என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

பட்டங்கள் ஆளட்டும்... சட்டங்கள் செய்யட்டும்...

உ.வாசுகி, கனிமொழி, வானதி, விஜயதரணி
பிரீமியம் ஸ்டோரி
News
உ.வாசுகி, கனிமொழி, வானதி, விஜயதரணி

#Motivation

`பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ - பாரதியாரின் வரிகளில் `பட்டங்கள் ஆள்வதில்' ஓரளவுக்கு பெண் சமுதாயம் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், `சட்டங்கள் செய்யும்' அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ‘ஆண், பெண் பேதமில்லை’ என்று மைக் பிடித்துப் பேசுவோர்கூட 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு அசையவில்லை.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் பெண்களைக் கொண்டாடத் தயாராகிவரும் சூழலில், `பெண்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும், அரசியலில் பெண்களுக்கு என்னென்ன தடைகள் இருக்கின்றன...' என்று அரசியல் பெண் பிரபலங்கள் சிலரிடம் கேட்டோம்.

பட்டங்கள் ஆளட்டும்... சட்டங்கள் செய்யட்டும்...

''உ.வாசுகி, துணைத் தலைவர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம்

``கட்சி அரசியல் மட்டும் அரசியல் அல்ல. நம்முடைய உரிமை, நலன் சார்ந்த எல்லா விஷயங்களுக்கும் குரல் கொடுப்பதும் அரசியல்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளுக்கு பெண்கள் அதிகம் வர வேண்டும். 33 சதவிகித ஒதுக்கீட்டுக்கே பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 50 சதவிகிதம் ஒதுக்கீடு உள்ளாட்சி தேர்தலில் வழங்கப்படுகிறது. வார்டு உறுப்பினராகப் பெண்கள் வருவது இயல்பாகிவிட்டது. எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளுக்கு வர வேண்டுமென்றால் அதிக செலவாகும் என்ற எண்ணம் இருக்கிறது. வார்டு உறுப்பினர் பொறுப்பிலும் ஆணாதிக்கம் தடையாக இருக்கிறது. பெண் தேர்ந்தெடுக்கப்படுவார். வேலைகளை கணவரோ, மாமனாரோதான் பார்ப்பார். இறுதியில் பெண்களுக்குப் பணியாற்றும் திறன் இல்லை. அவர்களைத் தேர்ந்தெடுப்பது வீண் என்றும் முத்திரை குத்திவிடுவார்கள். பட்டியலினத்தவர்கள், அருந்ததியர் வகுப்பினர் போன்றவர்களுக்கு சாதிய ஆதிக்கம் தடையாக இருக்கிறது.

ஒட்டுமொத்த குடும்பப் பணிகளின் பாரம் பெண்கள் தலையில் இருப்பதும், கிராமப்புறங்களில் நிலவும் பாதுகாப்பின்மையும் தடைகள்தான். ஆனால், இந்தத் தடைகள் அனைத்தும் நீடிக்க வேண்டிய அவசியமே கிடையாது. குடும்பம் என்ற அமைப்பும் அரசு தலையீடும் வலுப்பட்டால் இந்தத் தடைகளை ஊதித்தள்ளிவிட்டு பெண்களால் முன்னேறி வர முடியும்.''

பட்டங்கள் ஆளட்டும்... சட்டங்கள் செய்யட்டும்...

கனிமொழி, நாடாளுமன்ற தி.மு.க குழு - துணைத் தலைவர்

``உண்மையான ஜனநாயகம் அனைவரையும் உள்ளடக்கியது தான். அரசியல் மட்டுமல்ல; எந்தத் துறையாக இருந்தாலும் பொதுத்தளத்துக்குள் பெண்கள் வரும்போது, அவர்களுடன் இடத்தைப் பகிர்ந்துகொள்வதில் ஆண்களுக்குத் தயக்கம் இருக்கிறது. வேலைக்குச் செல்வதற்கோ, குடும்பத்துக்காக உழைப்பதற்கோ எந்த விதத்திலும் ஆணுக்குப் பெண்கள் சளைத்தவர்கள் அல்லர். ஆனால், பிடித்ததைச் செய்வதற்கு, சொத்துகளை வாங்குவதற்கு, விற்பதற்கு சுயமாக முடிவெடுத்துச் செயல்படும் உரிமைகொண்ட பெண்கள் உலக அளவில் ஒரு சத விகிதம் இருந்தாலே பெரிய விஷயம்.

பெண்கள் அரசியலுக்கு வரும்போது தங்கள் குடும்பத்தையும் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அரசியலில் தேர்தல் தேவைகளுக்காகச் செலவு செய்வதற்கான முடிவைக்கூட தன்னிச்சையாக எடுக்கக்கூடிய சூழல் இல்லாதது பெரிய தடை. ஆண்கள் போட்டியிடும் இடத்தில் அவருக்கு பதில் ஒரு பெண்ணை நிறுத்துவதில்கூட தயக்கம் நீடிக்கிறது. சட்டப்பேரவை, நாடாளு மன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் நுழைந்துவிட்டால், அது 50 சதவிகிதமாக மாறுவது அதிக சிரமமாக இருக்காது.

பட்டங்கள் ஆளட்டும்... சட்டங்கள் செய்யட்டும்...

வானதி சீனிவாசன், மகளிரணி தேசியத் தலைவர், பா.ஜ.க

``ஜனநாயகத்தில் கொள்கைகளை உருவாக்குவதிலும் அமல்படுத்துவதிலும் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பாக அரசியல்தான் உள்ளது. முன்னேற்றம், அங்கீகாரம், உரிமை ஆகியவற்றைப் பெறுவதற்கு அந்த அதிகாரமுள்ள இடத்தில் பெண்கள் இருக்க வேண்டும். ஆனால், அரசியல் எப்போதும் ஆண்களுக்குரியதாகவே இருந்து வருகிறது.

சமகால அரசியல் களம் ஆண்களுக்கே சவாலாகத்தான் இருக்கிறது. குடும்பங்களின் ஆதிக்கம், பண பலம், ஆள் பலம் போன்ற தடைகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் இருக் கின்றன. உள்ளாட்சித் துறையில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதில் 10 - 15 சதவிகிதப் பெண்கள்தான் சுதந்திரமாக முடிவெடுத்துச் செயல் படுகின்றனர். பல இடங்களில் ஆண்கள் தங்களுக்கான முகமூடி களாகப் பெண்களைப் பயன்படுத்தும் நிலைதான் இருக்கிறது.

பெண்களை சுலபமாக வீழ்த்து வதற்கான கருவியாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது, குறைத்து மதிப்பிட்டுப் பேசுவது போன்றவை நடக்கின்றன. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நம்முடைய இலக்கைத் தேடி முன்னேறினால்தான் இன்றைய அரசியலில் நிலைத்து நிற்க முடியும்.''

பட்டங்கள் ஆளட்டும்... சட்டங்கள் செய்யட்டும்...

விஜயதரணி, பொதுச் செயலாளர்,தேசிய மகளிர் காங்கிரஸ்

``பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால் சட்டம் இயற்றும் இடங்களான சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் அதிக பெண்கள் இடம்பெற வேண்டும். பெரும்பான்மை பெண்களின் பார்வையிலிருந்து சட்டங்கள் இயற்றப்படும்போது அது நாட்டின் பெரும் பகுதியாக இருக்கும் பெண் களின் உரிமைகளைப் பாதுகாக்கும்.

ஆண்கள் போட்டியிடும் தொகுதியில் அவர்களுக்கெதிராகப் பெண்கள் சரிசமமாகப் போட்டி யிடுவதில் தவறில்லை. நானும் ஆண்களுடன் போட்டியிட்டுத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், எல்லாப் பெண்களுக்கும் அந்தச் சூழல் அமைவதில்லை. அதனால்தான் பெண்களே பெண் களுக்கு எதிராகப் போட்டியிட அதிகாரமளிக்கும் 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவைக் கேட்கிறோம். அப்போதுதான் பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படும்.

உள்ளாட்சியில் 50 சதவிகித இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப் பட்டதால்தான் உள்ளாட்சி அமைப்பில் முழுமையாக 50 சத விகிதப் பெண்கள் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டது.

இதே நிலை சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் ஏற்பட வேண்டும். பெண்களின் தைரியத் தைத் தகர்ப்பதற்கு அவரின் நடத்தையைப் பற்றி தவறாகப் பேசுவதும், இயலாதவர்கள் என்று குறைத்து மதிப்பிடுவதும் நடக்கிறது. இது வருத்தத்துக்குரியது.''

ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்!