Published:Updated:

பணத்தைத் தொலைத்த கணவர், காரணம் தெரியாத மர்மம்; கண்டுபிடிப்பது எப்படி?

பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

நாங்கள் ஒரு சிறு நகரத்தில் மாமனார், மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். கணவர் தொழில் செய்துவந்தார். நல்ல வருமானம். ஆனால், சில காலமாகவே பதற்றமாகக் காணப்பட்டார். என்ன பேசினாலும், கேட்டாலும் கோபப்பட்டார். இந்நிலையில் எட்டு மாதங்களுக்கு முன், உறவினர்கள், நண்பர்கள், வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் என்று பலரும், கைமாற்றாகவும், கடனாகவும் என் கணவர் `தங்களிடம் 50,000 ரூபாய் வாங்கினார், ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கினார், இரண்டு லட்சம் ரூபாய் வாங்கினார். ஆனால், திருப்பிக் கொடுக்கவில்லை' என்றெல்லாம் கூறி வீடு தேடி வர ஆரம்பித்தனர். அதிர்ந்துபோனோம் நாங்கள்.

பணத்தைத் தொலைத்த கணவர், காரணம் தெரியாத மர்மம்; கண்டுபிடிப்பது எப்படி?

என் கணவரிடம் நான் விசாரித்தபோது, `தொழிலில் திடீர் நஷ்டம், கடன் வாங்க வேண்டியதாகிவிட்டது’ என்றார். ஆனால், எங்கள் பிசினஸ் பார்ட்னரோ, நன்றாகச் சென்றுகொண்டிருந்த தொழிலில் இருந்து தான் திடீரென வெளியேறுவதாகச் சொன்ன என் கணவர், ஒரு மாதத்துக்கு முன்னர்தான் செட்டில்மென்ட் பணம் வாங்கிக்கொண்டதாக அடுத்த அதிர்ச்சி கொடுத்தார். நாங்கள் கணவரிடம் விசாரித்தபோது, `பார்ட்னர் சொல்வதை நம்பாதீர்கள், அவரால்தான் தொழிலில் நஷ்டம், ஏமாற்றிவிட்டார், அதனால்தான் தொழிலில் இருந்து வெளியேறினேன்’ என்று புதிதாக ஒரு காரணத்தைக் கூறினார்.

இதற்கிடையில், லாக்கரில் இருந்த என் 80 பவுன் நகையையும் எடுத்து கணவர் அடகு வைத்தது தெரியவந்தது. அவரிடம் மீண்டும் விசாரித்தபோது, தொழிலில் நஷ்டம் என்று பழைய கதையையே சொன்னார். ஆனால், தொழிலிலிருந்தே வெளியேறிய பின்னரும், பலரிடமும் கடன் கேட்பதை அவர் நிறுத்தவில்லை. உறவுகள், நட்பு வட்டத்தில் மீண்டும் 8, 10 பேர், என் கணவர் தங்களிடம் கைமாற்றாக, வட்டிக் கடனாகப் பணம் பெற்றதாகவும், மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்தப் பதிலும் சொல்லவில்லை, போனில் அழைத்தால் எடுப்பதில்லை என்றும் வீடு தேடி வந்தனர். இந்நிலையில்தான், நாங்கள் வசிக்கும் வீட்டின் பத்திரத்தையும் பெரிய தொகைக்கு அவர் அடகு வைத்தது என் மாமனாருக்குத் தெரியவந்தது. இப்போது, வீட்டில் அவரை இன்னும் தீவிரமாக விசாரித்தோம்.

பணத்தைத் தொலைத்த கணவர், காரணம் தெரியாத மர்மம்; கண்டுபிடிப்பது எப்படி?

நான், என் மாமனார், மாமியார், கணவரின் தம்பி என்று அனைவரும் தனித்தனியாகவும், ஒன்றாகச் சேர்ந்தும் அவரிடம் கேட்டுப் பார்த்துவிட்டோம். ஆனாலும், மழுப்பலே அவர் பதிலாக இருக்கிறது. நாங்கள் கடுமையாகக் கேட்க, ஒரு கட்டத்தில், `ஏற்கெனவே கடன் பிரச்னை. அதை நம்பாம இப்படி எல்லாரும் சேர்ந்து என்னை டார்ச்சர் பண்ணினா தற்கொலை செய்துக்குவேன்’ என்று அவர் சொல்ல, நாங்கள் அனைவரும் பதறிப்போய் அதற்கு மேல் அவரிடம் எதுவும் கேட்காமல் நிறுத்திக்கொண்டோம். முடிந்தவரை, என் மாமனார் அவர் வாங்கிய கடனில் 50% அடைத்துள்ளார். மீதிக் கடன் இருக்கிறது.

கணவருக்கு சிகரெட், குடி என்று எந்தக் கெட்டபழக்கமும் இல்லை. ஆன்லைன் சூதாட்டம் பற்றியெல்லாம் அறியாதவர். பெண் தொடர்பு எதுவும் இல்லை. எப்போதுமே அகலக்கால் வைக்காத கெட்டிக்காரர். ஆனாலும், எதற்காக இவ்வளவு கடன் வாங்கினார், அதையெல்லாம் எங்கேதான் தொலைத்தார் என்பது எங்களுக்கு மர்மமாகவே உள்ளது. கூடவே, அவர் ஏதாவது பிரச்னையில் சிக்கி அதை எங்களிடம் மறைக்கிறாரா என்று குழப்பமாகவும் அச்சமாகவும் இருக்கிறது. என்னதான் நடந்தது என எப்படி அறிவது?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)