
கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் `நீட்'டுக்கு எதிராக முழங்கிய தமிழ்ப் பெண்
ஐ.நா சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு அமர்வு அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்றது. அதில் மதுரை மாவட்டம் இளமனூரைச் சேர்ந்த மாணவி பிரேமலதா பங்குகொண்டார். ஆதிதிராவிடர் பள்ளியில் பயின்று இப்போது கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்துவரும் பிரேமலதா, பள்ளியிலேயே மனித உரிமைக் கல்வி கற்றவர். "நான் பிறந்த நேரம் முதலே என் மீதான சாதிய அடக்குமுறை ஆரம்பித்துவிட்டது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று பிரித்துப் பார்த்து சாதி அடிப்படையில் குழந்தைகள் மனத்தில் பிரிவினையை உண்டாக்குவதை மனித உரிமைப் பாடங்கள் பயின்றபோது தெரிந்துகொண்டேன். இந்தியாவில் இப்போதைய கல்வி முறை இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைவதாக இல்லை. நீட் தேர்வு முறை ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வேறுபாட்டை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது" என்று தன் உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

``நீட் தேர்வால் நேரடி பாதிப்புக்குள்ளான அனிதா என்ற மாணவி தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டார். நீட் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் நீடித்த வளர்ச்சி கல்வியில் எப்படிச் சாத்தியமாகும்?'' என்று கேள்வியும் எழுப்பினார் பிரேமலதா.
நிச்சயம் சமத்துவ சமுதாயம் மலரும்… வாழ்த்துகள்!
குடியரசுத் தலைவர் விருதுபெற்ற சென்னை ஐ.ஐ.டி-யின் முதல் பெண்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் சமீபத்தில் 56-வது பட்டமளிப்பு விழாவைச் சிறப்பாக நடத்தியது. இந்தியப் பிரதமர் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த விழாவில், `குடியரசுத் தலைவர் விருது' பெற்றார் கவிதா. இந்த விருதைப் பெற்ற முதல் பெண் என்ற சிறப்பையும் பெற்றார். இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணினித்துறை பி.டெக் பட்டம் பெற்ற கவிதா, 9.95 என்ற ஜிபிஏ மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது தவிர, விஸ்வேஸ்வரய்யா நினைவுப்பரிசு மற்றும் பி.ரவிச்சந்திரன் நினைவுப்பரிசு ஆகிய இரு பரிசுகளையும் வென்றிருக்கிறார். அணுப்புரம் அணுசக்தி மத்தியப் பள்ளியிலும், கல்பாக்கம் கேந்திரிய விஹார் பள்ளியிலும் பயின்ற கவிதா, இப்போது பெங்களூரில் உள்ள கூகுள் அலுவலகத்தில் கணினிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். `விருப்பத்துடன் படித்தேன்; கடினமாக உழைத்தேன்' என்று தன் வெற்றிக்கான காரணங்களை ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறார் கவிதா.
வாழ்த்துகள் கவிதா!
ஜெர்மன் மொழியில் முனைவர் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண்
மும்பையைச் சேர்ந்த 31 வயது பார்வையற்ற பெண் ஊர்வி ஜங்கம். பார்வையை முழுவதுமாக இழந்த ஊர்வி, நாட்டின் முதல் ஜெர்மன் மொழி முனைவர் பட்டம் வென்றிருக்கிறார். `ஆதிருஷ்ய ரசா' என்ற தலைப்பில் இவர் சமர்ப்பித்திருக்கும் ஆய்வு, பார்வையற்றவர்கள் பிற உணர்ச்சிகள்கொண்டு தன் முன் இருப்பதை உணர்வதைக் குறித்ததாகும். ``பார்வையற்றவன் ஒரு காட்சியை எப்படி விளக்குவான் என்பது குறித்த ஆய்வு இது. தொடுதல், நுகர்தல், கேட்டலுடன் தன் கற்பனையும் கலந்து பார்வையற்ற ஒருவன் காட்சியை விளக்குவது, சில நேரங்களில் சாதாரண நபர்கள் கவனிக்காமல் கடந்து போகும் காட்சிகளைத்தான்'' என்று விளக்குகிறார் ஊர்வி.

``பார்வையற்றவர் நடக்கும்போது தன் தொடுதல் மூலம் தன்னைச் சுற்றியிருக்கும் செடி கொடிகளை, விலங்குகளை அடையாளம் கண்டுகொள்வார். விலங்குகளின் காலடி ஓசை, மலர்களில் நறுமணம், ஓடும் நீரின் ஓசை... இவற்றோடு தன் மனத்தின் உள்ளார்ந்த அன்பு மற்றும் கற்பனைகொண்டு காட்சியை மீட்டுருவாக்கம் செய்ய முடியும்'' என்றும் கூறுகிறார் ஊர்வி. பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர் காட்சிப்படுத்துவதற்கும், இடையே பார்வை பறிபோன ஒருவர் காட்சிப்படுத்துவதற்கும் இடையேயான வேறுபாட்டையும் ஆராய்ந்திருக்கிறார் ஊர்வி. மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஊர்வி, ஜெர்மனியிலும் படிப்பைத் தொடர்ந்தார். பார்வையற்றவர் படைப்புகளில் உள்ள அழகியலைப் பேசுகிறது ஊர்வியின் ஆதிருஷ்ய ரசா.
வாழ்த்துகளும் நேசமும் ஊர்வி!
13 மணி நேரம் பின்னோக்கி ஓடி சாதனை படைத்த குஜராத் பெண்கள்
காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவுள்ள பர்தோலி என்ற இடத்திலிருந்து தண்டி வரை பின்னோக்கியே ஓடும் தங்கள் சாதனை ஓட்டத்தை சமீபத்தில் நிகழ்த்தினர் ட்விங்கிள் தாகர் மற்றும் ஸ்வாதி தாகர் என்கிற இரண்டு பெண்கள். இந்த 13 மணி நேரத்தில் 53 கிலோமீட்டர் தொலைவைப் பின்னோக்கி ஓடிக் கடந்துள்ளனர். இதுகுறித்து ட்விங்கிள் தாகர் கூறும்போது, ``இந்த ஓட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஆனால், எங்கள் குடும்பத்தினர் எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தனர். தங்கள் திறமையை வெளிப்படுத்த பெண்கள் முன்வர வேண்டும். அதற்கு அவர்களுக்குத் தேவையான ஆதரவும் வழங்கப்பட வேண்டும். ஆதரவு இருந்தால், எந்தப் பெண்ணும் வென்றுவிடுவாள்'' என்று தெரிவித்தார்.

``ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஓர் ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலைச் சரியாக அடையாளம்கண்டு தங்களை நிரூபிக்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார் ஸ்வாதி. இவர்களது ஓட்டத்தின் காணொலிக்காட்சிகள் கின்னஸ் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், இவர்கள் சாதனை, கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்படும்.
கின்னஸில் இடம்பெற வாழ்த்துவோம்!
அவள் செய்திகள்
தோகா நகரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் பிரிவில் மூன்றாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் ரஷ்ய வீராங்கனை மரியா லாசிட்ஸ்கீன். 2.04 மீட்டர் உயரத்தை சுலபமாகத் தாண்டிய மரியா, `நியூட்ரல் அத்லீட்' என்ற எந்த நாட்டையும் சாராத பிரிவில் பங்கேற்று இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு தடகளப் போட்டிகளில் ரஷ்ய அணியினர் பலர் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டுக்குத் தடகளப் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், `எந்த நாட்டையும் சாராதவர்' பட்டியலில் போட்டியிட்டு வென்றுள்ளார் மரியா.

90 வயதான பிரபல பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கைத் தொடங்கியுள்ளார். தன் தங்கை மீனா கடிகர் எழுதி வெளியிட்டுள்ள `தீதி அவுர் மைன்' என்ற லதாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்துடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள லதா, `வணக்கம். இன்று முதல் உங்களுடன் இன்ஸ்டாகிராமில் இணைந்திருப்பேன்' என்று அதில் தெரிவித்துள்ளார். அதற்குள் 52,000 ஃபாலோயர்கள் லதாவின் கணக்கைத் தொடரத் தொடங்கியுள்ளனர்.
தோகா உலகத் தடகளப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார் சல்வா ஈத் நாசர் என்ற பெண்மணி. 48.14 மணித்துளிகளில் சல்வா இந்த தூரத்தைக் கடந்ததன் மூலம் இந்த வேகத்தை எட்டிய உலகின் மூன்றாவது பெண் என்ற பெருமையைப் பெறுகிறார். பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த சல்வா 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற முதல் ஆசியப் பெண் என்ற சிறப்பையும் பெறுகிறார்.
அமெரிக்காவின் டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் கால்சட்டை ஒன்றை சமீபத்தில் வாங்கினார் ஒன்பது வயதான சுட்டிப்பெண் எலியனார் வாட்டர்மேன். பள்ளிக்குப் போட்டுச் செல்ல வாங்கிய கால்சட்டையில் பாக்கெட்டுகள் இல்லாமல், அதுபோன்ற அமைப்பு மட்டுமே இருந்தது கண்டு வெகுண்டுவிட்டார். சிறுவர்களுக்கான கால்சட்டையில் முறையாக பாக்கெட் தைக்கப்பட்டிருந்தது. டெஸ்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் லீவைஸுக்கு, இந்தப் பாரபட்சம் குறித்து காட்டமாகக் கடிதம் எழுதினார் சிறுமி. சிறுமிக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பிய டெஸ்கோ, மன்னிப்பு கோரி பத்து டாலர் கூப்பனும் அனுப்பி அவர் விரும்பிய கால்சட்டையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறது.

தோகா தடகளப் போட்டிகளில் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் தூரத்தை 10.71 செகண்டுகளில் கடந்து தங்கம் வென்றிருக்கிறார் 32 வயதான ஷெல்லி ஆன் ஃபிரேசர் பிரைஸ். உலகின் மிக வேகமான வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் ஷெல்லி, நான்காவது முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீயொன் என்ற மகனைப் பெற்றெடுத்தார் ஷெல்லி. பிள்ளை பெற்ற பின்னும் வெற்றிபெறக் காரணம், தொடர் பயிற்சியும் விடாமுயற்சியும் மட்டுமே என்று கூறுகிறார் ஷெல்லி.
பில் கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ் தன்னுடைய `பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்' மூலம் ஆண் பெண் சமத்துவத்துக்காகவும் மகளிர் நலனுக்காகவும் ஒரு பில்லியன் டாலர் பணம் செலவிடப் போவதாக அறிவித்துள்ளார். அடுத்த பத்து ஆண்டுகளில் இதன் மூலம் அமெரிக்காவில் பெண்கள் பங்கேற்பை மேம்படுத்தவிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தவும், பெண்ணுரிமை மீறலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

43 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் பங்கேற்கும் பெண் என்ற பெருமையை அடையவிருக்கிறார், 26 வயதான கொலம்பியா நாட்டு ரேஸர் தாதியானா கால்தெரோன். ஃபார்முலா 2 கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் பெண்ணும் இவரே. 17 வயது முதல் கார் பந்தயங்களில் பங்கேற்றுவரும் தாதியானா, ``ஃபார்முலா 1-ல் பங்கேற்க முழு முயற்சி எடுப்பேன். 2020 வரை ஃபார்முலா 2 ரேஸிங்கில் என் திறமையை நிரூபிப்பேன்'' என்று கூறுகிறார்.
2018-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு போலந்து நாட்டைச் சேர்ந்த ஓல்கா டோகார்ஸூக் என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. `நாவலாசிரியரான 57 வயதான டோகார்ஸுக்கின் எல்லைகள் கடந்த தேடலையும் பேரார்வத்தையும் வெளிப்படுத்தும் படைப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது' என்று நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.
ஆறு முறை உலக சாம்பியனான குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் (வயது 36) உலக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். 51 கிலோ எடை பிரிவில் முதன்முறையாகக் களம் கண்டு, காலிறுதி போட்டியில் கொலம்பிய வீராங்கனையான இங்கிரிட் வெலன்சியாவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப்பில் தனது எட்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதுவரை ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து எந்த ஒரு வீரரும் செய்யாத புதிய உலக சாதனை இது!

இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஆசாதி விளையாட்டு மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஃபீஃபா தகுதிச் சுற்று கால்பந்தாட்டப் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின், பெண்கள் பார்வையாளர்களாக இந்தப் போட்டியில் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 3,500 பெண்கள் இந்தப் போட்டியை கண்டுகளித்தனர். கடந்த மாதம் `நீலப் பெண்' என்று அழைக்கப்படும் சஹர் கோதயாரி என்ற 29 வயதுப் பெண்மணி அரசின் கட்டுப்பாட்டை மீறி கால்பந்தாட்டப் போட்டிகளை ஆணுடையில் கண்டுகளித்து சிக்கிக்கொண்டார். கைது செய்யப்பட்டவர் தன்னைத்தானே எரித்து தற்கொலை செய்துகொண்டார். கோதயாரியின் மரணத்துக்குப்பின் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பெண்களுக்குக் கால்பந்தாட்ட மைதானங்களில் நுழைய அனுமதி அளித்துள்ளது இரானிய அரசு.