சமூகம்
Published:Updated:

கொரோனா... அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா

இனிமேல் கொரோனா விடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது நமது தனிப்பட்ட கடமை என்று, ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

‘கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள்’ என்று சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறியபோது தேசமே பதறியது.

‘கொரோனாவோடு வாழப் பழகிக்கொண்டோம். அதனால், மாநிலம் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறோம்’ என்று சொல்லி யிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் கொரோனாவுடன் வாழத் தயாராகிவிட்டன என்றுதான் தோன்றுகிறது. கொரோனாவுடன் வாழ்வது சாத்தியமா? அடுத்து நாம் என்ன செய்யவேண்டும்?

வைராலஜிஸ்ட் டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மாவிடம் பேசினோம். ‘‘மே 13-ம் தேதியுடன் 50 நாள்கள் ஊரடங்கைக் கடந்துவிட்டோம். கொரோனா என்றால் என்ன, அறிகுறிகள் தோன்றினால் என்ன செய்ய வேண்டும், அதிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் பொதுமக்களுக்கு நன்றாகத் தெரிந்து விட்டன. இனிமேல் கொரோனா விடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது நமது தனிப்பட்ட கடமை என்று, ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

ஜெயஸ்ரீ ஷர்மா -  சுதா சேஷய்யன்
ஜெயஸ்ரீ ஷர்மா - சுதா சேஷய்யன்

பல நாள்களுக்கு முன்பே நாம் உச்சபட்ச தீவிரத்துக்கு (Peak level) சென்றிருப்போம். ஆனால், விரைவில் ஊரடங்கை அமல்படுத்தியதால் அதைத் தடுத்தோம். தற்போது உச்சபட்ச நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணித்தால், இந்த உச்சபட்ச நிலையின் தீவிரத்திலிருந்து தப்பித்து விட முடியும். எவ்வளவுதான் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் நோய்ப்பரவலுக்கு வாய்ப்புள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொதுப்போக்குவரத்துகள் தொடங்கப்படாத வரை நிலைமை கட்டுக்குள் இருக்கும். பொதுப்போக்குவரத்தைத் தொடங்கினால் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால், இந்த விஷயத்தில் அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மேலும், வெளிமாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு வரவிருப்போரிடமிருந்தும் நோய்ப் பரவல் ஏற்பட சாத்தியமுள்ளது. எனவே, அதையும் அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அதேபோல், கோயம்பேடு போன்ற அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஊரடங்கை இவ்வளவு நாள்கள் கடைப்பிடித்ததே மிகப்பெரிய விஷயம். இது ஊரடங்கிலிருந்து வெளியேற வேண்டிய நேரம்தான். ஆனால், ஒட்டுமொத்தமாக அல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற வேண்டும்’’ என்றார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்,

‘‘ஊரடங்கு தளர்த்தப்பட்டது என்றால், கட்டுப்பாடுகள் மொத்தமாக விலகிவிட வேண்டும் என்பது பொருளல்ல. தேசிய அளவிலோ மாநில அளவிலோ அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக நிறுத்திவிட முடியாது.
கொரோனா... அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆனால், மக்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். ஊரடங்கு தளர்த்தப்படும் அல்லது நீக்கப்படும் அடுத்த நாளே, ‘பை பை’ சொல்லிவிட்டு வைரஸ் போய்விடாது. இந்த வைரஸ், இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் தலையைக் காட்டும் என்று சில ஆய்வாளர்களும், இருபது முதல் முப்பது ஆண்டுகளுக்காவது தொடரும் என்று சிலரும் நம்புகின்றனர். ஆகவே, கொரோனாவோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும்’’ என்றவர், அதற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகளையும் விளக்கினார்.

* கொரோனா என்பது, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ். ஆகையால், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். வழிபாட்டுத்தலங்கள், கல்யாணம், பார்ட்டி, பிக்னிக் போன்ற கூட்டம் சேரக்கூடிய இடங்களுக்கு கண்டிப்பாகப் போகக் கூடாது.

* முகக்கவசம் அணிவதையும் அடிக்கடி கைகளை சோப் போட்டுக் கழுவுவதையும் அன்றாட பழக்கவழக்கங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

* முகத்தை அடிக்கடி தொடும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

* உடற்பயிற்சி, யோகா, தியானம், இசை என உங்களுக்குப் பிடித்த விஷங்களைச் செய்து, கவலைகளைத் தூக்கியெறிய வேண்டும். நிம்மதியான உறக்கம் தேவை. இவை நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்க உதவும்.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். சூரிய வெளிச்சம், காற்றோட்டம் இவையெல்லாம் நம்மைப் பாதுகாக்கும்.

* வைரஸுக்கான மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிப்பதற்கு ஓர் ஆண்டுக்கும்மேல் ஆகக்கூடும். அப்படியே மருந்து புழக்கத்துக்கு வந்தாலும், எல்லோருக்கும் கிடைக்கும்படியாகவோ பயன்தரும் படியாகவோ விலை குறைவாகவோ இருக்குமா என இப்போது சொல்ல முடியாது. எனவே, கட்டுப்பாடுகளே இப்போதைக்கு நம்மைப் பாதுகாக்கும் ஆயுதம். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் நாம் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொள்ளக் கூடாது’’

- சுதா சேஷய்யன் சொல்லும் விஷயங்களைக் கடைப்பிடித்தால், கொரோனாவோடு வாழப் பழகிக்கொள்வது அவ்வளவு சிரமமாக இருக்காது!