
விடுபட்டுப்போன பிரியங்களுக்காக இறைஞ்சுகிற பிரார்த்தனைமொழி கவிஞர் பிரான்சிஸ் கிருபாவி னுடையது. சென்னை கே.கே.நகரில் காரைபெயர்ந்த மேன்சன் அறையில் பிரான்சிஸ் கிருபாவைச் சந்தித்தேன்.
ஆறுமாதங்களுக்கு முன்பு பத்திரிகை களிலும் தொலைக்காட்சி களிலும் பரபரப்பாக அடிபட்ட பெயர் இவருடையது. எழுத்தாளர்கள் என்றாலே தமிழ்ச்சமூகத்தின் கவனத்துக்கு வராதவர்கள் என்றிருந்த நிலை மாறியதற்குக் காரணம், பிரான்சிஸ் கிருபாமீது விழுந்த கொலைப்பழி. கோயம்பேட்டில் ஒருவரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டவர், மறுநாளே அது தவறான குற்றச்சாட்டு என்று உறுதிசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். எந்த இடத்தில் அவர்மீது கொலைப்பழி சுமத்தப்பட்டதோ, அதே கோயம்பேட்டில் பணிபுரியும் சுமைப்பணித் தொழிலாளர்கள் சங்கத்தினர் பிரான்சிஸ் கிருபாவின் புதிய கவிதைத்தொகுப்பான, ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.
நிரந்தர வலியைச் சுமந்து நிற்கும் பாவம் கொண்ட முகத்தில், சுடர்போலப் பார்வையும் புன்னகையும் தீட்சண்யமாயிருந்தன. அவரிடம் கேள்வி கேட்கத் தொடங்கினேன். அலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் துப்பிச்செல்லும் நண்டுகள்போல பதில்களைத் தந்தார்.
“மே மாதத்தில் கோயம்பேட்டில் என்னதான் நடந்தது?”
“வலிப்பில் துடித்துக்கொண்டிருந்த ஒரு சகோதரனை மடியில் கிடத்தி, கம்பியை அவன் கைகளில் பொதித்தேன். தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்கு நான் அவரைத் தாக்கியதுபோலத் தோன்றியிருக்கிறது. சுற்றியிருந்த சிலர், நான் கொலைசெய்ததாக நினைத்து என்னை அடித்தார்கள். காவல்துறை என்னைக் கைதுசெய்தது. மரித்துப்போன அந்தச் சகோதரனின் பிரேதப் பரிசோதனை அறிக்கைதான் நான் கொலைக்குற்றவாளி இல்லை என்ற உண்மைக்கு சாட்சி சொன்னது.”

“எழுத்தின் மீதான ஆர்வம் எப்படி வந்தது? எந்த வயதில் எழுதத் தொடங்கினீர்கள்?”
“சிறுவயதில் சரியாகப் படிக்கவில்லை என்ற குற்றவுணர்ச்சி எனக்கிருந்தது. அப்பாவுக்காக ஏதாவது எழுத வேண்டும் என்றுதான் எழுதத் தொடங்கினேன். கண்ணதாசன் கைகளில் பேனாவுடன் எதையோ சிந்திக்கும் புகைப்படம் நானும் கண்ணதாசனாக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. கவிதைகள் எழுதினேன். கவிதை எழுதுவது ஒரு மயக்கம். அது எனக்கு ஒரு மன விடுதலையைத் தந்தது. பம்பாயில் மராத்தி முரசு மற்றும் சில இதழ்களில் என் கவிதைகள் பிரசுரமாயின. எழுத ஆரம்பித்தவுடன் சில கவிதைகளை நான்தான் எழுதினேனா என ஆச்சர்யப்பட்டதும் உண்டு.’’
“உங்கள் மும்பை வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்...”
“எட்டாம் வகுப்பு பள்ளிப்படிப்புடன் நாங்குநேரியின் பத்தினிப்பாறையிலிருந்து பிரான்சிஸ் சந்தன பாண்டியனாக பம்பாய்க்குச் சென்றேன். டீக்கடை, லேத் பட்டறை வேலைகளில் என் அன்றாடங்கள் கழிந்தன. ‘பம்பாய்’, ‘மும்பையாக’ மாறிக்கொண்டிருந்த உக்கிர தினங்களில் அங்கு லேத் பட்டறை நடத்திவந்தேன். பாபர் மசூதி இடிப்பின்போது ஏற்பட்ட கலவரங்களில் என் பட்டறையும் தடமிழந்தது. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு என் நிழலை மட்டும் சுமந்துகொண்டு சென்னை வந்த எனக்கு, பிறகு எல்லாமே சென்னைதான்.”
“நிலம், இருப்பிடம் என்பதைப் பற்றியான உங்களின் மதிப்பீடு என்ன?’’
“ `நிழலைத்தவிர ஏதுமற்றவன்’ என்ற என் படிமம்போல, ஏனோ நிலமும், இருப்பும் எனக்குப் பொருந்தமாட்டேன் என்கின்றன. அறைகள் எனக்குச் சலிப்பூட்டுகின்றன. உறங்குவதற்கு மட்டுமானவையாக அவை எஞ்சி நிற்கின்றன. கடற்கரைதான் எனக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது.”
“உங்கள் கவிதைகளை எந்த வகைமைக்குள் பொருத்துவீர்கள்?“
“எனக்கு அப்படி எதுவும் தெரியாது. என் கவிதைகளை யாரெனும் படித்து அது இத்தகையது என எழுதுவதன் மூலமாகவே நான் சிலவற்றைத் தெரிந்துகொள்கிறேன். என் கவிதைகளில் மொழியின் சிலிர்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.”
“உங்கள் கவிதைகளில் பைபிளின் தாக்கம் இருக்கிறதே?’’
“ `பழைய ஏற்பாடு’ நான் விரும்பி வாசித்தது. அதன் மொழி உச்சம். ஒருவேளை என்னுடைய உரைநடையில் அதன் தாக்கமிருக்கலாம்.”
“திரைப்படத்துறை அனுபவம்?’’
“ `காமராஜ்’ திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுதினேன். ‘நமனை அஞ்சோம்’ என்ற படத்துக்கு ஆறு பாடல்கள் எழுதினேன். பாடல் பதிவும் நடந்துவிட்டது. அவை வெளிவந்தால் எனக்கு வெளிச்சத்தைக் கொடுப்பவையாக இருக்கும். சமீபத்தில் ‘பைரி’ என்ற படத்தில் நடித்தேன். எங்குமே பெரிய பொருளுதவி கிடைத்ததில்லை. என் மனமும் எதிர்பார்த்ததில்லை.’’
“வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“என்னால் மூன்று இட்லிகளைக்கூட முழுமையாகச் சாப்பிட முடியாது. சில சமயங்களில் அதற்கும்கூடப் பணமிருக்காது. முகம் தெரியாதவர்களின், நண்பர்களின் அன்புதான் எனக்குள்ளிருக்கும் வெற்றிடத்தை இட்டு நிரப்புகிறது. நண்பர்கள்தான் என்னைப் பார்த்துக்கொள்கிறார்கள்.”
புகைப்படம் எடுப்பதற்காகத் தெருவில் இறங்கி நடந்தோம். காற்றாடி விற்றுக்கொண்டிருந்த வடநாட்டுச் சிறுமியிடம் ஒரு காற்றாடியை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டார். புகைப்படங்கள் எடுத்தோம். ‘ஏறக்குறைய’ குழந்தையாகிப்போன பிரான்சிஸ் கிருபா புன்னகைத்துக்கொண்டிருந்தார்.