Published:Updated:

மோடி பஞ்சாப் விசிட்: கார் மறிப்பு சம்பவமும், அரசியல் கட்சிகளின் கருத்து மோதல்களும்! - ஓர் பார்வை

பஞ்சாப் மோடி
News
பஞ்சாப் மோடி

`பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பெரோஸ்பூர் பொதுக்கூட்டத்தில் 70,000 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால், வெறும் 700 பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர்' - பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் மாநிலம் விரைவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. அதனால், அங்குபல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. விவசாயிகளின் ஓராண்டு தொடர்போராட்டத்தால் மூன்று விவசாய சட்டங்களும் மத்திய பாஜக அரசால் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற உத்வேகத்தில் ஆம் ஆத்மி கட்சி இருக்கிறது. காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கவிருக்கிறார். காங்கிரஸ் இந்தமுறையும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டாலும், விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் செய்துகொண்டாலும், விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் இன்னமும் மத்திய அரசால் நிறைவேற்றப்படவில்லை. மேலும், போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்த்தியாகம், உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் விவசாயிகள் பேரணியில் பாஜக மத்திய இணை அமைச்சர் மகன் அஜய் மிஸ்ராவின் கார்மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம், கண்ணீர் புகைகுண்டுகள், தடியடிகள், டிராக்டர்கள் வராதபடி சாலைகளில் இரும்புக்கம்பிகள் பதித்தது, முள்கம்பி வேலிகள் சுற்றப்பட்ட பேரிகாட் என ஓராண்டுகளில் மத்திய அரசால் விவசாயிகள் எதிர்கொண்ட அழுத்தங்கள் அனைத்தும் அவ்வளவு எளிதில் விவசாயிகள் மனதிலிருந்து அகன்றுவிடவில்லை. இதை உறுதிப்படுத்தும்படியான சம்பவம்தான் நேற்று பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பஞ்சாப் மாநிலத்தேர்தலை கருத்தில்கொண்டு, ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வது, அதில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, ஹுசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வது பிற கட்சிசார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பல்வேறு திட்டமிடல்களுடன் பிரதமர் மோடி நேற்றையதினம் பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றார்.

மோடி
மோடி

அதன்பிறகு நடந்த சம்பவங்கள்தான் தற்போது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது? மத்திய உள்துறை அமைச்சகம் என்ன சொல்கிறது? பாஜக என்ன சொல்கிறது, மாநில காங்கிரஸ் சொல்கிறது என்பதை முழுத் தொகுப்பாக பார்க்கலாம்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை:

``பிரதமர் நரேந்திர மோடி (05-01-2022) காலை விமானம்மூலமாக பதிண்டாவுக்கு வந்திறங்கினார். பின்னர், ஹெலிகாப்டர் மூலமாக ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மழை மற்றும் மோசமான வானிலை இருந்ததால் சீரடைவதற்காக சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் காத்திருந்தார்.

மோடி, பஞ்சாப் விவசாயிகள்
மோடி, பஞ்சாப் விவசாயிகள்

ஆனால், வானிலை சீரடையாததால் சாலை வழியாக தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்வதாக முடிவு மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு 2 மணி நேரம் கூடுதலாக தேவைப்படும் என்பதால், பஞ்சாப் காவல் துறையின் தலைமை இயக்குனரிடமிருந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டபின் சாலை வழியாக பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு முன்னால் பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மேம்பாலத்தில் சுமார் 15-20 நிமிடங்கள் பிரதமர் காக்க வைக்கப்பட்டிருந்தார். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடாக இது அமைந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமரின் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளின்படி போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அவசர காலத்திற்கான திட்டம் தயார் நிலையில் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்திருக்க வேண்டும். மேலும் அவசர கால திட்டத்தை கணக்கில் கொண்டு பஞ்சாப் அரசு சாலை வழியாக செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

மோடி
மோடி

இந்தப் பாதுகாப்பு குறைப்பாட்டுக்கு பின் பதிந்தா விமான நிலையத்திற்கு திரும்பவும் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த கடுமையான பாதுகாப்பு விதிமீறலை கவனத்தில் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடமிருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது. இந்த குறைபாட்டுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை தீர்மானித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.'' என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாப் விவசாயிகள்
பஞ்சாப் விவசாயிகள்

நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, பாதிவழியிலேயே பதிண்டா விமான நிலையத்துக்கு திரும்பிச்சென்ற மோடி, ``நான் பதிண்டா விமானம் நிலையம் வரை உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதல்வரிடம் நன்றி சொன்னேன் என்று கூறுங்கள்" என ஆத்திரமாக கூறிவிட்டு புறப்பட்டுச்சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆளும் பாஜகவினரின் கேள்விகளையும், கருத்துகளையும் அதற்கு காங்கிரஸ் அளித்த பதில்கள், மாறுபட்ட விளக்கங்களையும் சற்று பார்ப்போம்.

`காங்கிரஸ் மன்னிப்பு கேட்கவேண்டும்'

உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், `` பஞ்சாபில் காங்கிரஸ் நிகழ்த்திய சம்பவம், அந்தக் கட்சி எப்படிச் சிந்திக்கிறது, செயல்படுகிறது என்பதற்கான டிரெய்லர். மக்களால் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுவதால் அது அவர்களை பைத்தியக்காரத்தனத்தின் பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்த சம்பவத்திற்காக காங்கிரஸ் தலைவர்கள் இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என கூறியிருக்கிறார்.

அமித்ஷா
அமித்ஷா

`இது தற்செயல் அல்ல, சதி!'

அதேபோல, பா.ஜ.க மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ``காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இன்று அவர்கள் நாட்டின் பிரதமருக்கு தீங்கு விளைவிக்க முயற்சித்திருக்கின்றனர். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பிரதமருக்கு காயம் ஏற்படுத்தக்கூடும் என்பது தெரிந்தும் மாநில அரசு அத்தகையை சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. பிரதமர் செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் எப்படி வந்தார்கள்? பிரதமரின் பாதை பற்றிய தகவலை வழங்கியவர் யார்? இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. இது ஒரு சதி. பஞ்சாப் போலீசார் எதையும் தடுக்காமல், அமைதியாக பார்வையாளர்களாக மட்டுமே இருந்திருக்கின்றனர்" என குற்றம் சுமத்தினார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

`திறமையற்ற காங்கிரஸ்'

அதேபோல, தமிழக முன்னாள் பா.ஜ.க தலைவரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன், ``பஞ்சாப் மாநிலத்துக்கான ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கு பாரத பிரதமரின் வருகை சீர்குலைந்தது வருத்தமளிக்கிறது. பஞ்சாபில் திறமையற்ற காங்கிரஸ் அரசியல் நிர்வாகத்தை வரலாறு மன்னிக்காது!" என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

பாஜக தரப்பினர் ஒரே அணியில் நின்று, `சாலையை மறித்த விவசாயிகள் போராட்டமும், மிக முக்கியமாக பஞ்சாப் அரசின் பாதுகாப்பு குறைபாடு' என்றும் குற்றம் சுமத்தியிருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் தரப்போ இதற்கு எதிர்மாறான கருத்தை தெரிவித்திருக்கிறது.

சரண்ஜித் சிங் சன்னி - பஞ்சாப் முதல்வர்
சரண்ஜித் சிங் சன்னி - பஞ்சாப் முதல்வர்

`பாதுகாப்பில் குளறுபடி இல்லை'

பாஜக விமர்சனத்தை மறுத்துப்பேசிய பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ``பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி எதுவும் இல்லை. பிரதமர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் மேற்பார்வையிட்டேன். நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லும் திட்டம்தான் முதலில் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் அவர் சாலை வழியாக செல்ல இருப்பதாக திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. எனவே, இந்த விஷயத்தில் பா.ஜ.க அரசியல் செய்யக் கூடாது" என கேட்டுக்கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் காலி சேர்கள்
பொதுக்கூட்டத்தில் காலி சேர்கள்

'காலி சேர்கள் தான் காரணம்'

மேலும், ``பிரதமர் கலந்து கொள்ளும் ஃபெரோஸ்பூர் பொதுக்கூட்டத்தில் 70,000 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால், வெறும் 700 பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர். எனவே, அதிருப்தி அடைந்த பிரதமர் பயணத்தை ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. பிரதமரைக் காக்க எனது உயிரையும் கொடுத்திருப்பேன். ஆனால், அவருக்கு அப்படி எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை!" என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சர் ராஜ்குமார் வெர்கா
பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சர் ராஜ்குமார் வெர்கா

அதேபோல பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சர் ராஜ்குமார் வெர்கா,``பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு அம்சங்களில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. இவ்வாறு குற்றம் சாட்டுவது அடிப்படை ஆதாரமற்றது. உண்மை என்னவெனில், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் தோல்வியடைந்துள்ளது. இதை அறிந்துகொண்ட பிரதமர் திரும்பி சென்றுவிட்டார்” என கருத்துதெரிவித்திருக்கிறார்.

ஜோதிமணி
ஜோதிமணி
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்.பி. ஜோதிமணி, ``பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயணத்திட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலமைச்சரே நள்ளிரவுவரை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கவனித்துள்ளார். இடையில் பயணத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் கூட்டத்தில் காலி நாற்காலிகள் மட்டும் கிடந்ததால் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பயணத்திட்டம் மாற்றப்பட்டதற்கும், காலி நாற்காலிகளுக்கும் பஞ்சாப் முதலமைச்சர் எப்படி பொறுப்பேற்கமுடியும்?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பா.ஜ.க கூட்டத்திற்கு ஆட்கள் வராதகாரணத்தால் பிரதமர் திரும்பி சென்றுவிட்டு, பாதுகாப்பு குறைபாடு என்று சொல்லுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது" என விமர்சனம் செய்திருக்கிறது.

விவசாயிகள் தரப்பினரும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜகவினரை தடுக்கவே போராட்டம் நடத்தியதாகவும், பிரதமர் சாலைவழியாக வந்தது தங்களுக்குத் தெரியாது என்றும் விளக்கமளித்திருக்கின்றனர்.