கட்டுரைகள்
Published:Updated:

கதை உலகின் தோழி!

வைமித்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
வைமித்ரா

நான் எழுதுற கதைகள் மூலம் நிறைய பேருக்குத் தோழியாக இருக்கணும்

கதை உலகின் தோழி!

‘‘மேஜிக், கிரேஸி, அட்வென்சர் சப்ஜெட்கள்தான் என் கதைகளுக்கான இன்ஸ்பிரேஷன். எழுதறதுக்கு வயசு முக்கியமில்லே அங்கிள்... கற்பனை பண்ணத் தெரிஞ்சாலே போதும்” என்று சிரிப்பு மத்தாப்பை உதிர்க்கிறார் வைமித்ரா சென்னையின் திருவேற்காடு ‘தி ப்யூப்பில் சவீதா எக்கோ பள்ளி’யில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் வைமித்ரா, இதுவரை மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘தி கிரேட் அட்வென்சர் ஆஃப் ஆலே அண்டு ஆல்பர்ட்’ என்ற நாவலின் இரண்டாம் பதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ‘சென்னை இளம் புத்தக எழுத்தாளர்கள்’ விழாவில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

பெற்றோருடன்...
பெற்றோருடன்...

“யூகேஜி லீவில் நோட்புக்ல கதை எழுத ஆரம்பிச்சேன். என் கதைக்கு ஏற்ற மாதிரியான படங்களுக்கு வேற புக்ஸ்ல இருக்கிற பொம்மைகளை வெட்டி ஒட்டுவேன். ஒருமுறை பூக்களும் உருளைக்கிழங்குகளும் பேசிக்கிற மாதிரி எழுதின கதையை என் ஃப்ரண்ட்ஸ்கிட்ட காண்பிச்சேன். படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

என் அம்மாவும் அதைப் படிச்சுட்டு இன்னும் நிறைய எழுதச் சொன்னாங்க. நான் நோட்புக்ல எழுதுறதையெல்லாம் எடுத்துவெச்சாங்க. அப்புறம் புத்தகமாகவும் வெளியிட்டாங்க’’ என்று புன்னகைக்கிறார் வைமித்ரா.

இவரின் பாட்டி சொன்ன குருவிக் கதைதான், இவருக்கும் கதை எழுதவேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறது. ‘‘என் பாட்டிதான் என்னோட முதல் இன்ஸ்பிரேஷன்’’ என்கிறார்.

கதை உலகின் தோழி!

அம்மா மாயா, “வைமித்ரா ரொம்ப சின்ன வயசிலிருந்தே கதை சொல்ல ஆரம்பிச்சா. அப்புறம் எழுதவும் ஆரம்பிச்சதும் அந்தக் கதைகளைச் சேகரிச்சு வெச்சேன். இப்போ அமேசான் ப்ரைம் எழுத்தாளராக வைமித்ராவை அங்கீகரிச்சு இருக்காங்க. குழந்தைகள் கையில மொபைல் கொடுக்கிறதைவிட, புத்தகங்களைக் கொடுக்கிறது அவங்க கற்பனைத்திறனை வளர்க்கும். புத்தகங்கள் மீது குழந்தைகளுக்கு ஆசை வந்துட்டா போதும். சிறந்த மனிதர்களாக உருவாக்கிடலாம்’’ என்றார்.

அப்பா சந்திரசேகர், “தினமும் இரண்டு மணி நேரமாவது வைமித்ராவோடு நேரம் ஒதுக்கி அவள் சொல்லும் கதைகளைக் கேட்போம். அதுதான் அவளுக்குள் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு” என்றார் உற்சாகமாக.

வைமித்ரா என்றால், ‘பிரபஞ்சத்தின் (உலகத்தின்) தோழி’ என்று அர்த்தமாம்.

‘‘நான் எழுதுற கதைகள் மூலம் நிறைய பேருக்குத் தோழியாக இருக்கணும்’’ என்கிறார் வைமித்ரா.

பொருத்தமான பெயர்தான்!