Published:Updated:

``சொந்த வீட்டுல வாழ்ந்த நாங்க இப்போ அகதிகளாயிட்டோம்" - பட்டாசு வெடி விபத்தை விவரிக்கும் மக்கள்

வெடி விபத்து
News
வெடி விபத்து ( நா.ராஜமுருகன் )

"என்னோட குடிசை வீடு தரைமட்டதானதோடு, கூரையை மாத்தவும், என் பையன் வைத்தியச் செலவுக்கும் கடன் வாங்கி வைத்திருந்த ரூ. 30,000 பணமும் தீயில் கருகிப்போயிட்டு.”

Published:Updated:

``சொந்த வீட்டுல வாழ்ந்த நாங்க இப்போ அகதிகளாயிட்டோம்" - பட்டாசு வெடி விபத்தை விவரிக்கும் மக்கள்

"என்னோட குடிசை வீடு தரைமட்டதானதோடு, கூரையை மாத்தவும், என் பையன் வைத்தியச் செலவுக்கும் கடன் வாங்கி வைத்திருந்த ரூ. 30,000 பணமும் தீயில் கருகிப்போயிட்டு.”

வெடி விபத்து
News
வெடி விபத்து ( நா.ராஜமுருகன் )

"சந்தோஷத்துக்குதான் பட்டாசு வெடிப்பாங்க. ஆனா, எங்க பகுதியில் பட்டாசை குமிச்சு வச்சதால், சிலிண்டர் வெடித்த தீயில் பட்டாசு வெடிச்சதோடு, அக்கம்பக்கத்துல வசித்த எங்க வீடுகள், உடமைகளும் தீயோட தீயா கருகிப் போச்சு. இந்த பகுதி மக்களே துக்கத்தில் விம்மி வெடிக்கிறோம் சாமீ..." என்று இழப்பின் வலியோடு பேசுகிறார்கள், மோகனூர் பகுதி மக்கள். மோகனூரில் ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தின் தாக்கம் இன்னமும் அவர்களிடம் குறையவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள்
மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள்
நா.ராஜமுருகன்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த தில்லைக்குமார் என்ற இளைஞர், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை கடையை நடத்தி வருகிறார். குமரிபாளையம் பகுதியில் பட்டாசு குடோனை வைத்திருந்தாலும், நியூ இயர் கொண்டாடுபவர்களுக்கு பட்டாசை விற்பனை செய்வதற்காக தனது வீட்டின் முன்பு உள்ள கீத்துக்கொட்டகையில் அதிக அளவு பட்டாசை குமித்து வைத்திருக்கிறார். அதோடு, அவரின் இரண்டு வீடுகளிலும் பட்டாசை நிறைத்து வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 31 - ம் தேதி அதிகாலையில் தனது ஓட்டு வீட்டில் மனைவி பிரியங்கா, தாய் செல்வி, மகளோடு உறங்கியிருக்கிறார்.

தில்லைக்குமார், பிரியங்கா
தில்லைக்குமார், பிரியங்கா
நா.ராஜமுருகன்

அப்போது, அவர் வீட்டுக்கு எதிரே உள்ள கூரை வீட்டில் வசித்த பழனியம்மாள் என்பவர் கொசுவை விரட்டுவதற்காக போட்ட புகைமூட்டத்தின் தீபொறிகள், ஃபேன் காற்று மூலம் பரவி கூரையில் பற்றியிருக்கிறது. இதனால், வீடு எரிந்ததோடு, அவர் வீட்டில் இருந்த சிலிண்டரும் வெடிக்க, பட்டாசு குடோனில் தீப்பட்டு, தொடர்ச்சியாக பட்டாசு வெடிக்க தொடங்கியிருக்கிறது.

நாம் அங்கு சென்றபோது, அந்தப் பகுதியே தீக்கிரையாகியிருந்தது. ஒரு கார் உருக்குலைந்து, எலும்புகூடாக காட்சியளித்தது. இந்த கோர விபத்தில் தனது தாய் பெரியக்காளை இழந்த துயரத்தில் இருந்த அவரது மகன் அருள்குமார்,

அருள்குமார்
அருள்குமார்
நா.ராஜமுருகன்

"எங்க வீடு ஓட்டு வீடு. பழனியம்மாள் வீட்டுக்கு பக்கத்து வீடு எங்களோடது. அம்மா மட்டும் இங்க வசித்தார்கள். நான், மனைவி, குழந்தையோட வேற வீட்டில் இருக்கிறேன். பழனியம்மாள் வீடு தீப்பிடிச்சு எரிஞ்சதால், பட்டாசு வெடித்த சத்தம் கேட்டு எங்கம்மா வெளியே வந்திருக்காங்க. வெளியே தீப்பிழம்பா தெரியவும் தப்பிக்க ஓடியிருக்காங்க. ஆனா, பழனியம்மாள் வீட்டுக்குள் இருந்த பறந்து வந்த சிலிண்டர், எங்கம்மாவை தூக்கி சுவத்துல அடிச்சுட்டு. தீயில கருகி உயிரிழந்துட்டார். எங்க வீட்டோட எல்லா ஓடுகளும் சரிஞ்சுப் போச்சு. பட்டாசு இல்லன்னா, இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டிருக்காது. எங்க அம்மா இழப்பை எப்படி தாங்குவேன், வீட்டை எப்படி சரிப்பண்ணுவேன்?" என்று மருகினார்.

அடுத்து பேசிய, விஜயா என்பவர், "பழனியம்மாள் எனக்கு சித்திதான். வீடு பத்திக்கிட்டதும், அவர் வெளியே வந்து, பட்டியில் இருந்த ஆடுகளை காப்பாத்த அவற்றை அவிழ்த்து, ஓட்டிக்கிட்டுப் போயிருக்கிறார். ஆனால், படுகாயமடைஞ்சுட்டார். நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவரை, சீரியஸா இருப்பதால் சேலத்துக்கு மாத்தியிருக்காங்க.

விஜயா
விஜயா
நா.ராஜமுருகன்

பட்டியில் இருந்த 4 ஆடுகள் மேல சிலிண்டர் மோதி, பெரியக்காள் வீட்டு சுவர்ல நாலு ஆடுகளும் மோதி, ரத்தக்களறியா செத்துப்போச்சுங்க. வீடு தரைமட்டமா ஆச்சு. எங்க வீட்டைப்போல இன்னும் நாலு பேர்களோட வீடுகளும் இடிஞ்சுபோச்சு. இப்படி ஒரு விபத்தை இதுக்கு முன்னாடி பார்த்ததில்லை" என்றார் கண்களில் இருக்கும் அதிர்ச்சி விலகாமல்!.

தில்லைக்குமார் வீட்டுக்கு இடதுபுறம் உள்ள வீட்டைச் சேர்ந்த ஜெயா என்ற பெண்மணி, "நானும், என் பையனும் வீட்டுக்குள் படுத்திருந்தோம். பயங்கரமா சத்தம் கேட்கவும், எழுந்தோம். அப்போ எங்க ஓட்டு வீட்டோட கூரை உடைஞ்சு சரிஞ்சுச்சு. என்ன நடக்குதுன்னே புரியாம உயிரை, கையில் புடிச்சுட்டு வெளியே வந்தோம். வீட்டுக்கு வெளியில் போட்டிருந்த கீத்துக்கொட்டகையும், சைடுல போட்டிருந்த அட்டை வீடும் தீப்பிடிச்சு எரிஞ்சுச்சு. அங்க நிக்காம ஒரே ஓட்டமா, சொசைட்டிக்கு ஓடிப்போயிட்டோம். எங்க வீட்டுல இருந்த சிலிண்டர் வெடிச்சு பறந்துப்போச்சு. அப்புறம்தான், விபத்து பத்தி தெரியவந்தது.

ஜெயா
ஜெயா

அதிகாலையில் 3 மணிக்கு வெடிக்க ஆரம்பித்த பட்டாசுகள், 6 மணி வரைக்கும் ஓயாம வெடிச்சுக்கிட்டே இருந்தது. செல்போன், டி.வி, வண்டி, சாமான்கள், பணம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள்னு சகலமும் எரிந்து நாசமாகிவிட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து கணக்கெடுத்துட்டுப்போயிருக்காங்க. எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை அரசாங்கம் தரணும். இரண்டு நாள் ஆகியும் அந்த விபத்து ஏற்படுத்திய படபடப்பு இன்னும் அடங்கலை தம்பி" என்றார்.

அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர், "தில்லைக்குமார் வீட்டுக்கு பின்னாடி உள்ள வீடுதான் என்னுடையது. தூக்கத்தில் இருந்த நான், பயங்கர சத்தத்தை கேட்டு எழுந்தேன். வீடு தீப்பிடிச்சு எரிந்ததைப் பார்த்ததும், என் வீட்டு மோட்டாரைப் போட்டு அதன் மூலம் அந்த தீயை அணைக்கப் பார்த்தேன். ஆனால், அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து, தீ இன்னும் பல வீடுகளுக்கு பரவவும் மோட்டாரை ஆஃப் பண்ணிட்டு, பாதுகாப்பான இடத்துக்கு ஓடிட்டேன். பழனியம்மாள் வீடு எரிந்ததும், வெளியில் வந்து பார்த்த தில்லைக்குமார் தனது மகளை வேலைக்காரர் மூலமா வெளியே அனுப்பிவிட்டு, வீட்டுல இருந்த சிலிண்டரை தூக்கி அப்புற்பபடுத்த முயன்றிருக்கிறார். அப்போ அந்த சிலிண்டர் வெடித்து, 50 அடிக்கு தூக்கிப் வீசப்பட்டார். அவர் வீடு இடிந்து விழுந்ததில் சிக்கி அவரது மனைவி பிரியங்காவும், தாய் செல்வியும் இறந்துபோயிட்டாங்க. தில்லைகுமார்கிட்ட, 'வீட்டுக்கு முன்னாடி பட்டாசை வைக்காதீங்க'னு பலமுறை சொன்னோம். ஆனா அவர், 'கொட்டகைக்குள்ள பட்டாசு இல்லை. புது வீடு கட்டுறதுக்கு உண்டான சிமெண்ட் மூட்டைகள்தான் இருக்கு'னு சொல்லி மழுப்பினார். ஆனால், கடைசியில் அந்த பட்டாசுகளே, அவரது குடும்பத்தை காவு வாங்கிட்டு.

விஜயகுமார்
விஜயகுமார்

அதேபோல், மொத்தம் வெடித்த ஆறு சிலிண்டர்கள்ல ஒண்ணு போய் செந்தில்குமார்ங்கிறவரோட அட்டை வீட்டுல விழுந்து, அந்த வீடு எரிஞ்சுப்போச்சு. உள்ளார படுத்திருந்த செந்தில்குமாரோட இடதுகண்ணுல ஏதோ குத்தி, அவருக்கு கண்பார்வை போயிட்டு. கோவையில ஒரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். கூலி வேலை பாக்குற அவரோட வாழ்க்கையையே கேள்விக்குறியாயிட்டு. இதைத்தவிர, தனது வீட்டுல இருந்தவர்களை வெளியே கொண்டுவர முயன்ற அன்பரசனுக்கும், அதிகாலையில் சிந்தட்டிக் டேங்கில் குளிக்க வந்து இந்த சம்பவத்தைப் பார்த்து பலரையும் காப்பாற்ற முயன்ற வழகக்கறிஞர் கார்த்திகேயனுக்கும் பயங்கரமா அடிப்பட்டிருக்கு. நாமக்கல்ல அவங்க சிகிச்சை பெற்றுட்டுட்டு வர்றாங்க. அன்பரசனுக்கு இரண்டு காதுகளும் கேட்கலையாம். மின்சாரத்தை உடனே நிறுத்திட்டாங்க. இல்லைன்னா, அதன்மூலமா இந்த விபத்து இன்னும் பெரிதாகியிருக்கும்" என்றார்.

மாரியாயி என்பவர், "என்னோட குடிசை வீடு தரைமட்டதானதோடு, கூரையை மாத்தவும், என் பையன் வைத்தியச் செலவுக்கும் கடன் வாங்கி வைத்திருந்த ரூ. 30,000 பணமும் தீயில் கருகிப்போயிட்டு. அதேபோல், அஞ்சு பவுன் செயினும், ஒரு பவுன் தோடும் உருகி, தடம் தெரியாம போயிட்டு. எப்படி எல்லாதையும் மீட்பேன். அரசுதான் எங்களுக்கு உதவணும்.

மாரியாயி
மாரியாயி
நா.ராஜமுருகன்

பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்குள்ள மண்டபத்துல சாப்பாடு போட்டு, அங்கேயே தங்கிக்க வழிபண்ணியிருக்காங்க. சொந்த வீட்டுல இருந்த நாங்க, இந்த விபத்தால இப்போ அகதியா வாழுறோம்" என்றார் வேதனையை மென்று விழுங்கியபடி!.