லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோம் - பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்?

வொர்க் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
News
வொர்க் ஃப்ரம் ஹோம்

வீடு Vs வேலை

சரணி ராம்

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு `வொர்க் ஃப்ரம் ஹோம்' வழிமுறையை வழங்கியுள்ளன.

வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள், கூட்ட நெரிசலில் பயணம் என எப்போதுமே பரபரப்பாக இயங்கும் பெண்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம், உடல் ரீதியான சிறிய ஓய்வைக் கொடுக்கும். எனினும் வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, சில நேரங்களில் அலுவலகப் பணிகளுக்கிடையே வீட்டு வேலைகள் செய்ய வேண்டிய சூழல் வரலாம். வீட்டில் இருப்பதால், `அம்மாதான் சாப்பாடு ஊட்டணும்’ எனக் குழந்தைகள் அடம்பிடிக்கக்கூடும். இதுபோன்ற சூழலில் வீடு மற்றும் அலுவலக வேலைகளை முறையாகக் கையாள்வது எப்படி... வழிகாட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ஜெக ஜனனி.

வொர்க் ஃப்ரம் ஹோம் - பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்?

குடும்பத்தின் உதவி

மாமியார், அம்மா போன்ற பெரியவர்களுடன் வசிக்கும் பெண்கள் எனில் பெரியவர்கள் சொல்லும் வேலைகளை, ‘இது என் அலுவலக நேரம்... இந்த நேரத்தில் வீட்டு வேலைகளைச் செய்ய முடியாது’ எனத் தட்டிக் கழிக்க முடியாது. இதனால் குடும்பங்களில் வீண் சண்டைகள் உருவாகும். இதுபோன்ற சூழலில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்ன என்பதை வீட்டில் இருப்பவர்களுக்குத் தெளிவாகப் புரியவைப்பது அவசியம்.

வொர்க் ஃப்ரம் ஹோம் - பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்?

அலுவலகம் செல்லும்போது, 10 மணிக்குக் கிளம்புகிறீர்கள், மீண்டும் 6 மணிக்கு வருகிறீர்கள் என்பது மட்டும்தான் வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியும். ஆகவே, வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யும்போது... அலுவலகத்தில் உங்களின் பணி என்ன, என்ன மாதிரியான சூழலைக் கையாள் கிறீர்கள், அதனால் உண்டாகும் மன அழுத்தங்கள் என்னென்ன என்பதைப் புரியவைக்க கிடைத்துள்ள வாய்ப்பாக அதை மாற்றுங்கள்.

குழந்தைகள், கணவன் என வீட்டைத் தனியாக நிர்வகிக்கும் பெண்கள் எனில், வழக்கம் போல அலுவலக நேரத்துக்கு முன்பே,வீட்டு வேலைகளை முடித்துவிடுங்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம் - பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்?

கணவனுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம், குழந்தைகளும் வீட்டில் இருக்கிறார்கள். விடுமுறை தினம் போன்று கால தாமதமாகத்தான் எழுந்திருக்கிறார்கள்.... அதனால் வீட்டு வேலை களையும், அலுவலக வேலைகளையும் சமாளிக்க முடியாமல் பணிச்சுமையில் சிக்கித் தவிக்கிறீர்கள் எனில், அலுவலகத்தில் உங்களுக்கென ஒதுக்கப் பட்டு இருக்கும் பணி, மீட்டிங் போன்றவற்றை எடுத்துச் சொல்லி புரியவைத்து குடும்பத்தினரின் பங்களிப்பையும் கேட்டுப் பெறுங்கள்.

திட்டமிடல்

வீட்டில்தானே இருக்கிறோம், வீட்டு வேலைகளைப் பொறுமையாக செய்துகொள்ளலாம் என்று எண்ணினால், அலுவலக வேலைகளைச் சரியாக செய்ய முடியாது. அதனால், வழக்கமாக அலுவலகத்துக்குத் தயாராவது போன்றே தயாராகி, அலுவலக நேரத்தில் இன்று என்னென்ன பணிகள் இருக்கின்றன என்பதைத் திட்டமிட்டுக்கொண்டால், வீட்டு வேலைகளிலும் அலுவலக வேலைகளிலும் எளிதாக வெற்றி பெறலாம்.

வொர்க் ஃப்ரம் ஹோம் - பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்?

குழந்தைகளைக் கையாள்வது...

என்னதான் புரியவைத்தாலும், தன் அம்மா தன்னுடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்றே குழந்தைகள் விரும்புவார்கள். ‘வேலை இருக்கு... அதைப் பார்க்க விடு’ என்று குழந்தைகள் மீது எரிந்து விழுந்தால் குழந்தைகளின் சேட்டை அதிகரிப்பதோடு, தன்னைவிட அம்மாவுக்கு லேப்டாப்தான் முக்கியம் எனத் தவறாக நினைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, படம் வரைவது, சின்ன சின்ன கிராஃப்ட் வேலைகளில் ஈடுபடுத்துவது என உங்கள் அருகிலேயே குழந்தைகளை அமரவைத்து என்கேஜ் செய்யுங்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யும்போது உங்களின் பயண நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தை குழந்தைகளுக்காக ஒதுக்கி அவ்வப்போது பாராட்டுகள், முத்தங்கள் என சூழலை இதமாக்கிக்கொள்ளுங்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம் - பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்?

ஸ்ட்ரெஸில் இருந்து விடுபட...

அலுவலகம் செல்லும்போது பணிச்சூழல், பயணச்சூழல், அலுவலகச்சூழல் எனப் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அது வீண் மன அழுத்தங்களையும் குறைக்கும். வீட்டிலிருந்து பணி செய்யும்போதோ காலையிலிருந்து மாலை வரை ஒரே சூழலில் இருப்பதால் தேவையில்லாத ஸ்ட்ரெஸ் உருவாகலாம். இதைத் தடுக்க அவ்வப்போது மனதுக்குப் பிடித்த பாடல் கேட்பது, இடையிடையே புத்தகங்கள் வாசிப்பது, நண்பர்கள், உறவினர்களிடம் தொலைபேசியில் உரையாடுவது என ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம் - பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்?

உங்களுக்கான இடம்

பணி செய்வதற்கு என்று தனி அறை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. இதுபோன்ற சூழலில் நல்ல வெளிச்சத்துடன் கூடிய காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்து அமருங்கள். தொலைக்காட்சி இருக்கும் இடத்தை தேர்வு செய்தால், குழந்தைகளையும், வீட்டில் இருக்கும் பெரியவர்களையும் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் வரும். கூடியவரை தொலைக்காட்சி இல்லாத அறையைத் தேர்வு செய்து பணிபுரியுங்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம் - பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்?

ஆரோக்கியத்தில் கவனம்

வீட்டிலிருந்து பணிபுரியும்போது அருகிலேயே ஸ்நாக்ஸ் டப்பாவை வைத்து, சாப்பிட்டுக்கொண்டே வேலை செய்யும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கும். சிலருக்கோ சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும். இவை இரண்டுமே உடல்நலத்தைப் பெருமளவு பாதிக்கும். எனவே, தினமும் மிதமான உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். தேவையில்லாத நேரத்தில் உண்ணக்கூடிய தின்பண்டங்கள் நெஞ்செரிச்சல், எடை அதிகரித்தல் போன்ற பிரச்னைகளைத் தரும். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, பழங்களாக எடுத்துக்கொள்வது நல்லது.

அப்டேட் அவசியம்

உங்களின் பணி சார்ந்து புதிதாக என்ன செய்தி வந்திருக்கிறது என்பதைத் தினமும் அப்டேட் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் வீட்டில் இருந்து பணி புரியும்போது என்ன பணி செய்கிறீர்கள் என்பது உங்களின் நிர்வாகத்துக்குத் தெரியாமல் இருக்கலாம். எனவே, உங்களின் அன்றாட பணிகளை உங்களின் தலைமைக்கு அப்டேட் செய்வதுடன் மெயில் மூலமாகவோ எக்ஸ்ஸெல் ஷீட்டிலோ பதிவிட்டுக்கொண்டே வாருங்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம் - பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்?

வீடியோ மீட்டிங்

மீட்டிங்கை தவிர்க்காமல், வழக்கமாக அலுவலகத்துக்கு அணிந்து செல்லும் உடையை அணிந்து வீடியோ அழைப்பில் பேசுங்கள். அன்று செய்ய வேண்டிய பணிகள் பற்றி குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.

வொர்க் ஃப்ரம் ஹோம் சற்று சிரமம்தான் என்றாலும் திட்டமிட்டுச் செயல்பட்டால் உங்களின் ஆளுமையை எளிதாகத் தக்கவைத்துக் கொள்ளலாம். கடினமான சூழலிலும் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள்!