Published:Updated:

`நீதி கிடைக்காவிட்டால் பதக்கங்களைத் திருப்பி அளிப்பேன்’ - துரோணாச்சார்யா விருது பெற்ற மஹாவீர் போகத்

சாக்‌ஷி ஜோஷி
News
சாக்‌ஷி ஜோஷி

`நாங்கள் அனைத்துப் பதக்கங்களையும் திருப்பிக் கொடுக்கிறோம். உயிரையும் கொடுக்கிறோம். ஆனால், எங்களுக்கு நீதி வேண்டும்’, `போலீஸார் எங்களைத் தள்ளும்போதும், தவறாக நடந்துகொள்ளும் போதும் நாங்கள் பத்மஸ்ரீ விருதாளர்கள் என்றா நடத்தினார்கள்?’ - மல்யுத்த வீராங்கனைகள் வேதனை.

Published:Updated:

`நீதி கிடைக்காவிட்டால் பதக்கங்களைத் திருப்பி அளிப்பேன்’ - துரோணாச்சார்யா விருது பெற்ற மஹாவீர் போகத்

`நாங்கள் அனைத்துப் பதக்கங்களையும் திருப்பிக் கொடுக்கிறோம். உயிரையும் கொடுக்கிறோம். ஆனால், எங்களுக்கு நீதி வேண்டும்’, `போலீஸார் எங்களைத் தள்ளும்போதும், தவறாக நடந்துகொள்ளும் போதும் நாங்கள் பத்மஸ்ரீ விருதாளர்கள் என்றா நடத்தினார்கள்?’ - மல்யுத்த வீராங்கனைகள் வேதனை.

சாக்‌ஷி ஜோஷி
News
சாக்‌ஷி ஜோஷி

டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், `நீதி கிடைக்கவில்லை எனில் விருதை திருப்பி அளிப்பேன்’ என்று கூறியிருக்கும், துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர் மஹாவீர் போகத்தின் அறிவிப்பால் இன்னும் வலுவாகியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், சிறுமி உட்பட பல விளையாட்டு வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அதனால் அவரை கைது செய்து உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கடந்த ஜனவரி மாதம் முதல் பல முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரிஜ் பூஷன் மீது புகார் அளித்து இத்தனை மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் மற்றும் காமன்வெல்த் & ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வினேஷ் போகட் ஆகிய முன்னணி வீரர்கள் கடந்த 11 நாள்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அமர்ந்து இரவு பகலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மல்யுத்த வீரர்கள் போராட்டம்
மல்யுத்த வீரர்கள் போராட்டம்

இவர்களுக்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைவதால் போராட்ட பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது டெல்லி காவல்துறையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது இந்திய அளவில் மிகப் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. வீரர்களுடன் சேர்த்து பத்திரிகையாளர் சாக்‌ஷி ஜோஷியும் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்துக்குப் பிறகு சாக்‌ஷி ஜோஷி வெளியிட்ட வீடியோவில், ``ஜந்தர் மந்தர் போராட்டத்தைப் படம்பிடிக்க விடாமல் போலீஸார் என்னைத் தடுக்க முயன்றனர். அதை எதிர்த்து கேட்டபோது, பல பெண் போலீஸார் என்னை கடுமையாகத் தாக்கி கீழே தள்ளிவிட்டு உடைகளைக் கிழித்து, எங்கள் கேமராவை பறிமுதல் செய்துவிட்டனர். பின்னர், மந்திர் மார்க் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு நள்ளிரவு 1.30 மணி வரை காவலில் வைத்திருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அதே வீடியோவில் பேசியுள்ள அவர், ``மணி தற்போது நள்ளிரவு 1.30, நான் இங்கே சாலையில் தனியாக நிற்கிறேன். நான் இங்கிருந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும். என்னை வெளியே அனுப்பி காவல் நிலையத்தையும் மூடிவிடார்கள். ஆனால், அவர்கள் தங்களை மக்களை பாதுகாக்கும் காவலர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள்” எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.

பத்திரிகையாளர் சாக்‌ஷி ஜோஷி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

சாக்‌ஷி ஜோஷி தாக்கப்பட்ட அதே இரவில், மல்யுத்த வீரர்கள் மீதும் போலீஸார் தாக்குதல் நடத்தியதாகப் பரவலான செய்திகளும் வெளியாகியுள்ளன. மே 3-ம் தேதி இரவு மல்யுத்த வீரர்கள் போராட்டக்களத்துக்கு மரக்கட்டைகளைக் கொண்டு செல்ல முயன்றதை அடுத்து, போலீஸார் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் மெத்தையில் அமர்ந்தே போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், மழை காரணமாக மெத்தை நனைந்ததால் போராட்டக்களத்துக்கு கட்டில் கொண்டு செல்ல விரும்பினர்.

ஆனால், இதற்கு போலீஸார் அனுமதி அளிக்க மறுத்ததால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இரண்டு மல்யுத்த வீரர்கள் தலையில் காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனை அழைத்துச் செல்ல போராட்டக்களத்துக்கு வந்த ஆம்புலன்ஸையும் போலீஸார் அனுமதிக்கவில்லை, அவர்களே மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகப் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மல்யுத்த வீராங்கனைகள் பேசும்போது, `நாங்கள் இப்படி நடத்தப்படும்போது, பதக்கங்களை வைத்து என்ன செய்வது? ஒரு மரியாதையான வாழ்க்கை வாழ்ந்து, பதக்கங்கள், விருதுகளை மத்திய அரசிடம் திருப்பிக்கொடுக்கிறோம்', `நாங்கள் அனைத்துப் பதக்கங்களையும் திருப்பிக் கொடுக்கிறோம். உயிரையும் கொடுக்கிறோம். ஆனால், எங்களுக்கு நீதி வேண்டும்’, `போலீஸார் எங்களைத் தள்ளும்போதும், தவறாக நடந்துகொள்ளும்போதும் நாங்கள் பத்மஸ்ரீ விருதாளர்கள் என்றா நடத்தினார்கள்?’ என்று மல்யுத்த வீராங்கனைகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

பிரிஜ் பூஷண்
பிரிஜ் பூஷண்

மேலும், போராட்டத்தில் அரசியல் கலந்துவிட்டதா என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் கேட்கப்பட்டபோது, `இது அரசியல் என்றால், பிரதமர், உள்துறை அமைச்சரை தயவு செய்து எங்களிடம் பேசச் சொல்லுங்கள். காவல்துறை பிரிஜ் பூஷன் சரண் சிங்க்கு ஆதரவாக உள்ளது, தேசம் தவறாக வழிநடத்தப்படுகிறது’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், விருது பெற்ற பயிற்சியாளர் மஹாவீர் போகத், ``நீதி கிடைக்கவில்லை எனில், நான் என் பதக்கங்களைத் திருப்பி அளிப்பேன். அவர் மீது கூறப்பட்டுள்ள புகார்களுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இவர், மூன்று வருடங்களுக்கு முன் பாரதிய ஜனதாவில் சேர்ந்தவர். இது குறித்து அவர் அரசிடம் பேசினாரா, அல்லது கட்சி அளவில் குரல் எழுப்பினாரா என்று கேட்டபோது, இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று கூறினார்.