Published:Updated:

ஜோராகத் தொடங்கியது மேயர் ரேஸ்!

மேயர் ரேஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
மேயர் ரேஸ்!

களமிறங்கக் காத்திருப்போர் யார் யார்? - 15 மாநகராட்சிகளின் ஸ்கேன் ரிப்போர்ட்

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே, டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தலை அறிவித்துள்ளார்கள். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதற்காக சும்மா இருப்பார்களா கரைவேட்டிகள்! மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிக்க போட்டிபோட்டுக்கொண்டு காய் நகர்த்திவருகிறார்கள். பெரும்பாலான மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியும் இதற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு மாநகராட்சியிலும் மேயர் சீட்டுக்காக முட்டிமோதுபவர்கள் குறித்த ரிப்போர்ட் இதோ...

சென்னை

சென்னை மாநகராட்சி மேயர் பதவியைக் குறிவைத்து முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, மாதவரம் மூர்த்தி, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி-க்கள் நா.பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, எஸ்.ஆர்.விஜயகுமார், ஜெயவர்தன், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் எனப் பலரும் காய் நகர்த்தி வருகிறார்கள். அதே நேரத்தில் மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலின் உதவியாளர் ப்ருத்வியை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துமாறு அ.தி.மு.க-வுக்கு அழுத்தம் கொடுக்கிறதாம் பா.ஜ.க தலைமை. மேயர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்குத்தான் என்று தி.மு.க தொண்டர்கள் மத்தியில் ஒரு பேச்சு நிலவிவருவதால், உடன்பிறப்புகள் கொஞ்சம் அடக்கியேவாசிக்கிறார்களாம்.

மேயர் ரேஸ்
மேயர் ரேஸ்

ஆவடி

ஆவடி மாநகராட்சியின் மேயர் பதவியை, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிடலாம் என அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், தி.மு.க மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர் விருப்ப மனு அளித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் முன்னாள் நகராட்சித் தலைவர் விக்டரி மோகன், டெல்லியில் சிபாரிசுக்கு ஆள் தேடிவருகிறார்.

அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீமுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிபாரிசு செய்திருக்கிறார்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி மேயர் பதவி, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் வேலூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் கர்ணலின் மகள் அமலநிருபா பெயர் அடிபடுகிறது. அமலநிருபாவின் கணவர் ஜெயப்பிரகாஷ் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு நெருக்கமானவர் என்பதால், அவரின் ஆசி அமலநிருபாவுக்கு உண்டு. அதே நேரத்தில், காட்பாடியைச் சேர்ந்த அ.தி.மு.க மாநில மாணவரணி துணைச் செயலாளர் எம்.டி.பாபுவும் தன் மனைவி ரீட்டா வான்மலருக்காக சிபாரிசு தேடிக்கொண்டிருக்கிறார். அண்ணா தொழிற்சங்கத்தின் வேலூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தன், தன் மருமகள் கலைச்செல்விக்காகக் காய் நகர்த்திவருகிறார். முன்னாள் மாநகர துணைச் செயலாளர் இரா.முனியம்மாளும் முயல்கிறார்.

கோகுல இந்திரா, ப்ருத்வி, உதயநிதி ஸ்டாலின், நாசர், அப்துல்ரஹீம்
கோகுல இந்திரா, ப்ருத்வி, உதயநிதி ஸ்டாலின், நாசர், அப்துல்ரஹீம்

தி.மு.க-வில் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் ராஜேஸ்வரியை மேயர் ஆக்கத் திட்டமிட்டுள்ளதாம் தலைமை. ராஜேஸ்வரி, கடந்த தேர்தலில் மேயர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன், சேண்பாக்கம் பகுதி துணைச் செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட கலை, இலக்கியப் பகுத்தறிவு துணைச் செயலாளர் உமாசந்திரன் ஆகியோரும் அவரவர் மனைவிகளை மேயர் ஆக்கும் எண்ணத்தில் முட்டிமோதுகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பதவியைக் குறிவைத்து, அ.தி.மு.க சார்பில் பகுதிக் கழகச் செயலாளர்களான அறிவுடைநம்பி, சரவணன், புண்ணியமூர்த்தி, முன்னாள் எம்.பி-யான பரசுராமன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் உள்ளிட்ட பலர் சீட் கேட்டிருக்கிறார்கள். அறிவுடைநம்பி, சரவணன், புண்ணியமூர்த்தி மூவரும் வைத்திலிங்கத்துக்கு நெருக்கமானவர்கள். இவர்களில் அறிவுடைநம்பிதான் சீனியர். எனவே, இவர்தான் மேயர் பதவிக்கு முன்னிலைப்படுத்தப்படுவார் எனப் பேச்சு நிலவுகிறது.

தி.மு.க சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகத்தின் ஆதரவாளர் நீலகண்டன், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அஞ்சுகம் பூபதி, முன்னாள் நகர்மன்றத் தலைவரின் மகள் கார்குழலி மற்றும் மேத்தா எனப் பலரும் மேயர் ரேஸில் உள்ளனர். இவர்களில் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமான சண்.ராமநாதன், கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்த பூபதியின் மகள் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் இருக்கிறார்கள்.

திருச்சி

அ.தி.மு.க-வில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு, மேயர் பதவிக்காக மல்லுக்கட்டுகிறார். மாவட்டச் செயலாளர் ப.குமார், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், மகளிரணியைச் சேர்ந்த தமிழரசி எனப் பலரும் மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார்கள்.

தி.மு.க-வில், மாநகரச் செயலாளர் அன்பழகன், கடந்த முறை மேயர் பதவிக்குப் போட்டியிட்ட விஜயா ஜெயராஜ், முன்னாள் கவுன்சிலர் கவிதா செல்வம் ஆகியோர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் பரிந்துரைக்காகக் காத்திருக்கிறார்கள்.|

மேயர் ரேஸ்
மேயர் ரேஸ்

சேலம்

அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.பி-யான பன்னீர்செல்வம், பகுதிக் கழகச் செயலாளர்கள் சரவணன், உமாராஜ், முன்னாள் துணை மேயர் நடேசன் மற்றும் பாலசுப்பிரமணி, யாதவமூர்த்தி எனப் பலரும் மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார்கள். பன்னீர்செல்வம் எடப்பாடி ஆதரவாளர் என்பது அவருக்கான ப்ளஸ். இன்னொரு பக்கம், இந்தக் கூட்டணியில் பா.ம.க மற்றும் தே.மு.தி.க தரப்புகளிலும் மேயர் பதவிக்கு குறிவைத்து காய் நகர்த்தப்படுகின்றன.

தி.மு.க-வில் மத்திய மாவட்ட அவைத் தலைவர் கலையமுதன், முன்னாள் மேயர் சூடாமணி, சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட உமாராணி, மத்திய மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாவட்டத் துணைச் செயலாளர் ரகுபதி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் தமிழரசன், மாநகரச் செயலாளர் ஜெயக்குமார் எனப் பலரும் மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார்கள். கலையமுதனுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஈரோடு

ஈரோடு மேற்குத் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான ராமலிங்கம், தன் மகன் ரத்தன் பிரித்திவியையும், ஈரோடு தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான தென்னரசு, தன் மகன் கலையரசனையும் மேயர் ஆக்கிவிட வேண்டும் எனத் துடிக்கின்றனர். முதல்வருடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் முன்னாள் மேயர் கே.சி.பழனிசாமி, பெரியார் நகர்ப் பகுதிக் கழகச் செயலாளர் மனோகரன் ஆகியோரும் மேயர் கனவில் களம் இறங்கியிருக்கிறார்கள். இவர்களில் மனோகரன் ரேஸில் முந்துகிறார்.

தி.மு.க-வில் கடந்த முறை மேயர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றுப்போன செல்லப்பொன்னி மனோகரன், மறுபடியும் வாய்ப்பு கேட்டிருக்கிறார். கட்சியின் நகரச் செயலாளராகவும், ஈரோடு நகராட்சி சேர்மனாகவும் இருந்த அரங்கராசன், இரண்டு முறை திண்டல் ஊராட்சி மன்றச் செயலாளராக இருந்த குமாரசாமி, மாநகரச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோரும் மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர் முத்துசாமியின் ஆதரவு சுப்பிரமணிக்குத்தான் என்கிறார்கள்.

அமலநிருபா, ராஜேஸ்வரி, அறிவுடைநம்பி, அஞ்சுகம் பூபதி, ஜவஹர்லால் நேரு
அமலநிருபா, ராஜேஸ்வரி, அறிவுடைநம்பி, அஞ்சுகம் பூபதி, ஜவஹர்லால் நேரு

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ‘மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த்’ பட்டம் வென்ற சோனாலி பிரதீப்தான் அ.தி.மு.க-வின் மேயர் வேட்பாளர் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. ‘நமது அம்மா’ நாளிதழின் பதிப்பாளர் சந்திரசேகரின் மனைவி ஷர்மிளாவும் மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார். ஷர்மிளாவுக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். இங்கு பா.ஜ.க-வுக்கும் மேயர் பதவிமீது ஒரு கண் இருக்கிறது.

தி.மு.க-வில் முன்னாள் கவுன்சிலர் மீனா லோகு மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார். மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயகுமாரும் சீட் கேட்டிருக்கிறார். மாவட்டக் கழகம் முதல் தலைமைக்கழகம் வரை ஆதரவு இருப்பதால் மீனா ஜெயக்குமாருக்குத்தான் வாய்ப்பு என்கிறார்கள், உடன்பிறப்புக்கள்.

திருப்பூர்

அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு சீட் கேட்டு 30 பேர் பணம் கட்டியிருக்கிறார்கள். திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ-வான குணசேகரனின் மனைவி கவிதா, முன்னாள் எம்.பி-யான சிவசாமி ஆகியோரும் மேயர் பதவியைக் குறிவைத்து விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

தி.மு.க-வில் மாநகர மாவட்டப் பொறுப்பாளர் டி.கே.டி.நாகராஜன், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இந்த மாநகராட்சியில் இடதுசாரிகளும் தி.மு.க-விடம் மேயர் பதவியைக் குறிவைத்து காய் நகர்த்துகின்றன.

குமார், பன்னீர்செல்வம், கலையமுதன், கே.சி.பழனிசாமி, மனோகரன்
குமார், பன்னீர்செல்வம், கலையமுதன், கே.சி.பழனிசாமி, மனோகரன்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் முன்னாள் மேயர் மருதராஜின் மகள் பொன்முத்து, மருமகள் சாமுண்டீஸ்வரி ஆகியோர் மேயர் பதவியைக் குறிவைத்து விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் இரண்டு மருமகள்களும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க-வில் முன்னாள் ஒன்றியச் செயலாளர்களான பெருமாள்சாமியின் மனைவி சாந்தி, சந்திரசேகரனின் மருமகள் சரண்யா, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெயனின் மனைவி சித்ரா, மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஜோதி, முன்னாள் கவுன்சிலர் சகாயமேரி ஆகியோர் மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார்கள்.

மதுரை

தன் மகள் ரம்யா அல்லது ஆதரவாளர் கிரம்மர் சுரேஷை மேயர் பதவிக்கு அமைச்சர் செல்லூர் ராஜு களமிறக்குவார் என்று சொல்கிறார்கள். முன்னாள் துணை மேயர் கோபாலகிருஷ்ணன், ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன், ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர் சாலைமுத்து, முன்னாள் மண்டலத் தலைவர் சண்முகவள்ளி மற்றும் எஸ்.எஸ்.காலனி லட்சுமி, கண்ணகி ஆகியோரும் மேயர் கனவில் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். தவிர, தே.மு.தி.க பிரமுகர்களும் அ.தி.மு.க தரப்பிடம் மேயர் பதவிக்காகப் பேசிவருகிறார்கள்.

தி.மு.க-வில் மாநகர் மாவட்டப் பொறுப்புக் குழுத் தலைவர் கோ.தளபதியின் மகள் மேகலா, பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜெயராம், எஸ்ஸார் கோபி மற்றும் சின்னம்மாள், தமிழரசி, வாசுகி எனப் பலரும் மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார்கள்.

செல்லப்பொன்னி , ஷர்மிளா, மீனா ஜெயக்குமார், ஆனந்தன், நாகராஜன், பொன்முத்து
செல்லப்பொன்னி , ஷர்மிளா, மீனா ஜெயக்குமார், ஆனந்தன், நாகராஜன், பொன்முத்து

திருநெல்வேலி

அ.தி.மு.க-வில், மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த், அவரின் சகோதரி மகள் வெண்ணிலா ஜீவபாரதி, முன்னாள் மேயர் புவனேஸ்வரி, டாக்டர்.அபரூப சுனந்தினி, பாளையங்கோட்டை பகுதி மகளிரணிச் செயலாளர் மாரியம்மாள், முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமி என, பெரிய பட்டாளமே மேயர் கனவுடன் விருப்ப மனு கொடுத்துள்ளது. இவர்களில் விஜிலா சத்யானந்த், புவனேஸ்வரி, அபரூப சுனந்தினி ஆகியோர் முன்னணியில் இருக்கிறார்கள்.

தி.மு.க-வில், கடந்த முறை போட்டியிட்ட அமுதா, இந்த முறையும் சீட் கேட்டிருக்கிறார். முன்னாள் கவுன்சிலர்கள் மெட்டில்டா ஜோசப், ராஜகுமாரி, முன்னாள் கவுன்சிலர் பொன்னையா பாண்டியனின் மனைவி பிரபா சங்கரி, இளைஞரணி முன்னாள் செயலாளர் எஸ்.வி.சுரேஷின் மனைவி கோகிலவாணி, மகளிரணி துணைச் செயலாளர் லதா ஆகியோரும் போட்டியில் இருக்கிறார்கள். கோகிலவாணி, ராஜகுமாரி, பிரபா சங்கரி ஆகிய மூவர் முன்னணியில் இருக்கிறார்கள்.

தூத்துக்குடி

அ.தி.மு.க-வில், ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும், தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் அறங்காவலர் குழுத் தலைவருமான மோகன், தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சின்னதுரை, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் `டாக்’ ராஜா ஆகியோர் மேயர் பதவிக்குக் குறிவைத்துள்ளனர்.

தி.மு.க-வில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப் ஆகியோர் மேயர் பதவிக்குக் குறிவைத்திருக்கிறார்கள். தெற்கு மாவட்டச் செயலாளரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ-வுமான கீதாஜீவனின் பூரண ஆசி பாலகுருசாமிக்கு இருக்கிறது.

சித்ரா, கிரம்மர் சுரேஷ், மேகலா, விஜிலா சத்யானந்த், அமுதா, மோகன்
சித்ரா, கிரம்மர் சுரேஷ், மேகலா, விஜிலா சத்யானந்த், அமுதா, மோகன்

நாகர்கோவில்

அ.தி.மு.க-வில் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ-வான ராஜன் ஆகியோர் மேயர் பதவிக்குக் குறிவைத்திருக்கிறார்கள். தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் ஆதரவு ராஜனுக்குத்தான் உள்ளது.

பி.ஜே.பி சார்பில் முன்னாள் நகராட்சி தலைவர் மீனா தேவ், அகில இந்திய மகளிரணி நிர்வாகி விக்டோரியா கவுரி, குமரி மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன் ஆகியோரும் பொன்.ராதாகிருஷ்ணனிடம் சிபாரிசு கோரிவருகிறார்கள்.

தி.மு.க-வில், நாகர்கோவில் மாநகர தி.மு.க செயலாளர் மகேஷ் பெயர் அடிபடுகிறது. கூடவே கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் மேயர் பதவிக்கு அடிபோடுகிறது.

பாலகுருசாமி, ராஜன், மகேஷ், மீனா தேவ்,  ஜோதி, யுவராஜ்
பாலகுருசாமி, ராஜன், மகேஷ், மீனா தேவ், ஜோதி, யுவராஜ்

ஓசூர்

அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி, நகரச் செயலாளர் பால் நாராயணன், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ராமு, வாசு எனப் பலரும் களமிறங்கியிருக்கிறார்கள். ஆனால், ஜோதிதான் மேயர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் எனச் சொல்லப்படுகிறது.

தி.மு.க-வில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் யுவராஜ், மாவட்ட இலக்கிய அணியைச் சேர்ந்த சுகுமார், ஒன்றியச் செயலாளர் சின்ன பில்லப்பா மற்றும் மலைகிரி சீனிவாசன் எனப் பலரும் மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார்கள். ஆனால், மேற்கு மாவட்டச் செயலாளர் தளி பிரகாஷின் ஆதரவு யுவராஜுக்குதான் என்கிறார்கள். கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் மேயர் பதவியை எதிர்பார்க்கிறது.