
அதானி குழுமத்துக்கு அரசு உதவி எந்த அளவுக்குக் கிடைக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்... ஆஸ்திரேலியாவின் கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை அதானி குத்தகைக்கு எடுத்தார்
சில நாள்கள் உலகப் பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்துவிட்டு இப்போது மூன்றாம் இடத்துக்கு வந்திருக்கிறார் கௌதம் சாந்திலால் அதானி. இரண்டாவது இடமோ, மூன்றாவது இடமோ, அது ஆசியர்கள் யாரும் தொடாத உயரம். பெரும் பணக்காரர்கள் என்றால் டாடா, பிர்லா மட்டுமே என்று நம்பிய இந்தியச் சமூகத்துக்கு அம்பானி பெரும் ஆச்சர்யம். இரண்டே தலைமுறைகளுக்குள் இந்தியாவின் உச்ச இடத்துக்குத் தாவியது அம்பானி குழுமம். அதானியோ தன் வாழ்வின் 40 ஆண்டுக்காலத்துக்குள் இதைச் சாதித்திருக்கிறார்.
2021-ம் ஆண்டு பிறந்தபோது கௌதம் அதானியைவிட முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் 2 லட்சம் கோடி ரூபாய் முன்னணியில் இருந்தார். கடந்த ஆண்டில் அதானி அடைந்தது இமாலய வளர்ச்சி. ஒவ்வொரு நாளிலும் அவரின் சொத்து மதிப்பு 1,600 கோடி ரூபாய் உயர்ந்தபடி இருந்தது. இப்போது அம்பானியைவிட அதானி 4.6 லட்சம் கோடி ரூபாய் அதிக சொத்து மதிப்பு கொண்டிருக்கிறார். அதானி குழுமத்தின் நிகர மார்க்கெட் மதிப்பு 22 லட்சம் கோடி ரூபாய்.

அம்பானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்த காலத்தில்கூட அதிக மதிப்புள்ள நிறுவனமாக டாடா குழுமம் இருந்தது. காரணம், அவர்களின் அசையாச் சொத்து மதிப்பு அதிகம். அதானி இப்போது அதையும் தாண்டிவிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் 40 நிறுவனங்களை அதானி வாங்கியிருக்கிறார். அவற்றில் 35 நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கப்பட்டவை.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் கிராஃபையும், கௌதம் அதானியின் தொழில் கிராஃபையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டும் ஒரே வேகத்தில் உயர்ந்திருக்கும். 2001-ம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராகப் பதவியேற்றார். அதுவரை ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனமாக மட்டுமே இருந்த அதானி குழுமம், அதன்பிறகே அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கும் மாபெரும் தொழில் குழுமமாக வளர்ந்தது. மோடி பிரதமரான கடந்த எட்டரை ஆண்டுகளில் இமாலய வளர்ச்சி. மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க முன்னிறுத்திய 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இந்தியா முழுக்க மோடி சென்றது அதானி நிறுவன விமானத்தில்தான். அந்த நேரத்தில், ‘‘எங்கள் விமானத்தை யாருக்குமே இலவசமாகப் பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை'' என்று அதானி விளக்கம் கொடுத்தார்.
அதானி குழுமத்துக்கு அரசு உதவி எந்த அளவுக்குக் கிடைக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்... ஆஸ்திரேலியாவின் கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை அதானி குத்தகைக்கு எடுத்தார். சூழலியலாளர்களின் கடும் எதிர்ப்புகளைச் சமாளித்து அங்கிருந்து நிலக்கரியை ஏற்றுமதி செய்ய ஏழு ஆண்டுகள் பிடித்தன. இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் அங்கிருந்து நிலக்கரி ஏற்றுமதி செய்ய முடிந்தது. சரியாக அந்த நேரத்தில் இந்திய அனல் மின் நிலையங்களில் கடும் நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்பட்டது. உடனே மத்திய மின்சார அமைச்சகம், ‘எல்லா அனல் மின் நிலையங்களும் இந்திய நிலக்கரியுடன் 10% வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி செய்து பயன்படுத்த வேண்டும்' என்று உத்தரவு போட்டது.
சரியாக அதே ஏப்ரல் மாதம் 2-ம் தேதி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டன. இதன்மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையே வரியற்ற ஏற்றுமதியும் இறக்குமதியும் சாத்தியமானது. அதானியின் ஆஸ்திரேலிய நிலக்கரி எந்த வரிச்சுமையும் இல்லாமல் இந்தியாவில் வந்து இறங்கியது.
குஜராத் கிராமம் ஒன்றைப் பூர்வீகமாகக் கொண்டு அகமதாபாத் வந்து செட்டிலான குடும்பத்தில் அதானி பிறந்தார். உடன் பிறந்தவர்கள் ஏழு பேர். குடும்பத்துக்குச் சின்னதாக டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் இருந்தது. பி.காம் படிப்பதற்கு மும்பை வந்திருந்தார் அதானி. படித்துக்கொண்டே ஒரு வைர வியாபாரியிடம் போய் பார்ட் டைம் வேலை பார்த்தார் கௌதம் அதானி. பிசினஸ் நெளிவு சுளிவுகள் தனக்கு சரளமாக வருவதைச் சில மாதங்களிலேயே உணர்ந்தார். ‘இதற்கு மேல் ஏன் படிக்க வேண்டும்' என்று பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டு அகமதாபாத் திரும்பினார்.
1981-ம் ஆண்டு... அதானியின் அண்ணன் சிறிய அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்துகொண்டிருந்தார். அந்த பிசினஸில் இணைந்தார் அதானி. பி.வி.சி குழாய்களின் தேவை மிக அதிகமாக இருப்பதை உணர்ந்தவர், அதை ஏற்றுமதி செய்ய ஆசைப்பட்டார். ‘Dreams were infinite but finances finite' என்று அதானி எப்போதும் சொல்வார். அதுதான் அவரைத் தயக்கமே இல்லாமல் கடன் வாங்க வைக்கிறது. அப்போதும் அவர் கடன்தான் வாங்கினார். குஜராத் மாநில அரசின் குஜராத் ஸ்டேட் எக்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் அப்போது அதானிக்குக் கடன் உதவி செய்தது. 20 ஆண்டுகள் கழித்து அந்த அரசு நிறுவனத்தையே விலைக்கு வாங்கும் அளவுக்கு அதானி உயர்ந்தார்.

ஒரு தோல்வியில்தான் அதானி சாம்ராஜ்ஜியத்தின் விதை போடப்பட்டது. குஜராத்தின் முந்த்ரா பகுதியில் உப்பளங்கள் நிறைய இருந்தன. அங்கிருந்து உப்பு ஏற்றுமதி செய்ய அமெரிக்காவின் கார்கில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார் அதானி. முந்த்ராவில் நிலம் வாங்கி உப்பளங்கள் அமைத்து, அருகிலேயே சிறு துறைமுகம் ஒன்றையும் உருவாக்கி ஏற்றுமதி செய்வது திட்டம். 3,000 ஏக்கர் நிலங்களை வாங்கி, துறைமுகத்தை உருவாக்க ஆரம்பித்தனர். ஆனால், சூழலியலாளர்களும் உள்ளூர் மக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க, கார்கில் நிறுவனம் பின்வாங்கியது. அந்த நேரத்தில் அதானி விவசாய விளைபொருள்களை வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏற்றுமதி செய்துவந்தார். அந்த பிசினஸே தடுமாறும் அளவுக்கு நஷ்டத்தில் மூழ்கிய அதானிக்கு சிறு வெளிச்சத்தை குஜராத் அரசு கொடுத்தது.
1995-ம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் துறைமுகம் அமைத்துக்கொள்ள குஜராத் அரசு ஒப்புதல் அளித்தது. அவரது எக்ஸ்போர்ட் பிசினஸில் பல கன்டெய்னர்கள் துறைமுகங்களில் இருந்து தாமதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதால் கடும் பிரச்னைகளை அதானி சந்தித்துவந்தார். ‘நாமே ஒரு துறைமுகம் ஆரம்பித்தால் இந்தப் பிரச்னை வராதே' என்று நினைத்தார். முந்த்ரா பகுதியில் சும்மா கிடக்கும் தன் 3,000 ஏக்கர் நிலத்தில் துறைமுகம் அமைக்க ஒப்புதல் வாங்கினார். தன் சக்திக்கு மீறிய கடன் பெற்றுத் துறைமுகத்தைக் கட்டினார். மூன்றே ஆண்டுகளில் முந்த்ரா துறைமுகம் உருவானது.
2000-மாவது ஆண்டில் அடுத்த ஜாக்பாட் அடித்தது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தனியார் நிறுவனங்களும் அமைக்கலாம் என்று குஜராத் அரசு அனுமதி அளித்தது. தன் துறைமுகத்துக்கு அருகிலேயே அதானி சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கினார் அவர். துறைமுகம் அருகில் இருக்கும் வசதி பல நிறுவனங்களை இழுத்தது. அந்தப் பகுதியே பரபரப்பான தொழில் மையமாக உருவெடுத்தது. இப்படி வந்த நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம் கிடைப்பது பெரும் சவாலாக இருந்தது. ‘நாமே மின்உற்பத்தி செய்தால் என்ன' என அதானி நினைத்தார். அதற்கு முன்பாகவே நிலக்கரி இறக்குமதி வர்த்தகத்தில் இறங்கி, இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி வர்த்தக நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்திருந்தது. 2009-ம் ஆண்டு முதல் அனல் மின் நிலையத்தை அமைத்தார். அதன் தேவைகள் பெரிதாக இருக்க, நிலக்கரிச் சுரங்கங்களையும் குத்தகைக்கு எடுத்தார். ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா என வெளிநாடுகளிலும் அதானிக்குச் சுரங்கங்கள் இருக்கின்றன. தொடர்ந்து மின் வினியோக பிசினஸிலும் குதித்தார்.
துறைமுகம் சொந்தமாக இருப்பதால், இயல்பாகவே எண்ணெய்ச் சுத்திகரிப்புத் தொழிலும் அவர் வசமானது. அடுத்ததாக சாலைகள் கட்டுமானத்திலும் அதானி நிறுவனம் இறங்கியது. துறைமுகமும் சாலைகளும் வசப்பட்ட பிறகு விமான நிலையங்களை விட்டால் எப்படி என்று அந்த ஏரியாவிலும் இறங்கினார் அதானி. இப்போது மும்பை விமான நிலையமும், இந்தியாவின் இன்னும் ஆறு விமான நிலையங்களும் அதானி வசம் இருக்கின்றன.
இத்தனை கட்டமைப்புகளையும் செய்வதற்கு ஸ்டீல், அலுமினியம், சிமென்ட் என்று எல்லாம் தேவைப்பட, அவை சார்ந்த நிறுவனங்களையும் வசப்படுத்தினார். சமீபத்தில் ஏ.சி.சி மற்றும் அம்புஜா சிமென்ட் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமென்ட் உற்பத்தியாளராக உயர்ந்திருக்கிறது அதானி குழுமம். அதானி மின் உற்பத்தி நிலையத்தில் வெளிவரும் நிலக்கரிச் சாம்பல் எல்லாம் இப்போது சிமென்ட் தொழிற்சாலைக்கு மூலப்பொருளாகப் போகின்றன. இப்படி ஒரு தொழிலுடன் தொடர்புடைய இன்னொரு நிறுவனம் என விரிந்து விரிந்து அதானி சாம்ராஜ்ஜியம் பெரிதானது.
எந்த நேரமும் நம்மைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கிறார்களே என்று காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சார உற்பத்தி பக்கமும் வந்துவிட்டார் அவர். அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு இப்போது எட்டு கிகா வாட்ஸ் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான 45,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.
‘தமிழ்ப்படம்' சிவா எந்தப் பக்கம் திரும்பினாலும், அவர் பெயரில் நிறுவனங்கள் முளைப்பது மாதிரி இந்தியாவின் எந்தத் திசையில் பார்த்தாலும் அதானியின் நிறுவனங்கள் இருக்கின்றன. மின்சாரம், கன்டெய்னர் வர்த்தகம், காஸ், விமான சேவை, சாலை, உணவுப்பொருள்கள் என்று நம் தினசரி வாழ்வில் ஏதேனும் ஓர் அம்சத்தில் அதானியின் பங்கு நிச்சயம் இருக்கும். இந்தியா முழுக்க 13 துறைமுகங்களை வைத்திருக்கும் அதானி நிறுவனமே, நாட்டின் 25 சதவிகித கடல் வணிகத்தைக் கையாள்கிறது. ஐந்து மாநிலங்களில் மின் நிலையங்களை வைத்திருக்கும் அதானியே, நாட்டின் மிகப்பெரிய தனியார் அனல் மின் உற்பத்தியாளர். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின் விநியோக நிறுவனமும் அவருடையதுதான்.
பிரான்ஸ் நாட்டின் டோட்டல் காஸ் நிறுவனத்துடன் இணைந்து எரிவாயு விநியோகமும் செய்கிறது அதானி நிறுவனம். சிங்கப்பூரின் வில்மார் நிறுவனத்துடன் இணைந்து உணவுப்பொருள் தயாரிப்பும் செய்கிறது.
அதானியை உலகப் பணக்காரர்கள் வரிசைக்கு உயர்த்தியவை அவரின் ஏழு நிறுவனங்கள். இவற்றின் பங்கு மதிப்புகள் தாறுமாறாக உயர்ந்திருக்கின்றன. பொதுவாக இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கினால், அதன் மதிப்பு உயரும். அதானி நிறுவனப் பங்குகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகம்.
குறிப்பாக மொரீஷியஸ் நாட்டின் APMS, Albula, Cresta, Elara India ஆகிய நான்கு முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவு பங்குகளை வாங்கியுள்ளன. இவற்றில் இரண்டு நிறுவனங்கள் ஒரே முகவரியில் இருந்தபடி செயல்படுகின்றன. ஒரு நிறுவனத்துடன், இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்ட தொழிலதிபர் ஒருவருக்குத் தொடர்பு இருக்கிறது. வரி ஏய்ப்பு செய்பவர்களின் சொர்க்கமாகக் கருதப்படும் மொரீஷியஸ் நாட்டிலிருந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் அதிகம் வாங்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கேள்விகள் எழுப்பினார். சரியான பதில் கிடைத்தபாடில்லை.
அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது போலவே அவரின் கடனும் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் முன்னணி பிசினஸ் நிறுவனங்களில் அதிக கடன் சுமை கொண்டதாக அதானி குழுமமே இருக்கிறது. 2022 மே மாதக் கணக்கின்படி அதானிக்கு இருக்கும் கடன், 2,22,000 கோடி ரூபாய். ஒரு நிறுவனத்தை விலைக்கு வாங்குவது, அதன் சொத்து மதிப்பை ஈடாகக் காட்டிக் கடன் பெறுவது, அந்தக் கடன் தொகையை வைத்துப் புது நிறுவனம் வாங்குவது என்று விரிந்துகொண்டே போகிறது அதானி சாம்ராஜ்ஜியம். அவருக்குக் கடன் தர முடியாது என்று மறுக்கும் துணிச்சல் இந்தியாவின் எந்த வங்கி நிர்வாகத்துக்கும் இல்லை.
ஒருவகையில் அதானியின் வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரம் வளர்வதற்கும் உதவியிருக்கிறது. ஆனால், புதுத்தொழில் தொடங்கும் வேட்கையுடன் வரும் இளைஞர்களுக்கு, அவருக்குக் கிடைத்தது போன்ற சலுகைகளும் கடன் உதவிகளும் கிடைத்திருந்தால், கடந்த 40 ஆண்டுகளில் எத்தனை நூறு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகியிருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

****
ஸ்ட்ரிக்ட் வெஜிட்டேரியன்!
குஜராத்தி ஜெயின் குடும்பத்தில் பிறந்த அதானி, ஸ்ட்ரிக்ட் வெஜிட்டேரியன். குஜராத்தி உணவுகளே அதிகம் பிடிக்கும். மதுவும் அருந்துவதில்லை. பிசினஸ் டீல் முடித்ததும் ஷாம்பெய்ன் பாட்டிலைக் குலுக்கி வெற்றிக் கொண்டாட்டம் செய்வதெல்லாம் கிடையாது. பொது நிகழ்ச்சிகள், பார்ட்டி கொண்டாட்டங்களில் அதானியை அதிகம் பார்க்க முடியாது. பெரிய பிசினஸ் மாநாடுகளில் உரை நிகழ்த்துவது என்றெல்லாம் ஒப்புக்கொள்ளாத கூச்ச சுபாவி. இந்திப் படங்களை விரும்பிப் பார்ப்பார். விலையுயர்ந்த ஓவியங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்.
மனைவி ப்ரீத்தி, மகன்கள் கரண் மற்றும் ஜீத் ஆகியோரும் மீடியா கண்களுக்குப் படாத வாழ்க்கையே வாழ்கிறார்கள். குடும்பமாக அடிக்கடி வெளிநாட்டு வெகேஷன் ட்ரிப் போகிறார்கள். சாதாரண ஃபியட் காரில் வாழ்க்கையைத் தொடங்கிய அதானியிடம் பி.எம்.டபிள்யூ முதல் ஃபெராரி வரை ஏராளமான கார்கள் இருக்கின்றன. சில ஹெலிகாப்டர்களும் ஆறு விமானங்களும் சொந்தமாக வைத்திருக்கிறார்.

‘‘15 அடி தூரத்தில் மரணத்தைப் பார்த்தேன்!''
இரண்டு முறை மரணத்தை மிக நெருக்கத்தில் பார்த்து மீண்டு வந்திருக்கிறார் அதானி. முதல் சம்பவம், கடத்தல். 1998 ஜனவரி 1. புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அகமதாபாத் நகரின் கர்ணாவதி கிளப்பிலிருந்து காரில் வந்த அதானியைத் துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் கடத்தியது. பணயத்தொகை கேட்டு அவரை ரகசிய இடத்தில் வைத்திருந்தார்கள். சில மணி நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். குடும்பத்தினர் எவ்வளவு தொகை கொடுத்து விடுவித்தார்கள் என்பதை அதானி சொல்லவில்லை. அந்த நேரத்தில் அகமதாபாத்தில் செல்வாக்காக விளங்கிய நிழல் உலக தாதா பஸ்லு ரஹ்மான் என்பவர்தான் அதானியைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டார்.
இரண்டாவது சம்பவம் இன்னும் பயங்கரமானது. 2008-ம் ஆண்டு நவம்பர் 26. மும்பை தாஜ் ஹோட்டலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு தங்கியிருந்தவர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்தார்கள். 160 பேரைச் சுட்டுக் கொன்றார்கள். தீவிரவாதிகள் உள்ளே நுழைந்த நேரத்தில் தாஜ் ஹோட்டலில் ஒரு பிசினஸ் டீல் பேசியபடி டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் அதானி.
ஹோட்டலின் உயரமான ஓர் இடத்தில் அமர்ந்திருந்த அதானி, தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகச் சுட்டபடி உள்ளே நுழைவதைப் பார்த்தார். சட்டென்று ஒரு சோபாவின் பின்பக்கம் மறைந்துகொண்டார். ஹோட்டலில் நிறைய பேரைத் துப்பாக்கிக்கு இரையாக்கிவிட்டு தீவிரவாதிகள் வேறு பக்கம் நகர்ந்ததும், உயிர் பிழைத்த பலரையும் ஹோட்டல் ஊழியர்கள் தரைத் தளத்துக்குக் கீழே கூட்டிச் சென்று பாதுகாப்பாக மறைத்தனர். மூச்சுவிடக்கூட முடியாத அளவுக்கு நெரிசலான அந்த இடத்தில் இரவு முழுக்க மரண பயத்துடன் எல்லோரும் இருந்தார்கள். மறுநாள் காலை எட்டே முக்கால் மணிக்குப் பாதுகாப்புப் படையினர் அவர்களை பின்பக்க வாசல் வழியாக மீட்டு வந்தனர்.
ஒரு போலீஸ் வேனில் பத்திரமாக மும்பை விமான நிலையம் வந்து, தனது தனி விமானத்தில் அகமதாபாத் வந்திறங்கிய அதானி, ‘‘15 அடி தூரத்தில் மரணத்தைப் பார்த்தேன்'' என்றார்.
தேடி வரும் பிரதமர்கள்!
பெரும் தொழிலதிபர்கள் பலரும் ஆட்சியாளர்களைத் தேடிப் போய்ச் சந்திப்பது வழக்கம். அதானி அதையும் தாண்டிய உயரத்தில் இருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தபோது, அகமதாபாத் சென்று அதானியைச் சந்தித்தார். கடந்த மாதம் டெல்லி வந்த வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா சந்தித்த பிரமுகர்களில் அதானியும் ஒருவர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து, இங்கிருந்து வங்கதேசத்துக்கு 1,500 மெகாவாட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்யவிருக்கிறார் அதானி. அதற்காக ஷேக் ஹசினா நன்றி சொன்னார்.

ஏற்கெனவே இந்திய எல்லையைத் தாண்டி அதானி சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கம், மலேசியாவில் கேரி தீவில் துறைமுகம், இஸ்ரேல் நாட்டில் ஹைஃபா துறைமுகம், தான்சானியா நாட்டில் பகமாயோ துறைமுகம், இலங்கையில் கொழும்புத் துறைமுக கன்டெயினர் டெர்மினல் என எங்கெங்கும் அதானியின் கரங்கள் நீண்டிருக்கின்றன.


இந்த விஷயத்தில் அதானியின் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை நிரூபிக்க ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு இலங்கையில் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ‘‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததால்தான் இதற்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே ஒப்புதல் கொடுத்தார்'' என்று நாடாளுமன்றக் குழுவிடம் வாக்குமூலம் தந்தார், இலங்கை மின் வாரியத் தலைவர் எம்.எம்.சி.ஃபெர்டினான்டோ. இதைச் சொன்னதற்கு விலையாக, அடுத்த சில நாள்களில் ஃபெர்டினான்டோ ராஜினாமா செய்ய நேரிட்டது.

மோடிக்கு மட்டும் நண்பர் இல்லை!
மீடியாக்களில் பிரதமர் மோடியின் நண்பராக மட்டுமே அதானி முன்னிறுத்தப்படுகிறார். ஆனால், பெரும் தொழிலதிபர்களுக்கு எல்லோருமே நண்பர்கள்தான். எதிரிகள் யாரும் கிடையாது. அதானிக்கும் அப்படித்தான்!
அரசியல் மேடைகளில் மோடியுடன் சேர்த்து அதானியையும் தாக்கியவர்தான் மம்தா பானர்ஜி. ஆனால், மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டுக்கு மம்தா முதலில் அழைத்தது அதானியைத்தான். 10,000 கோடி ரூபாய் அங்கு முதலீடு செய்வதாக மம்தா முன்னிலையில் அறிவித்தார் அதானி.

அதானியைக் கடுமையாக எதிர்க்கிறது காங்கிரஸ். ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் கெலாட் அருகில் அமர்ந்திருந்தவர் அதானிதான். 60,000 கோடி ரூபாயை ராஜஸ்தானில் முதலீடு செய்யப்போவதாக அதானி அப்போது அறிவித்தார். ‘‘இவ்வளவு பெரிய முதலீடு வருகிறது என்கிறபோது எந்த முதல்வரால் அதை மறுக்க முடியும்'' என்று ராகுல் காந்தியே இதற்கு சமாளிப்பு பதில் சொன்னார்.