கிருஷ்ணகிரி மாவட்டம், நாகமங்கலத்திலிருந்து பெங்களூருக்கு இன்று காலை, தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பஸ்ஸில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்த நிலையில், ஜக்கேரி பகுதி அருகே சென்றபோது வளைவில் அதிவேகமாகச் சென்ற பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டோரம் இருந்த வயலில் இறங்கி, தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதில், பஸ்ஸில் பயணித்த, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், ஜக்கேரி பகுதியைச் சேர்ந்த யசோதா (47) என்ற பெண் படுகாயமடைந்து பரிதாபமாக மரணித்தார். சம்பவ இடத்திலிருந்த மக்கள், காயமடைந்தோரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். விபத்து ஏற்பட்டதும் பஸ்ஸின் பின்னால் இருந்த இரண்டு டயர்களும் தனியாகக் கழன்றன. டிரைவர் தப்பியோடிய நிலையில், கெலமங்கலம் போலீஸார் சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர். பஸ் அதிவேகமாக இயக்கப்பட்டதுதான் விபத்துக்குக் காரணமா என போலீஸார் விசாரித்துவருகின்றனர்.