Published:Updated:

ஜெ. சொத்துகளை அடையும் முயற்சியில் தீவிரம் காட்டுவது யார் யார்?

விகடன் டீம்

இன்றைய மதிப்பு 913 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டு, இவற்றை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கே.கே.நகர் புகழேந்தி வழக்கு தொடுத்துள்ளார்.

jayalalithaas properties issues
jayalalithaas properties issues

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கும் நிஜ வாழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததில், அவர்மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த வகையில் ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கின்மீது அ.தி.மு.க தொண்டர்களுக்கு பெரும்கோபமும் இருக்கிறது. அந்த வழக்கு முடிவுக்கு வரும் முன்னே, ஜெயலலிதாவின் வாழ்வும் முடிவுக்கு வரும் என, யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2lyaqLJ

இவ்வளவு அவப்பெயரை வாங்கித் தந்த அந்தச் சொத்துகளை அனுபவிக்க, இப்போது ஜெயலலிதா இல்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், அந்தச் சொத்துகள் அனைத்தும் யாருக்குப் போகப் போகின்றன என்ற கேள்விதான் பெரிதாக எழுந்திருக்கிறது.

ஜெயலலிதா கடைசியாகப் போட்டியிட்ட 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல்செய்த வேட்புமனுவில், தன் கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்ட தொகை வெறும் 41,000 ரூபாய் மட்டுமே. அவர் பெயரில் சென்னை, நீலகிரி, செகந்திராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 வங்கிக் கணக்குகளும் நிதி நிறுவனக்கணக்குகளும் இருந்தன. சொத்துக்குவிப்பு வழக்கின்போது, ஒன்பது கணக்குகள் முடக்கப்பட்டன. மீதம் உள்ள வங்கிக்கணக்குகளில் மொத்தம் 10 கோடியே 63 லட்சம் ரூபாய் இருந்தது.

கொடநாடு எஸ்டேட், கிரீன் டீ எஸ்டேட், ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், ராயல்வேலி ஃபுளோரிடெக் எக்ஸ்போர்ட் ஆகிய ஐந்து கம்பெனிகளில் பங்குதாரராக இருந்த ஜெயலலிதாவுக்கு, அவற்றில் 27 கோடியே 44 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்தில் பங்கு இருந்தது. அவற்றைத் தவிர்த்து 21,280 கிராம் தங்கம், 3.12 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,250 கிலோ வெள்ளியும் இருந்ததாக வேட்புமனுவில் கூறியிருந்தார் ஜெயலலிதா.

jayalalithaas properties issues
jayalalithaas properties issues

அவரிடம் ஒன்பது வாகனங்கள் இருந்தன. ஹைதராபாத் - ஜீடிமெட்லாவில் 14.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.50 ஏக்கர் திராட்சைத் தோட்டம், ஹைதராபாத்தில் 5.03 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, சென்னை மந்தைவெளியில் ஒரு வணிகக் கட்டடம், சென்னை பார்சன் மேனரில் வணிகக் கட்டடம், போயஸ் கார்டனில் 10 கிரவுண்டு வீடு மற்றும் இரண்டு இடங்கள் என ஜெயலலிதா பெயரில் இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துகளின் அன்றைய மதிப்பு 113 கோடி ரூபாய்.

இவற்றின் இன்றைய மதிப்பு 913 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டு, இவற்றை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கே.கே.நகர் புகழேந்தி வழக்கு தொடுத்துள்ளார். ஆனால், ஜெயலலிதா சொத்துக்குவிப்பின் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவோ, "அந்தச் சொத்துகளின் இன்றைய மதிப்பு 5,000 கோடி ரூபாய்" என்கிறார்.

பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சொத்துகள் யாருக்குப் போகும் என்பதுதான், தமிழக மக்களின் மண்டையைச் சூடாக்கும் கேள்வி. ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பாகத் தாக்கலாகியுள்ள வழக்கில், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று உரிமைகோரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

அவர்களிடம், "ஜெயலலிதா, 'மக்களால் நான் மக்களுக்காக நான்' என்று கூறியவர். அவரது சொத்தில் ஒரு பங்கை மக்களுக்குக் கொடுத்தால் என்ன?" என்று நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கேட்டனர். அதற்கு அவர்கள் தரப்பு, "என் அத்தை ஜெயலலிதாவுக்கும் அதுவே விருப்பமாக இருந்தது. அதனால் எங்கள் அத்தை ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்" என்று பதிலளித்தார்.

ஜெ. சொத்துகளை அடையும் முயற்சியில் தீவிரம் காட்டுவது யார் யார்?

சசிகலா வெளியில் வருவதற்குள் இந்தச் சொத்துகளை ஏதாவது ஒரு வகையில் அடைந்துவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதாவின் ரத்த உறவுகளான இவர்களைத் தவிர, அதிகார வட்டத்தில் உள்ள சிலரும் மிகத்தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு பல தரப்பும் குறிவைத்து சதுரங்க வேட்டை நடத்துவது தெளிவாகத் தெரிகிறது. அரசு மெளனம் காப்பதைப் பார்த்தால், சசிகலாவுக்கு இந்தச் சொத்துகளைக் காப்பாற்றிக் கொடுக்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகமும் வலுக்கிறது.

- ஜெ. சொத்துகளை அபகரிக்கும் முயற்சி நடப்பது எப்படி? ஜெயலலிதா சொத்துகளை அரசுடைமை ஆக்கப்படாமல் இருப்பதன் பின்னணி என்ன? சசிகலா தரப்பின் மூவ் என்ன? - இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரியை விரிவாக வாசிக்க > பல்லாயிரம் கோடி ஜெ. சொத்து... சதுரங்க வேட்டை ஸ்டார்ட்! https://www.vikatan.com/government-and-politics/politics/what-will-happen-to-jayalalithaas-properties

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/