மேற்கு ஆப்பிரிக்காவின் மாலியைச் சேர்ந்த 26 வயதான ஹலிமா சிஸ்ஸே என்ற பெண்ணுக்கு, மொராக்கோ மருத்துவமனையில், ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் பிறந்தனர். அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்ட ஒன்பது குழந்தைகளில், ஐந்து பெண் குழந்தைகள், நான்கு ஆண் குழந்தைகள்.

இரண்டு குழந்தைகள் என்றாலே அவர்களின் ஆரோக்கியத்தைச் சீராகப் பாதுகாப்பதில் சிக்கல்கள் இருக்கும். ஒன்பது குழந்தைகள் பிறந்தபோதும் குழந்தைகள் அனைவரும் பூரண ஆரோக்கியத்துடன் நலமாக இருப்பதாகக் குழந்தைகளின் தந்தை அப்தெல் காதர் அபி, அச்சமயத்தில் தெரிவித்து இருந்தார்.
2021-ல் பிறந்த இக்குழந்தைகள் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தங்களின் குழந்தைகளுடன் இத்தம்பதியினர் மாலிக்குச் சென்றனர். குழந்தைகள் பிறந்து 19 மாதங்கள் ஆன நிலையில், 'most children delivered in a single birth to survive’ என, கடந்த வாரம் கின்னஸ் உலக சாதனை அங்கீகரித்துள்ளது.
முதலில் ஏழு குழந்தைகளோடு இருக்கிறார் என்றே ஹலிமாவிற்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறப்புச் சிகிச்சைக்காக மாலியன் அரசு இவர்களை மொரோக்கோவில் உள்ள கிளினிக்கிற்கு அனுப்பியது. அங்கு அவருக்குக் கூடுதலாக இரு குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து மருத்துவர் ரோச்டி தலிப் கூறுகையில், ``ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது. அப்படிப் பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரங்களிலேயே இறந்து விடுவார்கள்.
இந்த வகை பிரசவத்தில் ஆபத்துகள் அதிகம் இருக்கும் என்பதால் குழந்தைகள் கிளினிக்கிலேயே வைத்துக் கண்காணிக்கப்பட்டனர். இதற்கென அவர்களுக்கு பிளாட் ஒதுக்கப்பட்டு, எந்த நேரத்திலும் உதவ, செவிலியர்கள் குழு அமைக்கப்பட்டது. இதற்காக உயர் தகுதி வாய்ந்த மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் 32 பேர் பணியாற்றினர்’’ எனக் குறிப்பிட்டார்.