சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“குளத்தை மீட்டால் குற்றவாளியா?”

குடும்பத்துடன் எழுத்தாளர் துரை குணா
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் எழுத்தாளர் துரை குணா

புத்தகம் எழுதி நம்மள அசிங்கப்படுத்தினான்; இப்போ வழக்கு போட்டுக் குளத்தைப் பிடுங்கிட்டான்’னு எம்மேல ஆதிக்கச் சாதிக்காரங்க கோவமா இருக்காங்க.என்னைக் கொலை செய்யவும் முயற்சி பண்றாங்க. எதுக்கும் நான் பயப்படற ஆள் இல்ல’’ தெளிவான குரலில் துணிச்சலோடு பேசத்தொடங்குகிறார் எழுத்தாளர் துரை குணா

சமூக அக்கறையுள்ள அழுத்தமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் துரை குணா. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டுவைச் சேர்ந்த இவர் ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நூலை எழுதியதற்காக ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டார். புகார்களின் பேரில் கைதும் செய்யப்பட்டார். ஆனாலும், தன்னைச் சுற்றியுள்ள பிரச்னை களுக்காகக் குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்திக்கொண்டதில்லை. சில நாள்களுக்கு முன் இவர் ஒட்டிய ஒரு போஸ்டரால் அதிகாரிகள் நெருக்கடிக்கு உள்ளாகினர். அது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டார். தற்போது பிணையில் இருக்கும் குணாவிடம் பேசனேன்.

“குளத்தை மீட்டால் குற்றவாளியா?”

“எங்க ஊர்ல வெட்டுக்குளம்னு ஒரு குளம் இருந்துச்சு. சின்ன வயசுல கண்ணு சிவக்குற அளவுக்கு அவ்வளவு நேரம் அதுல குளிச்சு விளையாடி யிருக்கேன். முப்பது வருஷமா அந்தக் குளத்தைக் காணோம். அது இருந்த இடமே தெரியாத அளவுக்குச் சிலர் ஆக்கிரமிச்சு, விவசாய நிலமா மாத்திட்டாங்க. அதை எப்படியாவது மீட்கணும்னு உயர்நீதிமன்ற வழிகாட்டலின்படி, கடந்த சில வருஷமா போராடிட்டு இருக்கேன். தாசில்தார்ல ஆரம்பிச்சு கலெக்டர் வரைக்கும் பலர்கிட்ட மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இனி, அதிகாரிகளை நம்பி பலனில்லைன்னுதான் ‘அரசுப் பணிகளுக்கு ஆள்கள் தேவை’ன்னு போஸ்டர் ஒட்டினேன்.

போஸ்டர் ஒட்டினதுமே அதிகாரிங்க, குளம் இருந்த இடத்தை ஆய்வு பண்ணினாங்க. ஒருவாரம் கழிச்சு, கறம்பக்குடி எஸ்.ஐ என்கிட்ட பேசினார். அடுத்த நாளே, ‘துரை குணா தலைமறைவு, காவல் துறை தேடிவருகிறது’ன்னு பேப்பர்ல நியூஸ் வந்துச்சு. உடனே, ‘நான் எங்கேயும் ஓடி ஒளியல; வீட்டுலதான் இருக்கேன்’னு ஃபேஸ்புக்ல பதிவு போட்டேன். சில நாள் கழிச்சு, ஏதோ கொலை வழக்குல கைது செய்யற மாதிரி என்னைய திடீர்னு கைது செஞ்சாங்க. பிறகு, அவசரம் அவசரமா குளம் இருந்த பகுதியில இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினாங்க. எப்படியோ குளத்தை மீட்டுக்கொடுத்தது மகிழ்ச்சிதான்.”

“உங்களைக் கைது செய்ததுக்கு ஏதேனும் பின்னணி இருக்குன்னு நினைக்கிறீங்களா?”

குடும்பத்துடன் எழுத்தாளர் துரை குணா
குடும்பத்துடன் எழுத்தாளர் துரை குணா

“எங்க ஊர்ல தலித் குடும்பங்கள் அதிகம் இருந்தாலும், ஆதிக்கச் சாதிக்காரங்களுக்கு அடங்கியே இருக்கணும்; அடிமை வேலை செய்யணும்; எங்களுக்குள்ள சண்டை வந்தாலும் அவங்கதான் தீர்த்து வைக்கணும். இப்படி, சாதிக் கொடுமைகள் ஏராளம். இதை ஓர் எழுத்தாளனாகவும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரனாகவும் நான் எழுதின ‘ஊரார் வரைந்த ஓவியம்’ நூல்ல பதிவு செஞ்சேன். அதில் இருந்த உண்மை அவங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துது. ஊரை விட்டு விலக்கி வெச்சு, விரட்டி அடிக்கப் பார்த்தாங்க. எல்லாத்திலிருந்தும் மீண்டு வந்துட்டேன். ஆனா, அவங்க வெறுப்போடவே இருக்காங்க. இப்போ, அவங்க ஆக்கிரமிச்சு, பயன்படுத்திக்கிட்டிருக்கிற குளத்தைப் பிடுங்கிட்டேன்ல. அது இன்னும் அவங்க கோபத்தை அதிகமாக்கிடுச்சு. காவல் துறையும் பொய் வழக்குகளாகப் போட்டுட்டு இருக்காங்க. ஆனா, எதுக்கும் நான் பயப்படப் போறதில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில நான் இருந்தாலும், அவங்க நமக்காக வரமாட்டாங்க. அதை நான் பெரிசா எடுத்துக்கறதும் இல்ல. சமூக விரோதச் செயல்கள தொடர்ந்து அம்பலப்படுத்திக்கிட்டே இருப்பேன். இப்ப எங்க ஊரு குளத்தை மீட்டுக் கொண்டுவந்தது பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கு” என்கிறார் உறுதியுடன்.

நரக வேதனையா இருக்கும்!

“வழக்கம்போல அன்னிக்கும் கடைக்குப் போறதா சொல்லிட்டுப் போனார். கொஞ்ச நேரத்துல அவரைக் கைது செஞ்சிட்டதாகச் சொன்னாங்க. இதே கறம்பங்குடி போலீஸ்தான் ஏற்கெனவே, பொய்க் கேஸு போட்டு இவரைச் சிறையில அடைச்சாங்க. செய்யாத தப்புக்குக் கொஞ்ச நாள் தண்டனை அனுபவிச்சாரு. பொதுமக்களோட நலனுக்காகப் போராடினது குத்தமா? இவரை மட்டும் துரத்தி துரத்தி அடிக்கிறாங்க. அவர் சிறைக்குப் போய்ட்டா நான், புள்ளைங்க, மாமியார், மாமானார் யாரும் சரியா சாப்பிடக்கூட மாட்டோம். தூக்கமும் வராது. நரக வேதனையா இருக்கும். கல்யாணம் ஆன புதுசுல, ஊர்ப்பிரச்னையெல்லாம் நமக்கு எதுக்குன்னு சொல்வேன். போராட்டத்துல உள்ள நியாயத்தைச் சொல்லி என் வாய அடைச்சிடுவாரு. கல்யாணமாகிப் பத்து வருஷம் ஆச்சு... சண்டை போட்டுட்டு ஒரு தடவைகூட அப்பா வீட்டுக்குப் போனதில்லை. அவர் சிறையில இருக்கும்போது. ‘புள்ளைங்கள கூப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்துடு’ன்னு அப்பா சொன்னார். ஆனா நான் போகலே. அவருக்கு ஜாமீன் கிடைக்கக்கூடாதுன்னு பல பேர் தீவிரமா வேலை பார்த்தாங்க. எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே கொண்டு வந்துட்டோம்” என்கிறார் துரைகுணாவின் மனைவி கோகிலா.