Published:Updated:

``மோடி அரசைக் கண்டு அஞ்சும் பயங்கரவாதிகள்” - காஷ்மீரின் நிலைமை என்ன?

காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள்
News
காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள்

மோடி அரசைக் கண்டு பயங்கரவாதிகள் அஞ்சுகிறார்கள் என்று பெருமையுடன் கூறுகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ஆனால், பாகிஸ்தான் மண்ணிலிருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதாகத் தற்போது வந்துகொண்டிருக்கும் செய்திகள் அச்சமூட்டுகின்றன.

``மோடி அரசைக் கண்டு அஞ்சும் பயங்கரவாதிகள்” - காஷ்மீரின் நிலைமை என்ன?

மோடி அரசைக் கண்டு பயங்கரவாதிகள் அஞ்சுகிறார்கள் என்று பெருமையுடன் கூறுகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ஆனால், பாகிஸ்தான் மண்ணிலிருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதாகத் தற்போது வந்துகொண்டிருக்கும் செய்திகள் அச்சமூட்டுகின்றன.

Published:Updated:
காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள்
News
காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள்

குஜராத்தில் பா.ஜ.க-வின் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் கடந்த வாரம் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``மத்தியில் இருக்கும் மோடி அரசைக் கண்டு பயங்கரவாதிகள் பயப்படுகிறார்கள். 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி வந்ததிலிருந்து பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் எதுவும் இந்தியாவில் நிகழவில்லை. இது சாதாரண விஷயம் அல்ல. இது நம்முடைய மிகப்பெரிய சாதனை” என்று குறிப்பிட்டார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

`நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை’ என்று கூறிய அதேவேளையில், `ஜம்மு காஷ்மீர் தவிர்த்து...’ என்பதைக் குறிப்பிட அமைச்சர் ராஜ்நாத் சிங் தவறவில்லை. உண்மைதான். மோடி பிரதமராக வந்த பிறகு இந்தியாவில் பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல்கள், `காஷ்மீர் தவிர்த்து’, வேறு இடங்களில் நிகழவில்லை. `காஷ்மீர் தவிர்த்து’ என்று யாரும் எளிதாகக் கடந்துவிட முடியாது. ஜம்மு காஷ்மீர் எவ்வளவு பெரிய பிரச்னை?! ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு, காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதாகத் தற்போது வந்துகொண்டிருக்கும் செய்திகளை எளிதாகக் கடந்துவிட முடியுமா என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஆட்சியதிகாரத்தைத் தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்து, ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, அல்கொய்தா உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புகள் ஊக்கம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் இந்த அமைப்புகள், ஏற்கெனவே இந்திய மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கின்றன. தற்போது, இந்த அமைப்புகளின் முக்கிய இலக்காக காஷ்மீர் மாறியிருக்கிறது.

காஷ்மீர்
காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370, மத்திய பா.ஜ.க அரசால் 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி திடீரென்று நீக்கப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உட்பட அந்த மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை வீட்டுச்சிறையில் அடைத்துவிட்டுத்தான், பிரிவு 370-ஐ நீக்கும் நடவடிக்கையை பா.ஜ.க அரசு மேற்கொண்டது. சில மாதங்களில் பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், இன்றைக்கும் இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

பிரிவு 370 நீக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், காஷ்மீரில் அமைதி நிலவுவதாக மத்திய பா.ஜ.க அரசு கூறிவருகிறது. அங்கு, பெரிய அளவிலான அசம்பாவிதங்களோ, பயங்கரவாதத் தாக்குதல்களோ கடந்த இரண்டு ஆண்டுகளில் நடக்கவில்லை என்பதைவைத்து மத்திய அரசு இப்படிக் கூறிவருகிறது. ஜம்மு காஷ்மீரில் முன்பைக்காட்டிலும் பல மடங்கு பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் வலம் வருகிறார்கள். எனவேதான், `துப்பாக்கிமுனையில் நிறுவப்பட்ட அமைதி’ என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான இளைஞர்கள், பயங்கரவாத இயக்கங்களை நோக்கித் திரும்பியிருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில்தான், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிகழ்வுகள், காஷ்மீர் குறித்த கவலையை அதிகரிக்கச் செய்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவும் போக்கு குறைந்தது. ஒரு கட்டத்தில் ஊடுருவல் நின்றுவிட்டதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், கடந்த ஒரு மாதத்தில், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும், பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவும் போக்கு அதிகரித்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பது, காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது நல்ல அறிகுறி அல்ல.

காஷ்மீர்
காஷ்மீர்

தாலிபன்களின் ஆட்சியில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்று இந்தியா கூறிவருகிறது. ஆனால், காஷ்மீர் உட்பட உலகின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கத் தங்களுக்கு உரிமை இருப்பதாக, தாலிபன்கள் கூறுகிறார்கள். அதேநேரத்தில், குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராகப் போர் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், தாலிபன்களுக்கு ஆதரவு அளிக்கும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீர் பகுதியில் அமைதியைச் சீர்குலைக்க வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. லஷ்கர் இ தொய்பா - தாலிபன் தலைவர்கள் இடையே சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, காஷ்மீரில் தங்கள் செயல்பாடுகளுக்கு தாலிபன்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று லஷ்கர் இ தொய்பா தலைவர் நேரடியாகவே கேட்டிருக்கிறார்.

காஷ்மீர்
காஷ்மீர்

பாரமுல்லா, பந்திப்போரா, குப்வாரா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகளைக் காட்டிலும் வெளியிலிருந்து வந்திருக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகப் பாதுகாப்பு அமைப்புகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தெற்கு காஷ்மீரைக் காட்டிலும் வடக்கு காஷ்மீரில் முதன்முறையாக பயங்கரவாதிகளின் செயல்பாடு தற்போது அதிகரித்துள்ளது. காஷ்மீரிலிருந்து வரும் எந்தச் செய்தியும் நல்ல செய்தியாகத் தெரியவில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டிய நேரம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism