Published:Updated:

ஐ.டி. அஸ்திரம் ரெடி: அ.தி.மு.க.-விடம் பி.ஜே.பி அதிரடியை துவங்குவதன் பின்னணி!

ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பில் திளைக்கும் சில அமைச்சர்களிடம் அதிரடி காட்டி, பி.ஜே.பி-யின் கிளீன் இமேஜைத் தக்கவைப்பதற்கான முயற்சியும் தொடங்கப்போகிறதாம்

கழுகார்
கழுகார்

அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமைக்குள் மோதல் இன்னும் கடுமையாகியிருக்கிறதாம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவருமே சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு பேசிக்கொள்வதுகூட இல்லையாம். போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது மட்டுமே ஒரு ரெடிமேட் புன்னகையை உதிர்க்கிறார்கள்.

வேலூர் தேர்தல் முடிவுக்காகத்தான் தமிழகத்தில் சில விஷயங்களில் எந்த ஒரு காய் நகர்த்தலையும் செய்யாமல் பி.ஜே.பி தலைமை தவிர்க்கிறது. இந்தத் தேர்தலில் முடிவு எப்படி வந்தாலும் உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும்கட்சியுடன் கூட்டணியில் தொடர்வதையே, பி.ஜே.பி-யின் சில தலைவர்கள் விரும்புகிறார்களாம். அதேசமயம், அ.தி.மு.க-வில் தற்போது நிலவும் தலைமைப் பதவிக்கான குழப்பத்துடன் 2021 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தால் மீண்டும் அடிவாங்க வேண்டியிருக்கும் என்றும் பி.ஜே.பி யோசிக்கிறது.

ஐ.டி. அஸ்திரம் ரெடி: அ.தி.மு.க.-விடம் பி.ஜே.பி அதிரடியை துவங்குவதன் பின்னணி!

அ.தி.மு.க-வுக்கு உறுதியான ஒற்றைத் தலைமையைக் கொண்டுவர வேண்டும் என்று அமித் ஷா அண்ட் கோ திட்டமிட்டிருக்கிறது என்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் சசிகலாவை முன்கூட்டியே வெளியில் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியை எடப்பாடி தரப்பு மேற்கொண்டிருக்கிறது.

பி.ஜே.பி.-யிடம் 'பிக் பிளான்' ஒன்றும் தயாராகியிருக்கிறதாம். பன்னீரை மட்டுமல்ல, பழனியையும்கூட கைவிட பி.ஜே.பி. ஒருபோதும் தயங்கமாட்டார்கள். அவர்களுடைய தேவை, தமிழ்நாடு தொடர்ந்து தங்களுடைய கைப்பிடியிலேயே இருக்கவேண்டும் என்பதுதான். அதற்குக் கரைச்சலில்லாத ஒரு தலைமையைத்தான் அவர்கள் சப்போர்ட் செய்வார்கள். அந்தத் தலைமை உள்ளே இருந்தும் வரலாம்... வெளியே இருந்தும் வரலாம். அதெல்லாம் 'ராஜ தர்பார்' ரகசியம்.

வேலூரில் வெற்றியைத் தீர்மானிப்பதில் வைட்டமின் 'ப' பங்கு மிகுதியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், வேலூர் தேர்தல் முடிவைப் பொறுத்தே, அ.தி.மு.க தலைமை குறித்து பி.ஜே.பி முக்கிய முடிவு எடுக்கும்' என்பது உறுதிபட தெரிகிறது.

தவிர, ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பில் திளைக்கும் சில அமைச்சர்களிடம் அதிரடி காட்டி, பி.ஜே.பி-யின் கிளீன் இமேஜைத் தக்கவைப்பதற்கான முயற்சியும் தொடங்கப்போகிறதாம்.

சமீபகாலமாக, அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி அதிக அளவு தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன. இனியும் வேடிக்கை பார்த்தால் நன்றாக இருக்காது என்ற முடிவுக்கு பி.ஜே.பி தலைமை வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

விதிக்கு முரணாக 3,000 ரூபாய் அதிகம் கொடுத்து, ஒரு டன் 43,000 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாம்.

ஜூலை 26-ம் தேதி வருமானவரித் துறை, சென்னை சூளைமேடு, ஸ்ரீபெரும்புதூர், ஆந்திரம் ஆகிய இடங்களில் உள்ள சக்தி ஸ்டீல் என்கிற நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்கள், ஆலை ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு 'செயில்' நிறுவனத்தின் விதிப்படிதான் இரும்பு முறுக்குக் கம்பிகளைக் கொள்முதல் செய்யவேண்டும். ஆனால், இந்த விதிக்கு முரணாக 3,000 ரூபாய் அதிகம் கொடுத்து, ஒரு டன் 43,000 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாம்.

சக்தி ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர், ஆளுங்கட்சி உச்சப்புள்ளியின் வாரிசுக்கு நெருக்கமானவராம். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்குத் தேவைப்படும் இரும்புக் கம்பிகளை வருடத்துக்கு ஒரு லட்சம் டன்னுக்கு அதிகமாக அந்த நிறுவனம் சப்ளை செய்திருக்கிறது. அதன் பின்னணியில்தான் இந்த ரெய்டு என்கிறார்கள்.

> இதுகுறித்து 'முறுக்குக் கம்பி டெண்டர்... முறுக்கிக்கொண்ட அமைச்சர்... உள்ளே புகுந்த ஐ.டி!' எனும் மிஸ்டர் கழுகு பகுதியில் விரிவாக வாசிக்கலாம். சந்தா விவரங்களுக்கு https://store.vikatan.com/