
வித்தியாசம்
வீடு என்றாலே செவ்வகம் அல்லது சதுர வடிவில் இருப்பதுதானே வழக்கம்... தஞ்சாவூர் மூலிகைப் பண்ணை அருகே ராஜாஜி நகரில் அமைந்துள்ள இந்த வீடு, வட்ட வடிவிலானது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறியாளராகப் பணியாற்றும் செல்வபாண்டியன் இந்த சர்க்கிள் ஹவுஸுக்குச் சொந்தக்காரர்.

``இது எனது நீண்டகாலக் கனவு. 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கிய நூலான `நெடுநல் வாடை'யில் வட்ட வடிவக் கட்டுமானம் குறித்த குறிப்புகள் இருக்கின்றன. அரண்மனைகள், மன்னனின் கோட்டைகள் வட்ட வடிவத்துல இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கு. இது, ஆதி தமிழர்களின் தொன்மையான மரபு. கீழடி அகழ்வாராய்ச்சியில் 2,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வட்ட வடிவச் சுவர் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் பழங்குடியின மக்களின் வீடுகள் வட்ட வடிவத்துலதான் இருக்கு.

1980-கள்லதான் வட்ட வடிவ வீடு குறித்த ஞானம் எனக்கு உதிக்கத் தொடங்கியது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்துல என் சித்தப்பா டி.கே.சீனிவாசன் திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்தார். அவரோட சேர்ந்து வேளாங்கண்ணி பக்கத்துல இருக்குற பிரதாப சிம்மபுரத்துக்கு நானும் போயிருந்தேன். அங்கேதான் வட்ட வடிவ வீட்டை முதன்முதலாகப் பார்த்தேன். அது, புயல் பாதுகாப்பு இல்லம். வழக்கமான செவ்வக, சதுர வடிவ வீடுகளைவிட, வட்ட வடிவ வீட்டில்தான் உறுதித்தன்மை அதிகம். இதனால்தான் புயல் பாதுகாப்பு மையங்கள் வட்ட வடிவத்துல அமைக்கப்படுகிறது. இதில் மோதும் காற்று, பக்கவாட்டுப் பகுதியில் 90 டிகிரியில் திசை திரும்பிவிடும். வெயிலின் தாக்கமும் இதில் கட்டுப்படுத்தப்படும். செவ்வகம் அல்லது சதுர வடிவ சுவராக இருந்தால், வெயிலை முழுவதுமாக உள்வாங்கும். வட்ட வடிவ வீடுகளில் முனைகளே கிடையாது. தொடர்ச்சியாக ஒருங்கமைக்கப்பட்ட சுவராக இருப்பதால் தாங்குதிறனும் உறுதித்தன்மையும் அதிகம். செவ்வக, சதுர வடிவ வீடுகளுக்குள் அங்கங்கே முடுக்குகள் இருக்குறதுனால, அந்தப் பகுதிகள் முழுமையான பயன்பாட்டில் இருக்காது. இங்கே அப்படியில்லை. எல்லாப் பகுதியும் புழக்கத்துல இருக்கு.

இந்த வீட்டுக்கான அடிப்படை வரைபடத்தை நான் உருவாக்கிய போது, நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு. என் மனைவியும் பிள்ளைகளும்தான் முழுமையான ஆதரவு கொடுத்தாங்க. என்னை விமர்சனம் செஞ்சவங்க எல்லாம், இப்போ இந்த வீட்டை பிரமிப்பாகப் பார்க்குறாங்க’’ என மகிழ்ச்சியோடு பேசுகிறார் செல்வபாண்டியன்.
``இந்த வீடு இவ்வளவு சிறப்பாக உருவானதற்கு, என் நண்பர் பொறியாளர் ராஜேந்திரனுக்குத்தான் நன்றி சொல்லணும். சிக்கன முறை கட்டுமானத்தில் இவர் தமிழ்நாடு அளவில் புகழ்பெற்றவர்” என, அவரை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

``அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கட்டடக்கலை எழில் கலைஞரான லாரி பெக்கரின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வீட்டை உருவாக்கியிருக்கோம். குறைவான செலவுல அழகான, உறுதியான வீடுகளை உருவாக்கணும்கிறதுதான் லாரி பெக்கர் தொழில்நுட்பத்தின் அடிப்படைத் தத்துவம்’’ என உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் பொறியாளர் ராஜேந்திரன்.
``இந்த வீட்டில் மிகவும் குறைவான அளவுதான் சிமென்ட், மணல், இரும்பு, மரம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியிருக்கோம். எலி வலை அமைப்பு முறையில் சுவர் அமைச்சதுனால, செங்கல், சிமென்ட், மணல், கூலிச் செலவு எல்லாமே குறைவு. சுவரின் உள்ளே கூடு போன்று இருப்பதால் வெயில், குளிரின் தாக்கம் நேரடியாக விட்டுக்குள் வராது. தரமான செங்கல் பயன்படுத்தினால், சுவர்களுக்கு சிமென்ட் கலவை பூச்சே தேவையில்லை. பெயின்ட் செலவும் மிச்சம்.

சுவரின் செங்கற்கள் அரிதாரம் இல்லாமல் இருந்தால்தான், அவற்றால் சுவாசிக்க முடியும். நீண்டகாலத்துக்கு உறுதித் தன்மையுடன் இருக்கும். சிமென்ட் பூச்சு, வெப்பத்தை உள்வாங்கி, செங்கற்களைச் சூடுப்படுத்திவிடும். பூச்சுக் கலவையில் சிமென்ட் அதிகமாக இருந்தால், சுவரில் சிலந்திவலை வெடிப்புகள் உருவாகி, மழைநீர் உள்ளுக்குள்ளேயே தங்கியிருந்து பாசி பிடித்துவிடும். வீட்டின் மேற்கூரைக்கு மிகக் குறைந்த அளவு இரும்புக்கம்பி மற்றும் சிமென்ட் கலவையைப் பயன் படுத்தியிருக்கோம். அதை செங்கற்களைக் கொண்டு ஈடு செய்திருக்கிறோம். மேற்கூரையைத் தாங்கி நிற்பதற்கு, வழக்கமான கான்கிரீட் உத்தரங்களுக்குப் பதிலாக, முப்பரிமாண வளைவுகளைப் பயன்படுத்தியிருக்கோம்.
மரத்தின் பயன்பாட்டை இயன்ற வரைக்கும் தவிர்த்துவிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுதாரணமாக இந்த வீட்டை உருவாக்கியிருக்கோம். ஜன்னல்கள் முழுவதும் இரும்பால் ஆனது. மரமே பயன்படுத்தலை. வழக்கமான ஜன்னல்கள்ல, பக்கவாட்டுப் பகுதியில்தான் கதவுகள் இருக்கும். அப்படி இருந்தால், காற்று தடைப்படும். இங்கு ஜன்னலின் நடுவில் கதவுகள் அமைச்சிருக்கோம். இதனால் காற்று தாராளமாக வரும். வெளிச்சம் மற்றும் காற்றின் தேவைக்கேற்ப, 45, 60, 90 டிகிரி எனப் பல கோணங்கள்ல கதவுகளைத் திறக்கும் வசதியும் இதுல இருக்கு.

படுக்கையறையில், கடப்பா கல்லில் கட்டில் அமைச்சிருக்கோம். வெயில் காலத்துல குளுகுளுன்னு இருக்கும். குளிர்காலத்துல கதகதப்பாக இருக்கும். ஒரு தடவை இதுக்கு செலவு செஞ்சாலே போதும். காலத்துக்கும் அப்படியே கிடக்கும்.
வீட்டுக்கு நடுவில் பாரம்பர்ய முறையில் முற்றம் அமைச்சிருக்கோம். இதனால் நல்லா வெளிச்சமா இருக்கு. முற்றம் வழியாக வெப்பக் காற்று மேலே செல்லும். இயற்கையான குளிர்ந்த காற்று வீட்டுக்குள் வரும். முற்றத்தில் விழக்கூடிய மழைநீர் பாதாளவழியில், மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குச் சென்றுவிடும். முற்றத்தின் சிறு வட்டச் சுவரும், வீட்டின் வெளிப்புற வட்டச் சுவரும், நான்கு ஆரங்களில் இணைக்கப்பட்டிருக்கு. இதனால் நான்கு கால் வட்ட பாகங்கள் உருவாகியிருக்கு.

கீழ்த்தளத்தில் வரவேற்புக் கூடம், சமையலறை, உணவருந்தும் கூடம், படுக்கையறை அமைந்துள்ளன. வரவேற்புக் கூடத்திலேயே ஹை சீலிங் முறையில் மாடிப்படி அமைக்கப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தின் மொத்தக் கட்டுமானம் 640 சதுர அடி. மேல் தளத்தில் இரண்டு படுக்கை அறைகள் மற்றும் நூலகமும் இருக்கு. மேல் தளத்தின் மொத்தக் கட்டுமானம் 480 சதுர அடி.
எலிவேஷனுக்குன்னு தனியாக எந்தச் செலவும் செய்யலை. இயல்பாகவே, வெளிப்புறத் தோற்றம் வசீகரமாக உருவாகியிருக்கு. மின்சாரம் இல்லைன்னாலும் இந்த வீட்டின் காலிங் பெல் ஒலிக்கும். இந்த வீட்டைக் கட்ட, மொத்தம் 12 லட்ச ரூபாய்தான் செலவாச்சு. இது கட்டப்பட்டு 10 ஆண்டுகள் ஆகுது. இப்பவும் புத்தம் புதுசாகவே இருக்கு பாருங்க. இதுதான் லாரி பெக்கர் தொழில்நுட்பத்தின் மகத்துவம்” என்று ஆச்சர்யப்படுத்துகிறார் ராஜேந்திரன்.