Published:Updated:

பாதை மாறும் ‘மக்கள் பாதை’! - அமைப்பைக் கைகழுவிய சகாயம்...

சகாயம்
பிரீமியம் ஸ்டோரி
News
சகாயம்

இது இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்; அவர்களே முடிவெடுக்கட்டும்’ என்று கூறிவிட்டார். நடிகர் ரஜினி அல்லது சீமானிடம் சேரும் முடிவில் சகாயம் இருக்கிறார்

கோஷ்டிகள் இல்லாமல் அரசியலா..! சகாயம் ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலில் செயல்பட்டுவந்த ‘மக்கள் பாதை’ அமைப்பில் வெடிக்க ஆரம்பித்திருக்கும் முட்டல் மோதல்களால், ‘மக்கள் பாதை’ அமைப்பு திசைமாறிப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. சகாயம் மீது அமைப்பின் தலைவர் தரப்பினரும்... அமைப்பின் நிர்வாகிகள் மீது சகாயமும் பரஸ்பரம் மாறி மாறிப் புகார் தெரிவிப்பதால், இந்த விவகாரம் சூடுபிடித்திருக்கிறது.

சகாயத்தின் வழிகாட்டுதலில், கடந்த 2015-ம் ஆண்டு `மக்கள் பாதை’ அமைப்பு உருவாக்கப் பட்டது. இந்திய அரசின் அக்கவுன்டன்ட் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற அதிகாரி நாகல்சாமி, அந்த அமைப்புக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரான பிரசாரம், மக்கள் பிரச்னைகள் எனத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை `மக்கள் பாதை’ அமைப்பு முன்னெடுத்தது. இந்தநிலையில்தான், நாகல்சாமி தரப்பினருக்கும் சகாயத்துக்கும் இடையே ஏற்பட்ட உரசல், தீப்பொறியாகப் பற்றிப் பரவிக்கொண்டிருக் கிறது. என்னதான் நடக்கிறது மக்கள் பாதை அமைப்பில்?

வெற்றிச்செல்வி - நாகல்சாமி
வெற்றிச்செல்வி - நாகல்சாமி

அந்த அமைப்பின் மாநில மகளிரணித் தலைவரான வெற்றிச் செல்வியிடம் பேசினோம். ``மக்கள் பாதை அமைப்பிலுள்ள அனைவருமே சகாயத்தின் நேர்மையால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள்தான். தமிழ்நாட்டுக்கு திராவிட இயக்கங்கள் அல்லாத ஒரு மாற்றுத் தலைமை வேண்டும்; மூன்றாவது அணியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டோம். ஆனால், சகாயம் அரசுப் பதவியில் இருந்ததால், `இப்போதைக்கு வேண்டாம்’ என முடிவெடுத்து, 2021-ம் ஆண்டை இலக்காகவைத்துச் செயல்பட்டோம். நானே சகாயத்திடம் பலமுறை, ‘நீங்கள் முதல்வராக வேண்டும்’ என்று கூறியிருக்கிறேன்.

ஆனால், சகாயத்துடன் இருக்கும் நிர்வாகக்குழு உறுப்பினரான பாட்ஷா என்பவரின் பின்புலம் என்னவென்று தெரியவில்லை. அவர்தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம். அவர், தலைவரையே எதிர்த்துப் பேசுகிறார். எனவே, `பாட்ஷாவை நீக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தோம். இதற்காக 25 மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களும் கடிதம் கொடுத்தனர். ஆனால், சகாயம் இதை ஏற்கவில்லை” என்றவர், சகாயத்தின் மீதான புகார்களையும் முன்வைத்தார்.

``சில வாரங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிராக எங்கள் அமைப்பின் சந்திரமோகன் என்பவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார். ஆனால், ‘இதை ஓர் அடையாளப் போராட்டமாக மூன்று நாள்களில் முடித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டார் சகாயம். அவருக்குச் சற்றும் இதில் ஈடுபாடு இல்லை என்பது தெரிந்தது. அதனால்தான், உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டவர்களைக்கூட அழைத்து அவர் பாராட்டவில்லை. மாறாக, அவர்களெல்லாம் ஏதோ குற்றம் செய்தவர்களைப்போலப் பார்த்தார். இதையடுத்து, சகாயத்தின் வீட்டுக்குச் சென்றோம். அங்கு எங்களைச் சந்திக்கவும் மறுத்துவிட்டார்.

சகாயம்
சகாயம்

தலைவர் நாகல்சாமியும், `இது இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்; அவர்களே முடிவெடுக்கட்டும்’ என்று கூறிவிட்டார். நடிகர் ரஜினி அல்லது சீமானிடம் சேரும் முடிவில் சகாயம் இருக்கிறார். இதில், எங்களுக்கு உடன்பாடில்லை. ஏழைகளின் தலைவராக சகாயம் இருப்பார் என்று நினைத்தோம். எங்கள் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. தற்போது நாங்கள் அனைவரும் நாகல்சாமியின் பின்னால் வந்துவிட்டோம். இதே பெயரில் தொடர்ந்து இயங்குவோம்” என்றார் உறுதியாக.

நாகல்சாமியைத் தொடர்புகொண்டபோது, ``இப்போதைக்கு எதுவும் பேச விரும்பவில்லை. விரைவில் உங்களிடம் பேசுகிறேன்” என்று முடித்துக்கொண்டார். சகாயத்தின் மீதான சர்ச்சைகள் குறித்து ‘மக்கள் பாதை’ அமைப்பின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``சகாயத்துக்கு அரசியல் உத்வேகமெல்லாம் இல்லை. ஏதோ சமூகப் பணிகளைச் செய்துவிட்டுப் போகலாம் என்று நினைக்கிறார் அவர். ‘மக்கள் பாதை’ அமைப்பில்கூட வழிகாட்டியாக மட்டுமே இருந்தார். அப்போதே அவர், `என் புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டாம். நாகல்சாமிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்’ என்றுதான் கூறுவார். ஆனால், மக்கள் பாதை அமைப்புக்குள் சிலர் உள்நோக்கத்துடன் செயல்பட்டனர். களப்பணியாளராக இருந்த ஒருவர் ஒரு லட்சம் ரூபாயைக் கையாடல் செய்ததால், அமைப்பைவிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், தற்போது அதே நபருடன் சேர்ந்துகொண்டு, சகாயத்துக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறார் நாகல்சாமி.

நீட் போராட்டத்தின்போது, `அடையாள உண்ணாவிரதம் இருங்கள். நாளை பிரச்னை வந்தால், எனக்கும் சேர்த்துத்தான் சிக்கல்’ என்றார் சகாயம். இதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கி றார்கள். இவர்கள் புகார் கூறும் பாட்ஷா என்பவர், தனது சொந்தப் பணத்தைத்தான் செலவு செய்துவருகிறார். அவர் முறைகேடு செய்ததாக ஒரு தகவல்கூட வந்ததில்லை. இந்த அமைப்பைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் செயல்படுகிறார்கள்” என்றனர் விரிவாக.

இது குறித்து சகாயத்திடம் விளக்கம் கேட்டோம். ``எனக்கு இயக்கம் எதுவும் வேண்டாம். நான் ஆசைப்பட்டதெல்லாம் சமூக மாற்றம் மட்டும்தான். மக்களை நேசிக்கக்கூடிய பண்பை வளர்த்துக்கொண்டு, தகுதியுள்ள தலைவர்களாக அவர்களே வளரட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. சிலரது அரசியல் வேட்கைக்கு என்னைப் பயன்படுத்த நினைத்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அந்த ஆதங்கத்தில், எனக்கு எதிராகப் பேசுகிறார்கள். என் பெயரைப் பயன்படுத்தி நிதி கையாடல் செய்த ஒரு குழுவின் வேலைதான் இவையெல்லாம்” என்றார் கொதிப்புடன்.

ஓர் அமைப்பு, அரசியலுக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு அரசியலா?