சமூகம்
Published:Updated:

குளத்துக்குள் கிடந்த எலும்புக்கூடு... 4 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய கொலைகார ‘காமுகன்’!

குளத்துக்குள் கிடந்த எலும்புக்கூடு
பிரீமியம் ஸ்டோரி
News
குளத்துக்குள் கிடந்த எலும்புக்கூடு

அவனது நடவடிக்கையிலும் சந்தேகம் வர, தொடர்ந்து கண்காணித்தோம். கொலை செய்த கொஞ்ச நாளில், வாசுகி பயன்படுத்திய சிம் கார்டை மாதவன் பயன்படுத்துவது தெரியவந்தது

நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல்போன ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தஞ்சாவூர் அருகேயுள்ள குளத்தில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்!

ராமநாதபுரம் மாவட்டம், வாத்தியநேத்தல் கிராமத்தைச் சேர்ந்த மாதவன், அதே ஊரைச் சேர்ந்த வாசுகி இருவரும் காதலித்துள்ளனர். இருவரும் நெருங்கிப் பழகியதால் கர்ப்பமான வாசுகி, தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி மாதவனை வற்புறுத்தியிருக்கிறார். முடியாது என திருமணத்தைத் தவிர்த்துவந்த மாதவன், தஞ்சாவூருக்கு அருகேயுள்ள செங்கிப்பட்டிக்கு வந்து ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுவந்திருக்கிறார். ஒருகட்டத்தில் மாதவனைத் தேடி செங்கிப்பட்டிக்கே சென்ற வாசுகியை, ஆளில்லாத காட்டுப்பகுதியிலுள்ள ஒரு குளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் மாதவன். அங்கு தனது அண்ணன் திருக்கண்ணன், நண்பன் புண்ணியமூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து, வாசுகியை குளத்துத் தண்ணீருக்குள் அமுக்கித் தீர்த்துக்கட்டிய கொடூரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குளத்துக்குள் கிடந்த எலும்புக்கூடு... 4 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய கொலைகார ‘காமுகன்’!

இது குறித்துப் பேசிய போலீஸார், ‘‘மாதவனைப் பார்ப்பதற்காகப் பெற்றோரிடம்கூட சொல்லாமல், கடந்த ஆகஸ்ட் மாதம், 20-ம் தேதி செங்கிப்பட்டி சென்ற வாசுகி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே காதல் விவகாரம் தெரியவர, மாதவனை அழைத்து விசாரித்தோம். அவனது நடவடிக்கையிலும் சந்தேகம் வர, தொடர்ந்து கண்காணித்தோம். கொலை செய்த கொஞ்ச நாளில், வாசுகி பயன்படுத்திய சிம் கார்டை மாதவன் பயன்படுத்துவது தெரியவந்தது. போதுமான ஆதாரங்களைத் திரட்டிய பின்னர் மாதவனை எங்கள் பாணியில் விசாரித்த பிறகுதான் உண்மை வெளிவந்தது.

குளத்துக்குள் கிடந்த எலும்புக்கூடு... 4 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய கொலைகார ‘காமுகன்’!

கர்ப்பிணியான வாசுகியைக் கருவைக்காட்டுக்குள் அழைத்துச் சென்ற மாதவன், அவளை அடித்து உதைத்திருக்கிறான். ‘வயிற்றில் நம்ம புள்ளை வளருது... அடிக்காத’ என்று வலி தாங்காமல் கதறிய வாசுகி, மயக்கமடைந்திருக்கிறார். பின்னர், மூன்று பேரும் வாசுகியைத் தூக்கிச்சென்று குளத்து நீருக்குள் அமுக்கிக் கொலைசெய்திருக்கின்றனர். வாசுகியின் உடல், தண்ணீரிலிருந்து வெளியே வராமலிருக்க, பெரிய கல்லை உடலுடன் சேர்த்துக்கட்டி, நடுக் குளத்துக்குள் கொண்டு போட்டுள்ளனர். ‘நான்கு மாதம் ஆகிவிட்டது... இனி சிக்க மாட்டோம் என நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் போலீஸ் பிடித்துவிட்டதாக’ மாதவன் தெரிவித்தான். கூட்டுப் பாலியல் கொடுமை செய்து கொலை செய்தனரா என்றும் விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றனர்.

மாதவன், திருக்கண்ணன், புண்ணியமூர்த்தி
மாதவன், திருக்கண்ணன், புண்ணியமூர்த்தி

நம்மிடம் பேசிய கீழத்தூவல் இன்ஸ்பெக்டர் தங்கமணி, ‘‘குளத்துக்குள்ளிருந்து வாசுகியின் மண்டையோடு மற்றும் எலும்புகளை மீட்டு சோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். கொலை செய்ததை ஒப்புக்கொண்ட மாதவன் உள்ளிட்ட மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலும் விசாரணை தொடர்கிறது’’ என்றார்.

இவ்வளவு மோசமான ஆண்களைக்கொண்டதா நம் சமூகம்... ஆண் குழந்தைகளுக்கு, பெண்கள் மீதான மதிப்பைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் நண்பர்களே!