காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட், தேசிய பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI), அதன் தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங்கைப் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்திய வினேஷ் போகட், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அதிகாரிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
பிரிஜ்பூஷண் சரண் சிங், பிற அதிகாரிகள் ஆகியோருக்கெதிராக டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் வினேஷ் போகட், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை பஜ்ரங் புனியா உட்பட 30 மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
நான்கு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகட், ``இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரால் தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் பற்றி என்னிடம் கூறிய குறைந்தது 10, 12 பெண் மல்யுத்த வீரர்களை நான் அறிவேன். அவர்களின் பெயர்களை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், பிரதமர், உள்துறை அமைச்சரை நாங்கள் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் பெயர்களைச் சொல்வேன்" என்றார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பஜ்ரங் புனியா, ``எங்கள் போராட்டம் அரசாங்கத்துக்கோ அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்துக்கோ எதிரானது அல்ல. இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரானது. கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படும்வரை இந்தப் போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகள் பேசுபொருளானதையடுத்து உடனடியாக இதற்கு பதிலளித்திருக்கும் பிரிஜ்பூஷண் சரண் சிங், ``உங்களுக்கு கூட்டமைப்புடன் இது போன்ற பிரச்னைகள் இருந்தால், 10 ஆண்டுகளாக ஏன் யாருமே எழவில்லை... விதிமுறைகள் வகுக்கப்படும்போதெல்லாம் இது போன்ற பிரச்னைகள் வரும்" என்று தெரிவித்திருக்கிறார்.