சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

எழுத்தாளனின் தீபாவளி

எஸ்.ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ராமகிருஷ்ணன்

அனுபவம்

பண்டிகைகளைக் கொண்டாடுவது என்றாலே இனிப்பு சாப்பிடுவது; புத்தாடைகள் அணிந்துகொள்வது; புதுப்படம் பார்ப்பது; விருப்பமான விருந்தை உண்பது... இவ்வளவுதான் எனப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தீபாவளியோ, பொங்கலோ, புத்தாண்டோ எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் இது, தானே நடந்தேறுகிறது.

மக்கு எதையும் கொண்டாடத் தெரியவில்லை. `கூடி உண்பதும் கூடிக் குடிப்பதும்தான் கொண்டாட்டம்’ என இளம் தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பண்டிகைகளின் நோக்கம், ஒன்றுகூடுதல். விருப்பமான நண்பர்கள், உறவினர்கள், நம்மை நேசிப்பவர்கள், நம்மால் நேசிக்கப்படுபவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசி, மகிழ்ந்து, தங்களின் அன்பைப் பகிர்ந்துகொள்வதே பண்டிகைகளின் உண்மையான அர்த்தம்.

எழுத்தாளனின் தீபாவளி
எழுத்தாளனின் தீபாவளி

இன்று பண்டிகை நாள்களில் நம் வீடு தேடி வருபவர்களும் குறைந்துவிட்டார்கள். நாம் தேடிப் போய்ப் பார்த்து உறவாடுவதும் குறைந்துவிட்டது. நம் வீடு, நம் பிள்ளைகள் எனச் சுருங்கிப்போய்விட்டிருக்கிறோம்.

நான் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவன். அங்கே தீபாவளி, பொங்கல் என்பதெல்லாம் நீண்ட காத்திருப்பின் பின் வரும் பண்டிகைகள். ஆகவே, அவற்றுக்கான தயாரிப்பும் காத்திருப்பும் நீண்டதாகவே இருக்கும்.

ஆயத்த ஆடைகளின் வருகைக்கு முன்னர்வரை, `தீபாவளி’ என்றாலே டெய்லர் கடைதான் நினைவுக்கு வரும். டெய்லர் கடைகளில் கூட்டம் அலைமோதும். விடிந்தால் தீபாவளி. காலை நாலு மணிவரை டெய்லர் கடையில் காத்திருந்து, தைத்த புது உடைகளை வாங்கி வந்து அணிவோம். அந்தக் காத்திருப்பு இன்றில்லை. அந்த டெய்லர் கடைகள் இப்போது மூடப்பட்டுவிட்டன. ரெடிமேடு உடைகள் வந்த பிறகு புத்தாடைகள் என்பவை எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளும் விஷயமாகிவிட்டன.

தீபாவளி
தீபாவளி

இப்போதும் நான் என் உடைகளைத் தேர்வு செய்வதில் அக்கறையற்றவனே. யாராவது துணைக்கு வர வேண்டும். மனைவியோ, மகன்களோ உடன் வருகிறார்கள். பிடித்த பச்சை நிறத்தில்தான் எத்தனை சட்டைகள் வாங்கியிருப்பேன் என்று தெரியாது. கட்டம் போட்ட சட்டைகள்தான் எனது விருப்பம். உடைகள் வாங்கும் விஷயத்தில் நாலு கடை தேடிப் பார்த்து நல்லதாக வாங்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குக் கிடையாது. வழக்கமாகச் செல்லும் துணிக்கடை. அங்கே இருப்பதில் பிடித்தமானது என்ற அளவில் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

கொண்டாட்டத்தைத் தீர்மானிப்பது நமது வயதே. இப்போதெல்லாம் பிள்ளைகள் எப்படி தீபாவளி கொண்டாட விரும்புகிறார்கள் என்பதே முக்கியம். காலை நாலு மணிக்கு எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு தீபாவளியைக் கொண்டாடும் வழக்கமெல்லாம் சென்னை வந்த பிறகு காணாமல்போய்விட்டது. எல்லா தினங்களையும் போலத்தான் தீபாவளியும் காலை ஆறு மணிக்குத் தொடங்குகிறது.

எல்லாக் கொண்டாட்டங்களையும் எனக்கு உரியதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். ஆகவே எனது இனிப்பு. எனது விருந்து யாவும் புத்தகங்களே.

ஒவ்வொரு தீபாவளியின்போதும் காலை எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்தவுடன் எனக்கு விருப்பமான கவிதைகளைப் படிப்பேன். பத்து பதினைந்து சங்கக் கவிதைகள். ஐந்தாறு நவீனக் கவிதைகள் வாசிப்பேன். அவை தரும் மகிழ்ச்சிதான் பண்டிகையின் உண்மையான சந்தோஷம் எனக் கருதுவேன்.

தீபாவளி
தீபாவளி

பிறகு ஒரு மணி நேரம் ஹிந்துஸ்தானி இசை கேட்பேன். குறிப்பாக, பிஸ்மில்லா கானைக் கேட்காத தீபாவளியில்லை. ஷெனாய் எத்தனை அற்புதமான வாத்தியம். பிஸ்மில்லா கானின் ஷெனாய், மழைபோல நம்மைக் குளிரவைக்கக் கூடியது.

முன்பெல்லாம் தீபாவளிக்கு முந்தைய இரவிலும் காலையிலும் நிச்சயம் மழை பெய்யும். எனது பள்ளி வயதில் தீபாவளி யன்று அடைமழையே பெய்திருக்கிறது. பட்டாசு வெடிக்க, `மழை நிற்காதா...’ என ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்போம். குடை பிடித்தபடியேதான் சினிமாவுக்குப் போவோம். புதுப்படம் பார்ப்பதுதானே தீபாவளியின் விசேஷம். இன்று சினிமா தியேட்டர் பக்கம் போவதேயில்லை. தொலைக்காட்சிகளையும் அணைத்து விடுவோம்.

நல்ல இசை; நல்ல கவிதை; நல்ல புத்தகம்’ மகிழ்ச்சியான நண்பர்கள் சந்திப்பு; வாழ்த்து தெரிவித்தல்... இவை போதும் எனது கொண்டாட்டத்துக்கு.

தீபாவளி தினத்தில் நண்பர்களை அழைத்து வாழ்த்து சொல்வேன். நிறைய நண்பர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். சேர்ந்து உரையாடுவோம்; சேர்ந்து உண்போம்.

தீபாவளி நாளில் கு.அழகிரிசாமி எழுதிய `ராஜா வந்திருக்கிறார்’ சிறுகதையை வாசிக்கத் தவறியதேயில்லை. அந்தக் கதை கிராமத்தின் தீபாவளி நாளைப் பற்றியது. வீடு தேடி வந்திருக்கும் ஏழைச் சிறுவனுக்குப் புத்தாடைகள் தர வசதியில்லாமல் ஒரு குடும்பம் துண்டு ஒன்றைக் கொடுத்துக் கட்டிக்கொள்ள வைக்கிறது. அழகிரிசாமி கரிசல் கிராமங் களின் வாழ்க்கையை மிக அழகாகக் கதையில் எழுதியிருக்கிறார். குறிப்பாக, அந்தக் குடும்பத்தின் அன்பு நெகிழச் செய்யக்கூடியது. அந்தக் கதையை வாசித்தவுடன், இந்தப் பையனைப்போல எத்தனை பேர் தீபாவளி அன்றும் கொண்டாட வழியின்றித் தவிக்கிறார்கள் என்ற உண்மை மனதை வலிகொள்ளச் செய்யும்.

எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன்

நௌஷத் இசையில் `ஆயி தீபாவளி...’ என்றொரு இந்திப் பாடல் இருக்கிறது. 1944-ம் ஆண்டில் வெளியான `ரத்தன்’ படப் பாடல் அது. சோஹ்ராபாய் அம்பாலேவாலி பாடியது. அந்தப் பாடல் என் விருப்பத்துக்குரியது. யூடியூப்பில் காணக்கிடைக்கிறது. அதை தீபாவளியன்று நிச்சயம் பார்ப்பேன். மென் சோகம் கலந்த பாடல். தட்டில் தீபங்களை ஏற்றி, கையில்வைத்தபடியே சுற்றி ஆடும் பெண்கள். ஏக்கத்துடன் பாடும் குரல். வட இந்தியாவில் தீபாவளி கொண்டாடுவதைக் கண்டிருக்கிறேன். அது முற்றிலும் மாறுபட்டது. அந்த நினைவுகளின் அடையாளம்போலவே அந்தப் பாடல் இருக்கும்.

தீபாவளியைக் கொண்டாடுவதில் மதுரைக்கு நிகரில்லை என்றே சொல்வேன். குறிப்பாக, தீபாவளிக்கு முந்தைய இரவு மதுரை டவுன்ஹால் ரோட்டுக்கு ஒரு முறை போய்ப் பாருங்கள். உற்சாகம் கொப்புளிக்கும். துணி வியாபாரிகளின் உரத்த குரல். பட்டாசுக் கடைகள். விடிய விடிய பொருள்களை வாங்கிப் போகும் மக்கள். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் புத்தாடை அணிந்து உற்சாகமாக வீதியில் பட்டாசு வெடிக்கும் குடும்பம். விதவிதமான உணவு வகைகள். தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம். பண்டிகையின் உண்மையான கொண்டாட்டத்தை மதுரையில்தான் காண முடியும். இதற்காகவே பலமுறை தீபாவளிக்கு மதுரைக்குச் செல்வது வழக்கம்.

முன்பெல்லாம் தீபாவளிப் பலகாரங்களை வீட்டில் செய்வார்கள். இந்தப் பணி ஒருவார காலத்துக்கு முன்னரே தொடங்கிவிடும். முறுக்கு, அதிசரம் தொடங்கி மைசூர்ப்பாகு வரை வீட்டுப் பலகாரங்கள்தான். இன்றைக்கு, பெரும்பாலும் கடையில் வாங்கியவை. அதிலும் தித்திப்பு அதிகமான இனிப்பு வகைகள். அவற்றைக் கண்ணால் பார்ப்பதோடு சரி.

பெரும்பான்மையான வருடங்களில் தீபாவளி தினத்தில் டேவிட் லீன் இயக்கிய `லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ படம் பார்ப்பது வழக்கம். ஏனோ அந்தப் படத்தை அன்றைக்குப் பார்க்கப் பிடித்திருக்கிறது.

பட்டாசுப் புகை அலர்ஜி என்பதால், அன்று வீட்டை விட்டு வீதிக்குப் போகவே மாட்டேன். பட்டாசு வெடிப்பதில் பையன்களும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பட்டாசு ஆலை வைத்திருக்கும் நண்பர் பெரிய பாக்ஸ் நிறைய அனுப்பிவைத்து அன்பைத் தெரிவிக்கிறார் என்பதால், பட்டாசு வெடிக்க ஆள்களைத் திரட்ட வேண்டியிருக்கும். தூரத்து வானில் ஒளிரும் வாண வேடிக்கைகளை மொட்டை மாடியில் நின்று பார்த்துக்கொள்வேன். அதுபோதும்.

பெருநகர வாழ்க்கை எல்லாக் கொண்டாட்டங்களையும் உருமாற்றிவிட்டிருக்கிறது. நுகர்வுக் கலாசாரத்தால் பண்டிகைகளின் இயல்பு பெரிதாக மாறிவிட்டது. சின்னஞ்சிறிய ஊர்களில்தான் இன்றும் தீபாவளி தன் இயல்பில் கொண்டாடப்படுகிறது.

மேன்ஷனில் வசித்த நாள்களில் தீபாவளி அன்று, `யாராவது வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட மாட்டார்களா?’ என ஏங்கிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் அன்று உணவகங்களும் இருக்காது. `இத்தனை பேர் தீபாவளி கொண்டாடுகிறார்கள். ஒருவர் கூடவா நம்மை நினைத்துக்கொள்ள மாட்டார்கள்?’ என வருத்தமாக இருக்கும். அரிதாகச் சில நேரம் நண்பர் எவராவது தன் வீட்டுக்கு அழைத்துப் போய் மதிய உணவு தருவார்கள். அந்த ஏக்கம்தானோ என்னவோ, இன்றைக்கு என் நண்பர்களில் மேன்ஷனில் இருப்பவர்களை, `தீபாவளி சாப்பாடு சாப்பிட வாருங்கள்’ என அழைப்பது எனது வழக்கம்.

இப்போது பல குடும்பங்களில் தீபாவளி விருந்து, ஹோட்டல் களில்தான் சாப்பிடுகிறார்கள். ஆகவே ஹோட்டல்களை மூடுவதில்லை. சொல்லப்போனால் வழக்கத்தைவிட, தீபாவளி தினத்தில் அதிக கூட்டமிருக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன்

தீபாவளிக்குச் சொந்த ஊருக்குக் கிளம்பும் காலம் ஒன்றிருந்தது. பேருந்தில் இடம் கிடைக்காமல் முண்டியடித்து மதுரைவரை நின்றுகொண்டே போயிருக்கிறேன். ஒருமுறை நண்பர்கள் சிலரோடு கடலில் சிறிய படகில் தீபாவளி கொண்டாடிய அனுபவமும் எனக்குண்டு. இன்னொரு முறை வட இந்தியாவி லிருந்து தீபாவளி தினத்தன்று ரயிலில் வந்துகொண்டிருந்தேன். தீபாவளி இனிப்பும் உணவும் ரயில் பயணிகள் தந்தார்கள். அந்தக் கொண்டாட்டம் மறக்க முடியாதது.

ஒருமுறை மத்தியப் பிரதேசத்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். விடிந்தால் தீபாவளி. சாலையோரம் இருந்த வீட்டில் நானும் நண்பனும் அழையா விருந்தாளியாகக் கதவைத் தட்டினோம். சிறிய வீடு. ஏழ்மையான குடும்பம். அவர்கள் சந்தோஷத்துடன் வரவேற்று, உணவு கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார்கள். அந்த அன்புதான் தீபாவளியின் உண்மையான வெளிப்பாடு.

தீபாவளி இரவில் வாசிப்ப தற்கெனச் சில புத்தகங்கள் வைத்திருக்கிறேன். அதில் முக்கியமானது டால்ஸ்டாயின், `புத்துயிர்ப்பு’ நாவல். எத்தனை முறை வாசித்தாலும் தீராத அனுபவத்தைத் தரும் நாவல் அது.

இரவு, கறுப்புவெள்ளைக்கால சினிமாப் பாடல்களை ஒரு மணி நேரம் பார்ப்பேன். நினைவில் பல்வேறு தீபாவளிகள் எழுந்து அடங்கும்.

தீபாவளியின் மறுநாள் அதிகாலை நடைப்பயிற்சிக்காக வீதிக்கு வரும்போது சாலை யெங்கும் வெடித்த பட்டாசுக் காகிதங்கள், குப்பைகள், காலி மது போத்தல்கள் கிடப்பதைக் காண்பேன். கொண்டாட் டத்தின் அடையாளம் இது தானா என மனக்கசப்பாக இருக்கும். போதையைக் கொண்டாட்டத்தின் வடிவமாக இளந்தலைமுறை எண்ணுகிறது என்பது தாள முடியாத துயரம்.

இசையும் கவிதையும் எழுத்தும் நல்ல மனிதர்களின் அன்பும்தானே கொண்டாட் டத்தின் அடையாளங்கள். எனது தீபாவளியை இப்படித் தான் கொண்டாடுகிறேன்.