அலசல்
Published:Updated:

மும்பை டு உ.பி... இடம் மாறுகிறதா பாலிவுட்?

யோகி ஆதித்யநாத்
பிரீமியம் ஸ்டோரி
News
யோகி ஆதித்யநாத்

எங்களது மாநிலத்திலிருந்து தொழிற்சாலைகளைப் பிடுங்கிச் செல்ல நினைத்தால் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்

ஏற்கெனவே, மகாராஷ்டிராவின் தொழில் முதலீடுகளை குஜராத்துக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும் மடை மாற்றுகிறது மத்திய அரசு என்று குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக மகாராஷ்டிராவுக்குச் சென்றிருப்பது அந்த மாநில அரசியலில் கடும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது!

உ.பி-யில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறவிருக்கும் ‘சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என்பதில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். இதற்காக நாட்டிலுள்ள வளர்ச்சியடைந்த எட்டு மாநிலங்களுக்கு நேரில் சென்றும் தொழிலதிபர்களைச் சந்தித்துவருகிறார்.

மும்பை டு உ.பி... இடம் மாறுகிறதா பாலிவுட்?

ஏற்கெனவே மகாராஷ்டிராவுக்கு வரவேண்டிய செமிகண்டக்டர் தொழிற்சாலை, போர் விமானங்கள் தயாரித்தல் உட்பட பல முக்கியத் தொழிற்சாலைகள் பா.ஜ.க ஆளும் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதால், மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடியைக் கொடுத்துவருகின்றன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கையை மீறி மும்பையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்து தொழிலதிபர்களைச் சந்தித்துப்பேசினார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். இப்படி மும்பையிலிருந்து 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைத் திரட்டிச் சென்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்துப் பேசிய உத்தவ் தாக்கரேவின் வலதுகரமான சஞ்சய் ராவத் எம்.பி., ‘‘யோகி ஆதித்யநாத், முதலீடுகளைக் கவர ரோடு ஷோ நடத்துவது ஆச்சர்யமாக இருக்கிறது. எங்களது மாநிலத்திலிருந்து தொழிற்சாலைகளைப் பிடுங்கிச் செல்ல நினைத்தால் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’’ என்று ஆவேசக் குரலில் எச்சரித்திருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘‘மகாராஷ்டிராவிலிருந்து யாரும் தொழிலை எடுத்துச் சென்றுவிட முடியாது. எனவே, யாரும் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை’’ எனச் சமாளித்திருக்கிறார்.

மும்பை டு உ.பி... இடம் மாறுகிறதா பாலிவுட்?

இதற்கிடையே, ‘யோகி ஆதித்யநாத் மும்பை விசிட்டின் பிரதான நோக்கமே பாலிவுட் பிரபலங்களைத் தங்களது மாநிலத்துக்கு இழுப்பதுதான்’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இது குறித்துப் பேசுபவர்கள், ‘‘பாலிவுட் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புக்காக மும்பை ஃபிலிம் சிட்டி அல்லது ஹைதராபாத் நகரங்களுக்குத்தான் செல்கின்றனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் 1,200 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட திரைப்பட நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே, பாலிவுட் தயாரிப்பாளர்களைத் தனியாக அழைத்து மும்பையில் முக்கிய ஆலோசனை நடத்தினார் யோகி. அப்போது, ‘நொய்டா திரைப்பட நகரில் சினிமா, வெப் சீரீஸ் படப்பிடிப்பு மற்றும் ஸ்டூடியோக்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்’’ என்கின்றனர்.

யோகி ஆதித்யநாத்தின் மும்பைப் பயணத்தால் அச்சமடைந்திருக்கும் மகாராஷ்டிரா அரசு, அவசர அவசரமாக மும்பை திரைப்பட நகரை ரூ.4,500 கோடியில் நவீனப்படுத்த முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது!