ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், அங்கே வசிக்கும் தாய்மார்களை, 10 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

10 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களை ஊக்கப்படுத்த, சோவியத் ஆட்சிக்காலத்தில் ஜோசப் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட `மதர் ஹீரோயின் (Mother Heroine)’ என்ற கௌரவ பட்டம் அளிக்கப்பட உள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது ரஷ்யா அதிகமான உயிரிழப்புகளை எதிர்கொண்டது. அதைச் சமன்செய்ய 1944-ம் ஆண்டில் ஜோசப் ஸ்டாலின் இந்தக் கௌரவ பட்டத்தைத் தொடங்கினார்.
அதன் பிறகு, இந்தக் கௌரவப் பட்டத்தை 4,00,000-க்கும் மேற்பட்ட குடிமக்கள் பெற்றனர். ஆனால் 1991-ம் ஆண்டில் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் இந்தக் கௌரவப் பட்டம் அகற்றப்பட்டது. இந்நிலையில், நாட்டின் மக்கள்தொகை சரிவைத் தடுக்க, புதின் மீண்டும் இந்த விருதை உயிர்ப்பித்துள்ளார்.

அதாவது 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு, அந்த 10-வது குழந்தை ஒரு வயதை அடையும் போது, ஒரே ஒரு முறை மட்டும் 1 மில்லியன் ரூபிள் (இந்திய மதிப்பில் 13 லட்சம்) வழங்கப்படும். அதுவும் அந்தத் தொகையைப் பெறுவதற்கு மற்ற 9 குழந்தைகளும் உயிருடன் இருந்தாக வேண்டும். ஒருவேளை தீவிரவாத செயல்கள் அல்லது ஆயுத மோதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் சில விதிவிலக்குகள் இருக்கும்.
`மதர் ஹீரோயின்’ என்ற இந்தப் பட்டத்தை வென்றவர்களுக்கு, ரஷ்யக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட தங்கப் பதக்கங்களும் வழங்கப்படும். மேலும் இந்த கௌரவ பட்டமானது ரஷ்யாவில் வழங்கப்படும் பிற பட்டங்களான `ஹீரோ ஆஃப் லேபர்’ மற்றும் `ஹீரோ ஆஃப் ரஷ்யா’ போன்ற பட்டங்களின் கௌரவத்துக்கு நிகரானது எனத் தெரிவிக்கப்படுகிறது.