Published:Updated:

அமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா? #DoubtOfCommonMan

 Keezhadi
News
Keezhadi

ஆரம்பத்தில் மத்திய தொல்லியல் துறையும், தற்போது மாநிலத் தொல்லியல் துறையும் கீழடியில் ஐந்தாம்கட்ட அகழாய்வுப் பணியை நடத்திக்கொண்டிருக்கும் இன்றைய நாள்வரை தோண்டத் தோண்ட விதவிதமான அரிய பொருள்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

Published:Updated:

அமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா? #DoubtOfCommonMan

ஆரம்பத்தில் மத்திய தொல்லியல் துறையும், தற்போது மாநிலத் தொல்லியல் துறையும் கீழடியில் ஐந்தாம்கட்ட அகழாய்வுப் பணியை நடத்திக்கொண்டிருக்கும் இன்றைய நாள்வரை தோண்டத் தோண்ட விதவிதமான அரிய பொருள்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

 Keezhadi
News
Keezhadi

கல்வெட்டுகளும், எண்ணற்ற ஓலைச்சுவடிகளும், அரண்மனைகளும், கோயில்களும், கோட்டை கொத்தளங்களும் தமிழரின் தொன்மைக்கு ஆதாரமாக இருந்தும் மூவேந்தர், சங்க காலம் என்றெல்லாம் கற்பனையில் அடித்துவிடுகிறார்கள் என்று தமிழர்களைப் பற்றி, தமிழகத்தில் இருந்துகொண்டே சிலர் ஏளனமாக பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழர்களை, `வேறொரு நாகரிகத்தின் கலப்பு’ என்றும் சிலர் புதிய கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்படி ஏட்டிலும் கல்வெட்டிலும் ஆவணமாக இருந்த தமிழர்களின் பெருமை, கீழடி அகழாய்வில் நேரில் கண்ட பிறகுதான் தமிழனுக்கென்று தனி வரலாறு உண்டு; தொன்மையான நாகரிகத்தைக்கொண்டவன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஆம், உலகமே வியக்கும் வகையில் பல ஆச்சர்யங்களை வெளிக்கொண்டு வந்தது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடி.

 Keezhadi
Keezhadi

ஆரம்பத்தில் மத்திய தொல்லியல்துறையும், தற்போது மாநிலத் தொல்லியல்துறையும், கீழடியில் ஐந்தாம்கட்ட அகழாய்வுப் பணியை நடத்திக்கொண்டிருக்கும் இன்றைய நாள்வரை தோண்டத் தோண்ட விதவிதமான அரிய பொருள்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் தமிழரின் தனித்தன்மையை பறைசாற்றுகின்றன. `கீழடியியில் தொடங்கி வைகை நதி கடலில் சேரும் ராமநாதபுரம் ஆற்றங்கரைவரை தமிழர் நகர நாகரிகத்தின் அடையாளங்கள் இருக்கும்’ என்று சொல்கிறார்கள். இன்று உலகத் தமிழர்களால், தமிழர் நாகரிகத்தின் தாய் மடியாக கீழடி பார்க்கப்பட்டுவருகிறது.

அதேநேரம், `கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்’ என்று அரசுத் தரப்பில் முன்பு சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான வேலைகள் நடக்கின்றனவா என்பது பலருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில், `கீழடியில் கள அருங்காட்சியம் அமைப்பதாகச் சொன்ன அமைச்சர் பாண்டியராஜனின் அறிவிப்பு எந்த நிலையில் உள்ளது?" என்ற கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருக்கிறார் முத்துக்குமார் இருளப்பன் என்ற வாசகர்.

இந்தக் கேள்விக்கு விடை தேடினோம்.

கீழடியில் மத்திய தொல்லியல்துறை மூன்றுகட்ட ஆய்வை முடித்த நிலையில், மாநில தொல்லியல்துறை ஐந்தாவதுகட்ட ஆய்வை கீழடி அருகில் கொந்தகையில் தற்போது நடத்திவருகிறது.

இதுவரை நடந்த ஆய்வுகள் பற்றி நம்மிடம் பேசிய தொல்லியல்துறைப் பணியாளர் ஒருவர், "ஐந்தாம்கட்ட ஆய்வுப்பணி தொடங்கிய சில நாள்களிலேயே இரட்டைச்சுவர், உறைகிணறு, மணிமாலைகள், சுட்ட மண்ணால் செய்யப்பட்ட குவளைகள் எனப் பல்வேறு அரிய பொருள்கள் என்று தொடர்ந்து கிடைத்துவருகின்றன. இவற்றின் வயதை அறிந்துகொள்ள இவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

Amarnath Ramakrishnan
Amarnath Ramakrishnan

வைகைக் கரையோரங்களில் அகழாய்வு நடத்த வேண்டுமென்று மத்திய அரசின் தொல்லியல் துறைதான் திட்டம் தயாரித்து ஆய்வைத் தொடங்கியது. அதன் கண்காணிப்பு அதிகாரியாக மதுரையைச் சேர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் இருந்ததால், மிக ஆர்வமாகவும், அறிவியல்பூர்வமாகவும், வரலாற்றுப் பார்வையோடு ஆய்வுகளை நடத்தினார். முதல் வருடத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் மூலம், `இது தமிழரின் தனித்த நாகரிகம், வட இந்திய நாகரிகத்தின் சாயல் ஏதுமில்லை, மத அடையாளமில்லை’ என்று அவர் சொன்னவுடனேயே மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அதே நேரம் ஒற்றைக் கலாசாரத்தை புகுத்த நினைப்போரும், மத்திய அரசும், `ஆய்வு தொடரக் கூடாது’ என்று நினைத்தனர்.

இரண்டாம்கட்ட ஆய்வுக்கு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்தினார்கள். இந்த நேரத்தில்தான் தமிழக அரசியல் தலைவர்கள் கீழடிக்கு கிளம்பி வரத் தொடங்கினார்கள். போராட்டங்கள் நடத்தப்பட்டன. வேறு வழியில்லாமல் இரண்டாம்கட்ட ஆய்வு தொடங்கப்பட்டது. அதிலும் பல்வேறு பொருள்கள், நீராவித் தொட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் அனைத்து தொல் பொருள்களையும் மைசூர் ஆய்வகத்துக்கு கொண்டு செல்ல முயன்றபோது, வழக்கறிஞர் கனிமொழி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

`அனைத்துப் பொருள்களும் இங்கேயே காட்சிக்கு வைக்கப்பட வேண்டும், தொடர்ந்து ஆய்வுப்பணி நடக்க வேண்டும்’ என்று அவர் கோரியிருந்ததில், உயர் நீதிமன்றமும் சில உத்தரவுகளை விதித்தது. அதனால், அந்தப் பொருள்கள் தமிழகத்திலேயே வைக்கப்பட்டன. ஆனால், அதிரடியாக மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாமுக்கு மாற்றப்பட்டு ஸ்ரீராம் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் மூன்றாம்கட்டப் பணியைத் தொடங்கி நடத்தியபோதும் ஏகப்பட்ட பொருள்கள் கிடைத்தன. ஆனால், அதோடு மத்திய அரசு ஆய்வை நிறுத்திக்கொண்டது.

 Keezhadi
Keezhadi

இதை, தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கண்டிக்கத் தொடங்கின. அந்த நேரத்தில்தான் தமிழக தொல்லியல்துறை, ஆய்வுப்பணியை மீண்டும் தொடங்கி மக்களின் கோபத்திலிருந்து தப்பித்தது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கீழடி ஆய்வில் ரொம்ப ஆர்வமாகச் செயல்பட்டுவருகிறார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் தொடர்ந்து கண்காணித்துவருகிறார். ஆனால், கீழடி இருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் முன்னர் இருந்த எம்.பி.செந்தில்நாதனோ, இப்போது இருக்கும் கார்த்தி சிதம்பரமோ, அ.தி.மு.க அமைச்சர் பாஸ்கரனோ, மானாமதுரை எம்.எல்.ஏவோ கொஞ்சமும் ஆர்வம் காட்டுவதில்லை. அருங்காட்சியகம் அமைக்க இடம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

Doubt of Common Man
Doubt of Common Man

இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசனிடம் கேட்டோம், ``தமிழக தொல்லியல்துறை ஆய்வில் இப்போதும் பல தொன்மையான பொருள்கள் கிடைத்துவருகின்றன. `ஏற்கெனவே கிடைத்த பொருள்களையும் சேர்த்து கீழடியில் அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். தமிழக அரசும் உறுதி கூறியிருக்கிறது. விரைவில் இது தொடர்பாக கீழடிக்குச் சென்று பார்த்துவிட்டு தமிழக அமைச்சரைச் சந்தித்துப் பேசவிருக்கிறேன்’ என்றார்.

Madurai MP Su.Venkatesan
Madurai MP Su.Venkatesan

கீழடி நாகரிகம் உலகறியக் காரணமான மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அண்மையில் பொன்னேரி அரசுக்கல்லூரி விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில், ``தொல்லியல் அகழாய்வில் கடந்த 70 வருடங்களாக தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதனால், விரிவான அகழாய்வுகள் நடைபெறவில்லை. அதே நேரம் வட இந்தியாவில் அதிகமாக ஆய்வுகள் நடைபெறுகின்றன. சிவகங்கை கீழடி அகழாய்வில் கிடைத்த ஏழு தங்கக்கட்டிகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இருந்தன.

`உலகில் தங்கக்கட்டிகளில் தங்கள் மொழியை எழுதியவர்கள் தமிழர்கள்தான்’ என்பதை அறிய முடிகிறது. `தமிழகத்தின் அகழாய்வுகளில் நகர நாகரிகம் இல்லை’ என்று கூறப்பட்டது. ஆனால், மத்திய தொல்லியல்துறை மூலம் கீழடியில் நடத்திய ஆய்வில் சுடு மண்ணாலான கிணறுகள், கழிவறைக் குழாய்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. சிந்து சமவெளி மக்களைப்போல கீழடியிலும் நகர நாகரிகத்துடன் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அப்போதே தமிழர்கள் எழுத்தறிவுடன் இருந்திருக்கிறார்கள். முத்திரை நாணயங்கள், தந்தத்தால் செய்யப்பட்ட சீப்புகள் கிடைத்திருக்கின்றன. மத்திய மாநில அரசுகள் இணைந்து கீழடி அகழ்வாய்வை விரிவுபடுத்த வேண்டும்’’ என்று பேசியிருந்தார்.

``கீழடியில் நீங்கள் பணியாற்றியபோது எடுக்கப்பட்ட பொருள்கள் எங்குள்ளன, அருங்காட்சியம் அமைக்க வாய்ப்பிருக்கிறதா?’' என்று அஸ்ஸாமில் பணியாற்றும் மத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்.

``அனைத்துப் பொருள்களும் சென்னையில் பாதுகாப்பாக உள்ளன. அவற்றை மட்டுமல்ல, இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் அரிய பொருள்களையும் சேர்த்து அங்கு அருங்காட்சியம் அமைத்துவைக்கலாம். இப்போது தமிழக தொல்லியல்துறை ஆய்வுசெய்யும் சிறிய பகுதிக்குள்ளேயே அதிகமான பொருள்கள் கிடைத்திருக்கின்றன. இன்னும் பல ஏக்கர் பகுதிகளை ஆகழ்வு செய்யும்போது, மேலும் கிடைக்கலாம். பண்டைத் தமிழரின் நாகரிக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இன்னும் பல ஆதாரங்கள் அங்கு விரவிக்கிடக்கின்றன. அதனால், மத்திய மாநில அரசுகள் இணைந்து அங்கு ஆய்வில் ஈடுபட்டால், இன்னும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமல்லாமல், மத்திய தொல்லியல்துறையில் வசதிகள் அதிகம். தொல்லியல் அறிஞர்களும் அதிகமிருக்கிறார்கள். அதனால், அவர்களையும் பயன்படுத்தலாம். இது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’’' என்றார்.

Ma Foi K. Pandiarajan
Ma Foi K. Pandiarajan

``கீழடியில் அருங்காட்சியம் எப்போது அமையும்?’’ என்று மதுரை வந்திருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேட்டோம்,

``அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் ஏழு மாதங்களுக்குள் அமைக்கப்படும். இதற்காக தமிழக அரசு ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசிடமும் நிதி கேட்கவிருக்கிறோம். கண்டிப்பாக அருங்காட்சியகம் திறக்கப்படும்’’ என்றவர், தொடர்ந்து, ``கீழடியில் தற்போது நடைபெற்றுவரும் ஐந்தாம்கட்ட அகழாய்வில் ஆரம்ப நாள்களிலேயே அதிக அளவில் அரிய பொருள்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு, தற்போது டெக்னாலஜியைப் பயன்படுத்தி ஆய்வை புதிய முறையில் செய்துவருகிறோம். புவியீர்ப்பு விசை மூலம் பூமிக்கு அடியில் இருப்பவற்றைக் கண்டறியும் கருவியைப் பயன்படுத்தி ஆய்வுசெய்கிறோம். இதனால், எல்லா இடங்களையும் தோண்ட வேண்டிய அவசியமில்லை. ஆய்வு செய்ய வேண்டிய இடத்தைத் துல்லியமாக கணிக்க முடிகிறது. அதனால், தமிழகத்தில் அகழாய்வுகள் தொடரும். கீழடியில் மக்கள் அனைவரும் பார்த்துச் செல்லும் வகையில் அருங்காட்சியம் அமைக்கப்படும்’’ என்றார்.

அமைச்சரின் பதில் நம்பிக்கை அளிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

doubt of common man
doubt of common man