நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வீட்டிலிருந்தே வேலை... ஓ.எம்.ஆர் ரியல் எஸ்டேட் இனி என்னவாகும்? - தலைநகர் நிலவரம் என்ன?

ஓ.எம்.ஆர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.எம்.ஆர்

கடந்த பல மாதங்களாக ஐ.டி ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்துவருவதால், ஓ.எம்.ஆர் பகுதியே வெறிச்சோடி இருக்கிறது!

த்திய அரசு இப்போது தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் வணிக நடைமுறை ஒப்பந்த சேவை நிறுவனங்கள் (BPO) முழுவதுமாக வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஏதுவாக சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய சட்ட திருத்தத்தின்படி, இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எங்கிருந்தபடியும் வேலை செய்ய முடியும். நிறுவனத்துக்கு பிரத்யேகமாக எந்த அலுவலகமும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நிறுவனத்துக்காகப் பணிபுரியும் ஊழியர் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோகூட இருந்து பணி புரிய முடியும்.

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த நோய்த்தொற்று ஆரம்பித்த புதிதில் மற்ற துறைகளைப்போல தகவல் தொழில்நுட்பத் துறையும் அதிக பாதிப்படைந்தது. இந்த நிறுவனங்களில் கடந்த காலங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வந்தாலும் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் ஒரே சமயத்தில் பல மாதங்கள் நிறுவனத்துக்கு வராமல் வேலை செய்த அனுபவம் இல்லை. அதனால் இந்த நிறுவனங்கள் இந்த இக்கட்டான சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றன என்பது கேள்விக்குறியாக இருந்தது.

வீட்டிலிருந்தே வேலை... ஓ.எம்.ஆர் ரியல் எஸ்டேட் இனி என்னவாகும்? - தலைநகர் நிலவரம் என்ன?

வீட்டிலிருந்து வேலை..!

ஆனால், கடந்த பல மாதங்களாகப் பெருவாரியான ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே சிறப்பாக வேலை செய்து வருகின்றனர். இந்தச் செயல் திட்டத்தின் மூலம் நிறுவனத்துக்கு அலுவலக பராமரிப்புக்கான செலவுகள் பெருமளவில் குறைந்துவிட்டன. மின்சாரக் கட்டணம் 90% அளவுக்கு மேல் குறைந்துள்ளது. நகரில் அலுவலகத்துக்கான வாடகை ஒரு சதுர அடிக்கு 100 - 200 ரூபாய் வரை உள்ளது. அதனால் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் நிறுவனங்கள் பல தமது அலுவலகத்தைக் காலி செய்து ஊழியர்களை முழுவதுமாக இனி வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய கேட்கத் தொடங்கியுள்ளன. இந்தச் செலவு குறைப்பு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய லாபத்தை ஈட்டித் தருகிறது. இதன் காரணமாக ஐ.டி நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

அரசின் இந்தச் சட்ட மாறுதலானது தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கொண்டுவரும் என்பது இன்றியமையாத கேள்வியாக உள்ளது. சென்னையில் ஓ.எம்.ஆர் (பழைய மாமல்லபுரம்) என்கிற ராஜீவ் காந்தி சாலை முழுவதுமாகத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் நிரம்பியுள்ளது. இங்குள்ள பல வணிக, வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், மால்கள், திரையரங்குகள் போன்றவை முழுவதுமாக இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களைச் சார்ந்தே உள்ளன.

வீடுகள் காலி...

கடந்த ஏழு மாதங்களாகப் பழைய மாமல்லபுரம் சாலை சார்ந்த இடங்கள் வெறிச்சோடிப் போய் பொலிவிழந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள் பல காலியாக இருக்கின்றன. இதனால் பலர் வாழ்வாதாரங்களை இழந்து பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வாடகைக்கு வீடு விட்டிருந்தவர்கள் தொடங்கி, மளிகைக் கடைக்கார்கள், ஹோட்டல் நடத்துபவர்கள் எனப் பலரும் வருமானம் இழந்திருக்கிறார்கள்.

வீட்டிலிருந்தே வேலை... ஓ.எம்.ஆர் ரியல் எஸ்டேட் இனி என்னவாகும்? - தலைநகர் நிலவரம் என்ன?

இங்கு கடந்த பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை கணிசமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக ரியல் எஸ்டேட் துறையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆனால், இந்தப் பாதிப்புகள் நிச்சயம் தற்காலிகமாகத்தான் இருக்க முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியும்.

சென்னையின் முக்கிய பிரதான பகுதிகளில் ஒரு சதுர அடி மனையின் விலை 20,000 ரூபாய் அளவுக்குப் போகிறது. திருவான்மியூர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் ஒரு சதுர அடி 10,000 ரூபாய் அளவுக்கு செல்கிறது. ஆனால், துரைப்பாக்கம், நாவலூர், சோளிங்க நல்லூர் மற்றும் பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் இப்போதும் சதுர அடி மனையின் விலை 4,000 முதல் 5,000 ரூபாய் அளவுக்குக் கிடைக்கிறது. இது நகரின் மத்திய பகுதியோடு ஒப்பிட்டால் 80% அளவுக்கு குறைவாக உள்ளது.

50 மடங்கு வளர்ச்சி...

மேலும், இந்தப் பகுதிகளில் பல நல்ல திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. 2000-மாவது ஆண்டுக்கு முன்பு ஓ.எம்.ஆரில் உள்ள பல பகுதிகள் கிராமங்களாகத்தான் விளங்கின. டைடல் பார்க் கட்டி முடிக்கப்பட்டு டோல் ரோடு வந்த பிறகுதான் இந்தப் பகுதிகள் அபரித வளர்ச்சி அடைந்தன. அதற்கு முன்பு சதுர அடி 100 ரூபாய்க்கு விற்ற மனைகள் 20 ஆண்டுகளில் 50 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளன. அதனால் அரசின் இந்தப் புதிய திட்டங்கள் இந்தப் பகுதிகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்புண்டு எனலாம்.

வீட்டிலிருந்தே வேலை... ஓ.எம்.ஆர் ரியல் எஸ்டேட் இனி என்னவாகும்? - தலைநகர் நிலவரம் என்ன?

புதிய மெட்ரோ ரயில் திட்டம்...

மெட்ரோ ரயில் சேவையில் புதிய திட்டங்களாக மாதவரத்திலிருந்து மேடவாக்கம், பெரும்பாக்கம் வழியாக ஒரு வழித்தடமும், திருவான்மியூர் வழியாக மற்றொரு வழித்தடமும் சோளிங்கநல்லூர் பகுதியை இணைக்கிறது. இந்தச் செயல் திட்டம் முடிவடையும்போது நகரின் முக்கிய பகுதிகளை எளிதாகச் சென்றடைய முடியும். இந்தத் திட்டம் இப்பகுதியின் வளர்ச்சியை பெரிய அளவில் நிச்சயம் கொண்டு செல்லும்.மேலும், அரசு மெட்ரோ ரயிலுடன் இணைத்து 3,100 கோடி ரூபாய் செலவில் ஓ.எம்.ஆர் சாலையில் மூன்று அடுக்கு மேம்பாலம் பாதை அமைக்க உள்ளது. இந்தத் திட்டமும் பெரிய அளவில் இப்பகுதியின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும்.

ஐ.டி நிறுவனங்களின் சாம்ராஜ்ஜியம்...

பல நிறுவனங்கள் மிகப் பெரிய அலுவலகங்களை இந்தப் பகுதிகளில் அமைத்து, ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி உள்ளன. விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற அனைத்து முன்னணி நிறுவனங்களும் பல மாடி கட்டடங்களைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டடங்களைக் கட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் தேவை குறையும்பட்சத்தில் பிற நிறுவனங்களுக்கு லாபநோக்கில் வாட கைக்கு விடுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் ஏற்கெனவே இயங்கிவந்த அலுவலகங்கள் இயல்புநிலை திரும்புவதற்கு வாய்ப்புள்ளது.

வீட்டிலிருந்தே வேலை... ஓ.எம்.ஆர் ரியல் எஸ்டேட் இனி என்னவாகும்? - தலைநகர் நிலவரம் என்ன?

கமர்ஷியல் காரணங்களுக்கான இடத்தின் தேவை பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப ஊழியர்களில் ஒரு பகுதியினர் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது அதில் மிச்சப்படும் ஏற்கெனவே கட்டப்பட்ட பகுதிகள் பிற அலுவலகத் தேவைகளுக்கு உபயோகிக்கப்படும். மேலும், நகரின் பல பகுதியில் அனைத்து தரப்பட்ட மக்களும் பொதுவாக வசித்து வருகின்றனர். ஓ.எம்.ஆர் பகுதிகளில் மட்டும் தான் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்த மாற்றத்தால் அனைத்து தரப்பு மக்களும் இந்தப் பகுதிகளில் வசிப்பதற்கு வாய்ப்பு ஏற்படலாம்.

80% விலைக் குறைவு...

நகரின் மத்திய பகுதியோடு ஒப்பீடு செய்தால், 80% விலைக் குறைவாக உள்ள ஓ.எம்.ஆர் பகுதி அதிக அளவு வளர்ச்சி அடைவதற்கு பெரிய வாய்ப்புகள் உள்ளன. அதனால் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடருமா என்பது கேள்விதான்.

இதுவரை வீடு வாங்காதவர்கள், ஓ.எம்.ஆர் பகுதியில் வீடு வாங்கி, செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்தவர்கள், இந்த விலை இறக்கத்தைப் பயன்படுத்தி, வீடு வாங்க யோசிக்கலாம். இந்த முதலீடு நீண்ட காலத்தில் நன்மை தருவதாக அமையக்கூடும்!