நம்மிடம் உள்ள விவசாய நிலங்கள் எல்லாம் பிளாட்டாகவும், வீடுகளாகவும் மாறி வரும் சூழ்நிலையில், விளைநிலங்கள் இல்லாத துபாய் பாலைவன பூமியில் விவசாயத்தை மேற்கொள்ள பலமுயற்சியை எடுத்துவருகிறது...
பாலைவன பூமியில் விவசாயத்தை முன்னெடுக்க துபாய் போன்ற நாடுகள் விவசாயத்தில் பலவிதமான புதுமுறைகளை கையாண்டு வருகிறது. செங்குத்து தோட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்த நிலையில், தற்போது உருவாக்கிவரும் `அக்ரி ஹப்’ முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவை ஒருங்கிணைந்த வடிவமாக, உலகின் மிகப்பெரிய விவசாய கூடாரமாக (World's Biggest Agri Hub) இந்த அக்ரிகல்சுரல் ஹப் இருக்கும் என்று துபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
துபாய் அக்ரி டூரிசம் (Agritourism) என்று கூறப்படும் இந்த இடத்தில், விவசாயம் மற்றும் டூரிசம் இரண்டையும் கலந்து செய்யும் புதுவகையான பொழுதுபோக்கு அம்சமாக விளங்க வேண்டும் என்று இந்த திட்டத்தின் நோக்கம் குறித்து டெவலப்பர் யூஆர்பி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்து URB-ன் தலைமை நிர்வாகி பகேரியன் கூறுகையில்,
துபாய் அக்ரி ஹப் உலகின் மிகப்பெரிய வேளாண் சுற்றுலாத் தளமாக மாறும், இத்திட்டம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பொழுதுபோக்குக்கு சிறந்த இடமாகவும் விளங்கும். இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும், அத்துடன் பசுமைப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

துபாய்க்குவரும் சுற்றுலா பயணிகள் மற்றும் விருந்தாளிகளை இந்த விவசாய கூடாரத்துக்குள் தங்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு விவசாயத்தில் நேரடி அனுபவம் கிடைக்கும். அதற்காகவே சிறிய வீடுகளும், பெரிய மாளிகைகளும் உள்ளே இருக்கும். மேலும், ஹோட்டல்கள், ரீட்டைல் கடைகள், கமர்சியல் கடைகள், பொழுதுபோக்கு அம்சம், கல்விக் கூடாரம், விவசாயத்துக்கான ஆராய்ச்சிக் கூடாரம் அனைத்தும் இந்தக் கூடாரத்துக்குள் இருக்கும்.
இந்த விவசாய கூடாரத்துக்குள் இயற்கை முறையிலே காய்கறிகள் அனைத்தும் சாகுபடி செய்யப்படும், இதனால் இங்கு வருபவர்களுக்கு பாதுகாப்பான தூய உணவுகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். மேலும், காய்கறிகளை பிரெஷ் ஆக நேரடியாகப் பறித்து அவர்கள் டைனிங் டேபிளில் சமைத்து உண்ணலாம். பாலைவனத்தில் விவசாயத்தை சிறப்பாகச் செய்வது எப்படி என்று ஆராய்சி செய்ய அக்ரி டெக் இன்ஸ்டிட்யூட் இதனுள் செயல்படும்.

இந்த வேளாண் சுற்றுலா பசுமையான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது, இதனால் உள்ளூர்வாசிகளின் வருமானம் அதிகரிக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் வாழ்க்கைத் தரம் மேம்படும், கிராமப்புற உள்ளூர் மக்களுக்கு அதிக ஆரோக்கியம், நல்வாழ்வு, செழிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலையும் மேம்படுத்துகிறது.
இது உள்ளூர் விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் இருந்து நேரடியாகத் தங்கள் விளைபொருள்களை, தயாரிப்புகளை விற்க உதவும். அதே நேரத்தில் பார்வையாளர்களுக்கு புதிய சூழல், ஷாப்பிங், உணவு மற்றும் கல்வி அனுபவத்தை வழங்கும். இந்தத் திட்டம் எதிர்காலத்தில் டிகார்பனைஸ் செய்யப்பட்ட கிராமப்புற சுற்றுலா மையங்களுக்கான புதுமையான வரைபடமாக செயல்படும். இதில் 100% நீர் மறுசுழற்சி, பசுமைப் போக்குவரத்து, கழிவு மேலாண்மை ஆகியவற்றைத் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்துகிறோம் ” என்று தெரிவித்துள்ளார். 2030-ல் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.