அலசல்
சமூகம்
Published:Updated:

பொது சிவில் சட்டம்... தி.மு.க அரசு ஏற்குமா, எதிர்க்குமா?

பொது சிவில் சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
பொது சிவில் சட்டம்

ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியாக சட்டங்கள் இருப்பதால், சமூகத்தில் ஒரு குழப்பமான நிலை இருக்கிறது. எனவேதான், பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது

அயோத்தியில் ராமர் கோயில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து என அடுத்தடுத்து அதிரடிகாட்டிய மத்திய பா.ஜ.க அரசு, இப்போது ‘பொது சிவில் சட்ட’த்தைக் கையிலெடுத்திருக்கிறது!

குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில், ‘பா.ஜ.க வெற்றிபெற்றால் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவோம்’ என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் முழங்கி வருகிறார்கள். இன்னொரு புறம், ‘பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்’ என்று தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. மத்திய அரசோ, பா.ஜ.க எம்.பி சுஷில் குமார் மோடி தலைமையில், மாநிலங்களவைக்குழு ஒன்றை அமைத்து பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசும், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணா தலைமையில், பொதுசிவில் சட்டம் குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதையடுத்து ‘பா.ஜ.க-வின் திட்டத்தை ஆராய திராவிட மாடல் ஆட்சியில் குழுவா?’ என்ற கேள்வியை ஆச்சர்யத்துடன் பலர் எழுப்பியிருக்கிறார்கள்.

பொது சிவில் சட்டம்... தி.மு.க அரசு ஏற்குமா, எதிர்க்குமா?
studiocasper

தனிச் சட்டங்கள்!

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவை அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பொதுவானவை. உரிமையியல் சட்டங்களில் 99 சதவிகிதம் அனைவருக்கும் பொதுவானவை. அதே நேரத்தில், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை ஆகியவை தொடர்பாக முஸ்லிம்களுக்குத் தனிச் சட்டங்கள் இருக்கின்றன. இதுபோல, இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினருக்கும் தனிச் சட்டங்கள் இருக்கின்றன.

‘பல்வேறு சாதி, மதங்கள், பலவிதமான கலாசாரங்கள், பண்பாடுகள்கொண்ட இந்தியாவில், பொது சிவில் சட்டம் கொண்டுவருவது ஏற்புடையதல்ல’ என்று இஸ்லாமிய அமைப்புகளும், இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

‘பொது சிவில் சட்டம் தேவை!’

“ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியாக சட்டங்கள் இருப்பதால், சமூகத்தில் ஒரு குழப்பமான நிலை இருக்கிறது. எனவேதான், பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது” என்கிறார், பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் குமரகுரு.

“தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் பொதுவானவையாக இருக்கும் போது, ‘சிவில் சட்டம்’ ஏன் பொதுவானதாக இருக்கக் கூடாது என்று பா.ஜ.க மட்டுமல்ல, நீதிமன்றங்களே கேட்கின்றன. ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியாகச் சட்டங்கள் இருக்க முடியாது. அதனால், பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே, பெண்ணுரிமையை நிலைநாட்டவும், சொத்துரிமையை அனைவருக்கும் உறுதி செய்யவும் ‘பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்’ என்கிறோம். பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரும். அதே நேரத்தில், அதை ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தின் தன்மைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும்” என்கிறார் குமரகுரு.

குமரகுரு, எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, எழிலரசன்
குமரகுரு, எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, எழிலரசன்

‘இந்துக்களையும் பாதிக்கும்!’

“பொது சிவில் சட்டம், முஸ்லிம்களை மட்டுமல்லாமல் இந்துக்களையும் பாதிக்கும்” என்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா.

“வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், ‘ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமர் கோயில்’ ஆகிய இரண்டையும் சொல்லி பா.ஜ.க-வால் வாக்கு கேட்க முடியாது. எனவே, மீதமிருக்கும் ‘பொது சிவில் சட்டம்’ என்ற மதவாத அஜண்டாவைக் கையிலெடுக்கிறார்கள். ஆனால், இந்தியா போன்ற பன்முகத்தன்மைகொண்ட ஒரு நாட்டில், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவது சரியல்ல, சாத்தியமானதும் அல்ல.

காரணம், ஒரு மதத்துக்குள்ளேயே பல பிரிவுகள் இருக்கின்றன. ஒரு சாதிக்குள் பல உள்சாதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறு திருமண முறைகளைப் பின்பற்றுகிறார்கள். அதை, பொது சிவில் சட்டம் கெடுத்துவிடும். முஸ்லிம்களைக் குறிவைத்து இதை பா.ஜ.க செய்கிறது என்று பலர் நினைத்தாலும், முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், இந்துக்களையும் இது பாதிக்கும்.

பொது சிவில் சட்டம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழு அமைத்திருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கும் மதிப்பளித்து பொது சிவில் சட்டம் தேவையில்லை என்ற பரிந்துரையை இந்தக் குழு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்த கமிட்டி மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்கிறார் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா.

‘சட்டப்படி எதிர்க்க வேண்டும்!’

இது குறித்து தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனிடம் பேசினோம். “பன்முகத்தன்மைகொண்ட நமது நாட்டில், ஒருமைத்தன்மையுடன்கூடிய பொது சிவில் சட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடியதா, இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு இது உகந்ததா என்பதை யெல்லாம் பார்க்க வேண்டும். எனவேதான், இது குறித்து ஆராய அரசியல் அனுபவமும் சட்ட நிபுணத்துவமும் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு நியமித்திருக்கிறது. ஒன்றை நாம் எதிர்த்தால், எதற்காக எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களையும், சட்டப்பூர்வ விளக்கங்களையும் முன்வைக்க வேண்டும். அதற்குத்தான் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்.

அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கை வெளிவந்தால்தான், இந்த விஷயத்தில் தி.மு.க-வின் உண்மையான நிலைப்பாடு தெரியும்!