பாலிஷ் போட்டுத் தர்றேன் ஆன்ட்டி... வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்துபவர்களே... உஷார்!

முதியோர்களை கவனித்துக்கொள்ளும் பணிகளுக்குச் செல்லும் விஜயலட்சுமி, குறுகியகாலத்தில் அந்தக் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகத் தொடங்குவார்.
வயதானவர்களை கவனித்துக்கொள்ளச் செல்லும் இடங்களிலெல்லாம் தங்க நகைகள், பணத்தைத் திருடி கைவரிசை காட்டிவந்த இளம்பெண், முதன்முறையாக சென்னையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ‘தன் காதலனுக்காகத் தொடர்ந்து இந்தத் திருட்டுத் தொழிலில் அவர் ஈடுபட்டதாகவும், தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் அவர் கைவரிசை காட்டியிருப்பதாகவும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்!
சென்னையிலுள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் திரிமூர்த்தி என்பவர், உடல்நலமில்லாமல் இருக்கும் தன் மாமியாரை கவனித்துக்கொள்ள சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரைப் பணியமர்த்தியிருக்கிறார். வயதான அந்தப் பெண்மணியை விஜயலட்சுமி கவனித்துக்கொண்டவிதமும், குடும்பத்தினரிடம் அவர் பழகியவிதமும் திரிமூர்த்தியை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. திரிமூர்த்தி குடும்பத்திடம், ‘எனக்குன்னு சொந்தம் பந்தம் ஏதுமில்லை. நான் தனியாத்தான் வாழுறேன்’ என அனுதாபப் பாடல்களையும் பாடியிருக்கிறார் விஜயலட்சுமி. தன்னுடைய பின்புலத்தை அதற்கு மேல் அவர் சொல்லவில்லை.

இந்தச் சூழலில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி, ஹைதராபாத்திலிருக்கும் தன் உறவினர் வீட்டுக்குக் குடும்பத்தோடு சென்றிருக்கிறார் திரிமூர்த்தி. சென்னை வீட்டில் திரிமூர்த்தியின் மாமியாரும் விஜயலட்சுமியும் மட்டுமே இருந்திருக்கிறார்கள். டிசம்பர் 29-ம் தேதி ஹைதராபாத்திலிருந்த திரிமூர்த்திக்கு போன் செய்த அவரின் மாமியார், “எனக்கு வழக்கமா கொடுக்குற மாத்திரையை விஜயலட்சுமி கொடுத்தாப்பா. அதைப் போட்டதுலருந்து மயக்கமா வந்துச்சு. கை காலெல்லாம் அசைக்க முடியலை. கொஞ்ச நேரத்துல, என் நகையை எல்லாம் கழட்டினா. `ஏன் நகையை எடுக்கறே’ன்னு மயக்கத்துலேயே கேட்டேன். ‘பாலிஷ் போட்டுத் தர்றேன் ஆன்டி’ன்னு சொன்னா. நான் தடுத்தும் கேட்காம, நகையையெல்லாம் எடுத்துட்டா. இப்ப வர்றேன்னு சொல்லிட்டுப் போனவ இன்னும் வீடு திரும்பலை” எனக் கூறவும் திரிமூர்த்திக்கு விஷயத்தின் விபரீதம் புரிந்திருக்கிறது. விஜயலட்சுமியை அவர் தொடர்புகொள்ள முயன்றபோது, போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது.
தாழம்பூர் காவல் நிலையத்தில் நகைகள் திருட்டுப்போனதாக திரிமூர்த்தி புகாரளிக்கவும், போலீஸ் விசாரணையில், தமிழகம் முழுவதும் ‘கேர் டேக்கர்’ வேலைக்குச் சென்று நகைகள், பணத்தை விஜயலட்சுமி திருடியது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய தாழம்பூர் போலீஸார், ‘‘ஒரு குழந்தைக்குத் தாயான விஜயலட்சுமியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அவரின் கணவர், குழந்தையோடு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பிறகு விஜயலட்சுமியின் வாழ்க்கை தடம் மாறத் தொடங்கியிருக்கிறது. அவருக்கு ஏராளமான ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடன் சந்தோஷமாகவும் ஆடம்பரமாகவும் வாழத்தான் வீட்டு வேலை செய்த வீடுகளில் நகைகள், பணத்தைத் திருடிவந்திருக்கிறார் விஜயலட்சுமி.

முதியோர்களை கவனித்துக்கொள்ளும் பணிகளுக்குச் செல்லும் விஜயலட்சுமி, குறுகியகாலத்தில் அந்தக் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகத் தொடங்குவார். அப்போது, வீட்டிலுள்ள ஆண்களில் யாராவது சபல புத்தியுடன் இருந்தால் அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்வார். ஒரு வீட்டில் மூன்று மாதங்கள் வரைதான் வேலை பார்ப்பார். அதற்குள், அந்த வீட்டிலிருந்து நகை, பணத்தைத் திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். போலீஸாரிடம் சிக்கிக்கொள்ளாமலிருக்க, தான் பயன்படுத்திவரும் செல்போன் சிம் கார்டுகளைத் தூக்கி எறிந்துவிடுவார். இப்படி, தமிழகம் முழுவதும் சுமார் 25 இடங்களில் விஜயலட்சுமி கைவரிசை காட்டியிருக்கிறார்.
நகையைப் பறிகொடுத்த ஒரு சிலர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து விஜயலட்சுமி திருடியவற்றைத் திரும்பப் பெற்றிருக்
கிறார்கள். அப்போதுகூட அவர் கைது செய்யப்படவில்லை. விஜயலட்சுமியின் மொபைலில் ‘கால் ஹிஸ்டரி’யை ஆய்வுசெய்தபோது, இளைஞர் ஒருவருடன் அவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தோம். அவர் மூலமாக விஜயலட்சுமியைக் கைதுசெய்து திரிமூர்த்தி வீட்டில் திருடிய நகைகளை மீட்டுவிட்டோம். முதன்முறையாக விஜயலட்சுமி மீது திருட்டு வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். எனவே, பொதுமக்கள் வீட்டு வேலைக்கு யாரைப் பணியமர்த்தினாலும் அந்த நபர் குறித்த முழு விவரங்களையும் கேட்டு வாங்கிச் சரிபாருங்கள்” என்றனர்.
வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்துபவர்களே... உஷார்!