உலக அதிசயங்கள் 7 இது உங்களுக்குத் தெரியும். இந்த ஏழு அதிசயங்களும் கட்டடக் கலையாக நம் கண்முன்னே நிற்கின்றன. இந்த ஏழு அதிசயங்களும் மனிதனின் திறமையின் சாட்சி. என் பார்வையில் எட்டாவது அதிசயமாக இயற்கையின் அதிசயமாக உலகில், ஒவ்வொரு வருடமும் ஒரு மிகப்பெரிய நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது, இதுகுறித்து பல பேருக்குத் தெரிந்து இருக்கலாம்!
அந்த இயற்கையின் அதிசயம் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான, தான்சானியா மற்றும் கென்யாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் `WILDEBEEST MIGRATION' தமிழ்ல சொன்னா `காட்டு மாடுகளின் பிரம்மாண்ட பேரணி.'

இந்த காட்டு மாடுகளின் பிரம்மாண்ட பேரணி, எதனால் நடக்கிறது? அதன் நோக்கம் என்ன, அதனால் ஆப்பிரிக்க நாடுகளுக்கும், மனித குலத்துக்கும் கிடைக்கும் நன்மை என்ன? என்பது குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
ஆப்பிரிக்கா என்றாலே வறுமைதான், சிறுவயதில் இருந்து திரையிலும் தொலைக்காட்சியிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி அதுதான்.
இதோடு ஆப்பிரிக்காவின் காட்டுயிர்களும் மனதில் ஒரு நிமிடம் ஓடி மறையும். இந்தக் காட்டுயிர்கள் ஆப்பிரிக்காவின் எல்லா தேசத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. ஆனால், தான்சானியா மற்றும் கென்யாவில் நடக்கும் ஒரு பிரம்மாண்ட காட்டுயிர் பேரணி நம்மை வியக்க வைக்கிறது, அதில் முதலில் தான்சானியாவை பற்றிப் பார்ப்போம்.
ஆப்பிரிக்காவின் அதிசயங்கள்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியா (TANZANIA) , சற்று வறுமையான தேசம்தான். அந்த வறுமையான தேசத்துக்கு பொருள் சேர்ப்பது, பணம் சேர்ப்பது எல்லாம் சுற்றுலா மூலம் தான். கொரோனா காலத்துக்கு முன்பு வரை தேசத்தின் மொத்த வருமானத்தில் சுமார் 17.5 சதவிகிதம் சுற்றுலா மூலமாக தான்சானியாவுக்குக் கிடைத்தது. சுற்றுலாவை பொறுத்தவரை இந்தியாவுக்கு ஏறக்குறைய 6.9 சதவிகிதம் கிடைக்கிறது. கொரோனா காலத்துக்குப் பின்பு அது சுமார் 6% குறைந்துள்ளது.

சிறிய நாடான தான்சானியாவில் மக்கள் தொகை, 52 மில்லியன். இதில் ஏறக்குறைய 11 சதவிகிதம் பேர் இந்தச் சுற்றுலாவால் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். இப்படிச் சொல்லும்போது சுற்றுலா, தான்சானியாவின் மிகப்பெரிய வருமானம் அப்படிங்கறது உங்களுக்குத் தெரிகிறது இல்லையா? இவ்வளவு பெரிய வருமானத்தை அந்த நாட்டுக்கு கொடுக்கக்கூடியது அங்குள்ள செரங்கெட்டி (serengeti) தேசிய பூங்கா.

தான்சானியாவில் புகழ்பெற்ற இடங்கள் அப்படின்னு நம்ம சொல்றப்ப, கிளிமஞ்சரோ மலை (MOUNT KILIMANJARO). இது ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலை. நாம் விமானத்தில் தான்சானியாவை நெருங்கும்போது விமான அறிவிப்பில் கிளிமஞ்சரோ மலையைப் பார்க்கச் சொல்லி அறிவிப்பு வருகிறது. ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது பணி சூழ்ந்த அந்த அழகிய மலையைப் பார்த்து பிரமிக்கிறது நமது கண்கள் ( மனதுக்குள் எந்திரனின் கிளிமஞ்சரோ தமிழ் பாடல் பாடல் வரிகள் அலையடிக்க்கும்...). அந்தப் பிரமிப்பை பார்த்துக் கொண்டே நாம் கிளிமஞ்சரோ விமான நிலையத்தில் தரை இறங்குகிறோம்.
கிளிமஞ்சரோ ஆப்பிரிக்காவின் உயரமான மலை 5,895 மீட்டர் உயரம் கொண்டது. நமது எவரெஸ்டின் உயரம் 8,848.86 மீட்டர். இமயமலைத் தொடர் அல்லது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மாதிரி இது மலைத்தொடர் அல்ல. தன்னந்தனியாக உள்ள இந்த மலை எரிமலை சாம்பல்களாலும் எரிமலைக் குழம்புகளாலும் உருவானவை.

ஆய்வாளர்கள் ஏறக்குறைய 3,60,000 ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இதைப் பார்க்க தான்சானியாவுக்கு நிறைய பேர் வருகின்றனர். அதற்கு அடுத்து கோரங் கோரோ (NGORONGORO) கன்சர்வேஷன் ஏரியா, தரன்கீர் (TARANGIRE) நேஷனல் பார்க், மற்றும் லேக் மண்யாற (LAKE MANYARA). இப்படிப் பல இருந்தாலும் உலக மக்கள் அதிகம் விரும்பி வருவது இங்குள்ள செரங்கெட்டி தேசிய பூங்காவைத்தான்.

ஒரு வருடத்துக்கு ஏறக்குறைய 4 லட்சம் பேர் இங்கு சுற்றுலா வருகின்றனர். இந்தத் தேசிய பூங்காவை பாக்குறதுக்கு நாம், இந்தியாவிலிருந்து 2022-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் தோகா வழியாக தான்சானியா செல்ல வேண்டும். தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சரோ ஏர்போர்ட்டுக்கு (KILIMANJARO INTERATIONAL AIRPORT) விமானத்தில் சென்று, அங்கிருந்து அரூசா (ARUSHA) அப்படிங்கிற ஒரு நகரம் வழியா கராட்டு (KARATU) அப்படிங்கிற ஊருக்கு தரை மார்க்கமாக போகணும்.

அங்கு இரவு தங்கி காலையில் நாபி (NAABI HILLGATE) அப்படிங்கிற இடத்துக்குப் போய் அங்கிருந்து நாம் பயணத்தைத் தொடர இடையில் வருகிறது கோரங் கோரோ கிரேட்டர் (NGORONGORO CRATER ) அப்படிங்கற இடம். இந்த கிரேட்டர், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி வெடித்துச் சிதறிய எரிமலையின் அடிப்பகுதி எனச் சொல்றாங்க. இந்த எரிமலையின் அடிப்பகுதி இங்கே மிகப்பெரிய பள்ளமாக இருக்கு!
கிரேட்டர் ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களில் ஒன்று, இந்தக் கிரேட்டர் பள்ளம். 260 சதுர கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. நீள அகலம் 16 முதல் 19 கிலோமீட்டர். கடல் மட்டத்திலிருந்து 2,286 உயரமுள்ள இந்த கிரேட்டர் யுனெஸ்கோவின் (UNESCO) அங்கீகாரம் பெற்ற மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஒன்று.

எரிமலை வெடித்த அடிப்பகுதிதான் இந்த கிரேட்டர் பள்ளத்தாக்கு. அந்த எரிமலைக் குழம்பு பரவி உருவாக்கிய பகுதிதான் நாம் அடுத்தடுத்த பகுதியில் காணவிருக்கும் முடிவில்லா சமவெளி, அந்த முடிவெல்லா சமவெளி நோக்கி அங்கு வாழும் உயிரினங்கள் நோக்கி முக்கியமாக செகரட்டரி பறவை தெரியுமா? அதையும் பார்க்க நம் பயணம் தொடர்கிறது.

ஆப்பிரிக்க காடுகளுக்குப் போகணுமா? இவையெல்லாம் முக்கியம்...
ஆப்பிரிக்க காடுகளுக்குச் செல்வதற்கு நான்கு பேர் அல்லது எட்டு பேர் கொண்ட குழுவாகப் பயணிப்பது நல்லது. அங்கு செல்வதற்கு நாம் மஞ்சள் காய்ச்சல் (yellow fever) என்ற காய்ச்சலுக்கான ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு முறை போட்டுவிட்டால் பத்து வருடங்களுக்கு அது போதுமானது. இந்த ஊசி சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மட்டுமே போடப்படுகிறது. அந்த ஊசி போட்டு முடிந்ததும் ஓர் அடையாள அட்டை தருவார்கள். அதை நமது பாஸ்போர்ட்டுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். ஊசி போட்டு குறைந்தது பத்து நாள் கழித்துதான் நாம் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்ல முடியும்.

தேதி திட்டமிட்டு விமான டிக்கெட்டுகள் முன்பதிவு, பயண ஏற்பாடுகளை ஒரு வருடத்துக்கு முன்பே நாம் மேற்கொள்ள வேண்டும். நாம் செல்லும் காலநிலையில் காட்டு மாடுகள் எங்கு இருக்கும் என்பதைக் கணக்கிட்டு அங்கு தங்கும் இடத்துக்கான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஆப்பிரிக்கக் காடுகளில் கொசுக்களால் மலேரியா வருவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என்பதால் முன்னேற்பாடாக மலேரியா மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாதத்துக்கு முன்பாக இ-விசா பெற்றுக்கொள்ளலாம். நாம் புறப்படும் காலத்திலிருந்து திரும்பி வந்து சேரும் காலம் வரை கட்டாயம் பயண இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம்.
- டாக்டர் மணிவண்ணன்.
இவரைப் பற்றி ...
டாக்டர் மணிவண்ணன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் `ஸ்ரீ பார்வதி மருத்துவமனை மற்றும் சர்க்கரை நோய் பராமரிப்பு மையத்தை' நிறுவி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை செய்து வருபவர். கடந்த 5 ஆண்டுகளில் 148 இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். `நோய்களின் தாய்' என்ற இவர் எழுதிய புத்தகம், பல சர்க்கரை நோயாளிகளுக்கு விழிப்புணர்வு வழிகாட்டியாக இருக்கிறது. முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த இரண்டு வருடங்களாகப் பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திவருகிறார். புகைப்படம் எடுப்பதிலும், இயற்கையின் மீதான ஆர்வமும் கொண்ட இவர் நமக்காக எழுதும் சூழலியல் கட்டுரைத் தொடர் இது. நிச்சமாக இயற்கையையும் வனங்களையும் பற்றிய புரிதலை அனைவருக்குள்ளும் ஏற்படுத்தும்.