தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

மானசி ஜோஷி
பிரீமியம் ஸ்டோரி
News
மானசி ஜோஷி

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

சாம்பியன் சிந்து!

மீபத்தில், பேசல் நகரில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி யில் விளையாடி, உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் பி.வி.சிந்து. ஜப்பானின் தலைசிறந்த ஆட்டக் காரரான நொசோமி ஒகுஹராவை 21-7, 21-7 என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்துத் தங்கம் வென்றார். 38 நிமிடங்கள் நீடித்த இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே சிந்துவின் கை ஓங்கியிருந்தது. இந்த வெற்றியின் மூலம், நாட்டின் முதல் பேட்மின்டன் உலக பெண் சாம்பியன் என்ற பெருமையைப் பெறுகிறார், சிந்து.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

சிந்துவை தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய பிரதமர் மோடி, `திறமைசாலியான சிந்து, இந்தியாவை மீண்டும் பெருமைப் படுத்தியிருக்கிறார். அதீத ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டு அவர் விளையாடுவது மற்றவர்களுக்குப் பெரும் நம்பிக்கை தருவதாக உள்ளது' என்று கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், `நீங்கள் வெற்றிபெற்றிருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை. மைதானத்தில் உங்கள் மேஜிக், கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவை லட்சக்கணக்கான மக்களை உற்சாகப்படுத்துகின்றன' என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிபெற்ற சிந்து, ``ஒருவழியாக நான் தேசிய சாம்பியன் ஆகிவிட்டேன்'' என்று கூறிவிட்டு, ``ஸாரி, ஸாரி... உலக சாம்பியன்'' என்று கூறி சிரிக்கிறார்.

வாழ்த்துகள் சிந்து!

இறந்த ராணுவ வீரரின் மனைவிக்கு ரக்‌ஷா பந்தன் பரிசு!

த்தியப்பிரதேசத்தின் இந்தூர் நகரை அடுத்த பெத்மா என்ற சிற்றூரைச் சேர்ந்தவர், ராஜு பாய். இவரின் கணவர் ஹவில்தார் மோகன் சிங் சுனேர், ராணுவ வீரர். 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தெற்கு திரிபுராவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். அதன்பின், பெத்மா கிராமத்தில் தன் இரு குழந்தைகளுடன், சிதிலமடைந்த பழைய வீட்டில் கணவரின் சொற்ப ஓய்வூதியத்தை மட்டும் பெற்றுக்கொண்டு தனியே வசித்துவருகிறார் ராஜு பாய். சென்ற ஆண்டு ரக்‌ஷா பந்தன் நாளன்று, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு கைகளில் ராக்கி கயிற்றைக் கட்டி தன் சகோதரர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களைச் சிறப்பித்தார் ராஜு பாய்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ராக்கி கட்டிய அவர்மீது பாசம்கொண்ட அக்கம்பக்கத்து இளைஞர்கள் 20 பேர் ஒன்றிணைந்து, அவருக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என்று முடிவெடுத்தனர். `ஒரு செக், ஒரு கையெழுத்து' என்று தலைப்பிட்ட இயக்கம் ஒன்றை முன்னெடுத்து, ராஜு பாய்க்கு வீடு கட்டித்தர பணம் திரட்டினார்கள். சுமார் 11 லட்ச ரூபாய் சேர்ந்ததும், ராஜு பாயின் பழைய வீட்டை இடித்துவிட்டு, புதிய வீடு கட்டும் பணி தொடங்கியது. வீட்டு வேலை முடிந்து, இந்த வருடம் வந்த ரக்‌ஷா பந்தன் அன்று, தன் சகோதரர்களின் கைகளில் ராக்கியைக் கட்டி, புது வீட்டுக்குள் குடிபுகுந்தார், ராஜு பாய்.

வீடு கட்டித்தந்த இளைஞர்கள், அடுத்து மோகன் சிங் சுனேருக்குத் தங்கள் கிராமத்தின் முக்கிய சாலையில் சிலை அமைக்கவிருப்பதாகவும், அவர்கள் படித்த அரசுப் பள்ளியின் பெயரை `மோகன் சிங் பள்ளி' என்று மாற்ற அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

அமெரிக்க விண்வெளி மையம் செல்லும் மதுரை மாணவி!

மிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தான்யா தஸ்னம். Go4Guru அமைப்பு சமீபத்தில் நடத்திய அறிவியல் திறமை மற்றும் பொது அறிவுப் போட்டிகளில் வென்றுள்ள இவர், இன்னும் இரு மாணவர்களுடன் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவுக்கு செல்லவிருக்கிறார். கிராமப்புற மாணவர்களை உற்சாகப்படுத்த நடத்தப்படும் இந்த அறிவுத் திறன் போட்டிகளில் முதலிடம் பெற்றார் தான்யா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

மதுரை மாவட்டம் கடைச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த தான்யா, வரும் அக்டோபர் மாதம் இன்னும் இரு மாணவர்களுடன் சேர்ந்து நாசாவைப் பார்வையிட உள்ளார். அதோடு, நாசா விஞ்ஞானிகளோடு கலந்துரையாடலும் உண்டு. இந்த மாணவர்களுக்கான விமானப் பயணச் சீட்டு வழங்கல் மற்றும் அறிமுக விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற விண்வெளி வீரர் டான் தாமஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் கௌரவிக்கப்பட்டார் தான்யா.

``ஐந்தாவது படிக்கும்போதே விண்வெளி வீரராக வேண்டும்; அமெரிக்காவின் நாசாவுக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது'' என்று கூறியுள்ளார் தான்யா.

விண்வெளிப் பெண்ணுக்கு வாழ்த்துகள்!

சென்னையில் `அம்மா பட்ரோல்' பாதுகாப்பு!

மிழக அரசு சமீபத்தில், சென்னை நகர மகளிர் பாதுகாப்புக்கென இளஞ்சிவப்பு வண்ண இன்னோவா கார்களை ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறது. மகளிர் மற்றும் சிறார் உதவிக்கென அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிர்பயா நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட 6.8 கோடி ரூபாயில், 40 புதிய இன்னோவா கார்கள் இந்தத் திட்டத்துக்கென வாங்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா நினைவாக `அம்மா பட்ரோல்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி, இந்த வாகனங்கள், பெண்களுக்கு எதிராக நகரில் குற்றச் சம்பவங்கள் நடந்த இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும். அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றும் மகளிர் காவல் அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

சுழல் விளக்குகள், சைரன்கள், ஜிபிஎஸ் போன்றவை பொருத்தப்பட்டுள்ள இந்த வாகனங்களில், முன் மற்றும் பின்புறக் கண்ணாடி களில் கேமராக்கள் மூலம் காணொலிக் காட்சிகள் தொடர்ச்சியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். அதில் வரும் காட்சிகளின்படி அதிக காவலர்கள் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், ஏடிஜிபி சு.அருணாசலம் தலைமையில் அமைக்கப்பட்ட `மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரி'வின் கீழ், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் அம்மா பட்ரோல் ஆகியவை இயங்கும்.

அப்பாடா… வந்தாச்சு அம்மாடா!

மாபெரும் சாதனை படைத்த மானசி ஜோஷி!

சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில், உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்று உலக சாம்பியன் பட்டம் சூடினார். அவரைப் போலவே தன் முதல் தங்கப்பதக்கத்தை வென்று உலக சாம்பியனாகி இருக்கிறார், பாரா பேட்மின்டன் வீராங்கனை மானசி ஜோஷி.

30 வயதான மானசி, மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பாருல் பார்மரை 21-12, 21-7 என்ற செட்டுகளில் தோற்கடித்தார். இந்திய பாராலிம்பிக் கமிட்டியிடம் பேசிய மானசி, ``மிகவும் சிரத்தை எடுத்து உழைத்தேன்; ஒரு நாளைக்கு மூன்று முறை பயிற்சி எடுத்தேன். ஃபிட்னஸ் மிகவும் முக்கியம் என்பதால் அதன்மீது என் கவனம் இருந்தது. கொஞ்சம் எடை குறைத்து, தசைகளை வலுப்படுத்தினேன். ஜிம்மில் வாரத்துக்கு ஆறு நாள்கள் பயிற்சி எடுத்தேன்'' என்று கூறினார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

``கடந்த 2015-ம் ஆண்டு முதல் விளையாடி வந்தாலும், உலகப் போட்டிகளில் தங்கம் வென்றது, கனவு நனவானதைப் போல இருந்தது'' என்றும் கூறியுள்ளார் மானசி. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற கொடூர விபத்து ஒன்றில் சிக்கிய மானசியின் கைகளும் கால்களும் உடைந்தன. மருத்துவமனை செல்லவே மூன்று மணி நேரம் ஆனது; அறுவை சிகிச்சை செய்ய 10 மணி நேரமும், ஆபரேஷன் தியேட்டரில் 12 மணி நேரமும் செலவிட்டும், அவரது இடது கால் அழுகிப்போனதால், வெட்டி எடுக்கப்பட்டது.

2012-ம் ஆண்டு செயற்கைக் கால் பொருத்தப்பட்டு, மீண்டும் நடை பழகினார். கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுத்து, பேட்மின்டன் விளையாடத் தொடங்கினார். 2014-ம் ஆண்டு பாரா ஆசியப் போட்டிகளில் பங்கேற்ற மானசி, அதன்பின் தொடர்ச்சியாக பல பதக்கங்களை வென்றுள்ளார்.

மானசிக்கு நம் மானசீக வாழ்த்துகள்!

அவள் செய்திகள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

மும்பை நகரைச் சேர்ந்த 58 வயது சுமைரா அப்துல் அலி, கடந்த 17 ஆண்டுகளாக மும்பை நகரில் ஒலி மாசுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகிறார். மும்பை நகரில் கிட்டத்தட்ட 2,000 பொது இடங்கள் `சைலன்ட் ஸோன்' என்ற ஒலியில்லாப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், சுமைராவின் தொடர் போராட்டம்தான்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ந்தியாவின் இரண்டாவது பெண் ஐபிஎஸ் அதிகாரியும், முதல் பெண் டிஜிபி-யுமான கஞ்சன் சௌத்ரி, சமீபத்தில் மும்பை நகரில் காலமானார்.

72 வயதான கஞ்சன், மிகச் சாதாரண பின்புலத்தில் இருந்து, தன் தந்தைக்கு நடந்த அநீதியைத் தட்டிக்கேட்க வேண்டும் என்ற வேட்கையில் காவல்துறை பணிக்கு வந்தவர்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வுகளில், பெண்கள் `மல்டி டாஸ்கிங்' என்ற பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறமை பெற்றவர்கள் என்று சொல்லப்படுவது தவறு என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆண்களைவிட பெண்கள் அதிக வேலைப்பளு சுமப்பதால், அதிக மனம் மற்றும் உடல் அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

புலம் பெயர்ந்த ஆப்பிரிக்கர்களின் வாழ்க்கைக் கதைகளைப் பற்றி `பிரவுன் கேர்ள்ஸ்', `பிரவுன் ஸ்டோன்ஸ்' போன்ற நாவல்களை எழுதிய பால் மார்ஷல், சமீபத்தில் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 90. இனக்குழுக்கள் நிலை, பாலின சமத்துவம், புலம் பெயர்தல் போன்ற முக்கியப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து எழுதிவந்தார் அவர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

மேற்கு வங்க ராணாகாட் ரயில் நிலைய நடைமேடையில் தங்கியிருந்த ரேணு மண்டல் அற்புதமாகப் பாட, அதை வீடியோ எடுத்து பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். வைரலான அந்தப் பாடல் மூலம் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமியாவின் திரையிசைப் பாடல் பாட ரேணுவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது! நடிகர் சல்மான் கான், ரேணுவுக்கு 55 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை வழங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்மிதா குல்கர்னி, கர்மவீர் சக்ரா விருது தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஐகாங்கோ மற்றும் ஐ.நா சபை இணைந்து வழங்கும் இந்த விருதுகள், சமூக மாற்றம் ஏற்படுத்தும் குடிமக்களைப் பாராட்டி வழங்கப்படுபவை. `ஸ்வச்ச தொத்தனெகுன்டி' மற்றும் `ஒயிட்ஃபீல்டு ரைசிங்' போன்ற மக்கள் நல தன்னார்வ அமைப்புகளில் களப் பணியாற்றி வருகிறார், ஸ்மிதா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பார்பி பொம்மைகள் தயாரிக்கும் மேட்டல் நிறுவனம், சமீபத்தில் ரோசா பார்க்ஸ் மற்றும் சாலி ரைடு பார்பி பொம்மைகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. சிறுமிகள் விளையாடும் பொம்மைகள், அவர்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும் என்று சமீபகாலமாக கவிஞர் ஃப்ரீடா காலோ, விமான ஓட்டி அமேலியா இயர்ஹார்ட் போன்ற சாதனைப் பெண்களின் பொம்மைகளை அறிமுகப்படுத்தியது போல, அமெரிக்கக் கறுப்பின மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த ரோசா பார்க்ஸ் மற்றும் அமெரிக்காவின் மிக இளம் வயது விண்வெளி வீராங்கனையான சாலி ரைடு ஆகியோரின் பொம்மைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

டலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், ரியோவில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டிகளின் 10 மீட்டர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ர்ணாகுளம் மாவட்டம் வளையசிரங்கரா அரசுப் பள்ளியில், மாணவ மாணவிகள் அனைவருக்கும் பாலின பேதமற்ற ஒரே சீருடை வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நான்காம் வகுப்பு வரை சிறுவர், சிறுமியருக்கு ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் சீருடைதான். பள்ளி முதல்வர் ராஜி, ``ஷார்ட்ஸில் உள்ள பாக்கெட்டுகள் சிறுமிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன'' என்று சொல்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

வ்வோர் ஆண்டும் இந்தியாவில் 12 லட்சம் சிறுமிகள் விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறும் வழக்கறிஞர் ஃப்ரான்சிஸ் கிராசியஸ், நீதி பள்ளி ஒன்றைத் தொடங்கி, நாடு முழுதும் உள்ள இது போன்ற சிறுமிகளின் சட்டக்கல்விக்கு உதவிவருகிறார். சிலாட் எனப்படும் சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வெழுத இந்தச் சிறுமிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர் உதவியால் சட்டம் பயின்ற மாணவிகள், விபசாரத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் தீவிர களப்பணி ஆற்றுகின்றனர்.