன் மாயமான விவகாரம் 100 நாள்களைக் கடந்துபோக, 'முகிலன் அவ்வளவுதான்' என்று அவரது உறவினர்களே நினைக்கும் அளவுக்கு நிலை உருவானது. இதற்கிடையில், குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் கொடுத்த பாலியல் வழக்கும், சிபிசிஐடி போலீஸார் வசம் மாற்றப்பட்டது.
முகிலன் பற்றிய சஸ்பென்ஸ் தொடர்ந்த நிலையில், கடந்த மாதம் 6-ம் தேதி, 'திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில், அங்குள்ள காவலர்களால் கைதுசெய்யப்பட்ட நபர் முகிலன் போல் உள்ளார்' என்று முகிலனின் மனைவி பூங்கொடிக்கு, அப்பகுதியில் ஒரு ரயிலில் பயணம்செய்த முகிலனின் நண்பர் சண்முகம் என்பவர் மூலமாகத் தகவல் வந்தது. திருப்பதியில் உள்ள நண்பர்களது உதவியை நாடினார் பூங்கொடி. ஊடகங்களுக்கும் தகவல் சென்றது. நீண்டநாளைய தாடி, அழுக்கு உடை, பிதற்றும் உதடுகள் என உருமாறி இருந்த அந்த நபர், முகிலன்தான் என்பது உறுதிசெய்யப்பட்டது. காவல்துறைக்கும் தகவல் சென்றது.
உடனடியாக அங்கே விரைந்த தமிழக சிபிசிஐடி போலீஸார், அவரை மீட்டுக்கொண்டு வந்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். "என்னை கடத்திவைத்து கொடுமைப்படுத்தினார்கள். நாயைவிட்டு கடிக்கவிட்டார்கள். என் மனதும் உடலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சரியானதும் வாக்குமூலம் தருகிறேன்" என்று சொன்னதால், அவருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். சிகிச்சையில், அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்ததற்கான அறிகுறிகள் இருந்ததாக மருத்துவர்கள் கூறியதாக, முகிலன் தரப்பில் சொல்லப்பட்டது.

பத்திரிகையாளர்களிடம், 'என்னை ஸ்டெர்லைட் ஆலை தரப்புதான் கடத்தியது. இரண்டு போலீஸ் உயரதிகாரிகள் என்னைக் கடத்தினார்கள்' என்று தெரிவித்தார். தொடர்ந்து, 'இரண்டு நாள்களுக்குள் பாலியல் வழக்கிற்காக கரூர் கோர்ட்டில் முகிலனை ஆஜர்படுத்த வேண்டும்' என்று நீதிபதி கூறியதால், கடந்த மாதம் 10-ம் தேதி நள்ளிரவு 2 மணி வாக்கில், கரூர் ஜே.எம் - 2 நீதிமன்ற நீதிபதி விஜய்கார்த்திக் வீட்டில் முகிலனை ஆஜர்படுத்தினர். அங்கேயும் முகிலன் வாக்குமூலம் தரவில்லை. 'என் உயிருக்கு ஆபத்து' என்று மட்டும் தெரிவித்தார். கடந்த மாதம் 24-ம் தேதி வரை அவரை நீதிபதி ரிமாண்ட் செய்தார். ஆனால், அதற்கு முன்பாக 22-ம் தேதியே சிபிசிஐடி போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
'முகிலனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என்று சிபிசிஐடி போலீஸார் கோரிக்கை விடுத்தனர். நீதிபதி வழக்கை மறுநாள் ஒத்திவைத்ததால், மறுநாளும் முகிலன் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டார். மீண்டும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக முகிலன் தெரிவித்ததால், அப்போதே மூன்று மணிநேரம் மட்டும் கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரித்துக்கொள்ள நீதிபதி அனுமதியளித்தார். அந்த மூன்று மணி நேர விசாரணையிலும் போலீஸாரிடம் பெரிதாக எதையும் முகிலன் வாய்திறந்து தெரிவிக்கவில்லை. இதனால், கடந்த 9-ம் தேதி வரை காவல் நீட்டிப்புக்கு உத்தரவிட்டார், நீதிபதி. ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியும், முகிலன் தான் மாயமான 141 நாள்களில் என்ன நடந்தது என்பது பற்றியோ, குளித்தலை பெண் கொடுத்த பாலியல் வழக்கு பற்றியோ எந்தவித வாக்குமூலமும் வழங்கவில்லை.
பத்திரிகையாளர்களிடமும் நீதிபதியிடமும், 'திருச்சி சிறையில் சிறை அதிகாரிகள் என்னைத் தாக்கினார்கள்' என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார் முகிலன். தானாகவும் வாக்குமூலம் கொடுக்காமல், விசாரணைக்கும் ஒத்துழைக்காததால், சிபிசிஐடி போலீஸாருக்கு சார்ஜ் ஷீட் தாக்கல் செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், சீத்தப்பட்டி காலனி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக, முகிலன் மீது ஏற்கெனவே தேசவிரோத வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணைக்காகவும் இரண்டுமுறை கரூர் ஜே.எம் - 1 நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பத்திரிகையாளர்களிடமும் நீதிபதியிடமும், 'திருச்சி சிறையில் சிறை அதிகாரிகள் என்னைத் தாக்கினார்கள்' என்று குற்றச்சாட்டை முன்வைத்தார் முகிலன். தானாகவும் வாக்குமூலம் கொடுக்காமல், விசாரணைக்கும் ஒத்துழைக்காததால், சிபிசிஐடி போலீஸாருக்கு சார்ஜ் ஷீட் தாக்கல் செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முகிலன் சம்பந்தமான பாலியல் வழக்கில் அவருக்கு உடந்தையாக இருத்தல், சாட்சிகளை அழித்தல், கூட்டுச்சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புகளூரைச் சேர்ந்த 'சிகாகோ' விஸ்வநாதன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தற்போதுள்ள நிலைகுறித்து, முகிலன் மற்றும் விஸ்வநாதனின் வழக்கறிஞரான கென்னடி என்கிற ஸ்டீபன்பாபுவிடம் பேசினோம்.
"முகிலன் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு. அதை ஜோடிக்க, அந்த பெண் தந்த எந்த ஆதாரமும் செல்லுபடியாகாததால், விஸ்வநாதனை சாட்சியாக்க சிபிசிஐடி அதிகாரிகள் முயற்சித்தார்கள். 'நான் பார்க்காத ஒன்றைப் பற்றி பொய்சாட்சி சொல்ல விரும்பவில்லை' என்று அவர் உறுதியாக மறுத்துவிட்டதால், அடிப்படையே இல்லாமல் அவர்மீதும் வழக்கு போட்டிருக்கிறார்கள். இது முற்றிலும் முரண்பாடானது. குளித்தலை பெண், முகிலன் மீது வழக்கு கொடுத்தபோது, 'எங்கள் இருவருக்கான பிரச்னை பற்றி விஸ்வநாதன் பேசித் தீர்ப்பதாகச் சொன்னார்' என்று ஒரி வரியை புகாரில் தெரிவித்திருந்தார்.
மற்றபடி, 'எங்கள் இருவருக்குமான அந்தரங்க விஷயங்கள் விஸ்வநாதனுக்குத் தெரியும்' என்று அவர் சொல்லவில்லை. பலநூறு நாள்கள், பல்வேறு வழக்குகளுக்காக ஜெயிலில் இருந்த முகிலன் வெளியில் வந்தபோது, விஸ்வநாதன் வீட்டில் தங்கவில்லை. கரூரில் அறை எடுத்து தங்கிதான் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார். அதற்கு முன்பாக, மணல்குவாரிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது, முகிலன் விஸ்வநாதன் வீட்டில் தங்கியிருக்கிறார். அப்போது, அந்த பெண்ணோடு முகிலனுக்கு என்ன உறவு இருந்தது என்பது விஸ்வநாதனுக்கு எப்படித் தெரியும்? அடிப்படையே இல்லாத இந்த வழக்கு தள்ளுபடியாகிவிடும். தகுந்த சாட்சி, ஆதாரங்கள் இல்லாததால், முகிலன் மீதான வழக்கும் ஒன்றுமில்லாமல் போகும்" என்றார்.

முகிலன் இப்போது, திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார். வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டுப் பெற்று வாசிக்கிறார். வழக்கறிஞருக்கு ஆலோசனை சொல்கிறார். தவிர நிறைய புத்தகங்கள் வாசிக்கிறார். மற்றவர்களுடன் எந்த உரையாடலும் இல்லாமல் இருக்கமாகவே இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதுபற்றி, இந்த வழக்கைக் கையாளும் சிபிசிஐடி ஆய்வாளர் திலகவதியிடம் பேசினோம். "விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இப்போது இதுகுறித்து பேசவியலாது" என்றார்.
முகிலன் வழக்கில் சஸ்பென்ஸ் இன்னும் விலகவில்லை என்பதுதான் எதார்த்தம்!
இதுபோன்ற கேள்விகள் உங்களுக்கும் ஏற்படுகிறதா? இங்கே கேளுங்கள்...
