இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று பயிற்சிக்காகப் புறப்படும்போது பறவை மோதி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட சம்பவம் ஹரியானாவில் நடந்தது.

நேற்று முன்தினம் (ஜூன் 27) ஹரியானா மாநிலத்திலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாக்குவார் ஜெட் விமானம் ஒன்றில் இளம் விமானி புறப்படத் தயாரானார். மின்னல் வேகத்தில் புறப்பட்ட ஜெட் டேக் ஆஃப் ஆன சில விநாடிகளில் பறவைகள் கூட்டம் ஒன்று குறுக்கிட்டது. அதில் மோதிய விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானி உடனடியாக விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் இந்த விபத்து தொடர்பாக இந்திய விமானப்படையின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

அதனுடன் நடந்த விபத்து தொடர்பாக, ``பயிற்சிக்காக இரண்டு கூடுதல் எரிபொருள் டேங்குகளுடன் புறப்பட்டது ஜாக்குவார் விமானம். புறப்பட்ட சில விநாடிகளிலேயே அதன் வழியில் பறவைக் கூட்டம் ஒன்று எதிர்கொண்டது. விமானம் பறவை மீது வேகமாக மோதியதன் காரணமாக ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
கடினமான நேரத்திலும் இளம் விமானியான அவர் நிலைமையைப் புரிந்து நிதானமாக விதிகளின்படி கூடுதல் எரிபொருள் மற்றும் வெடிபொருள்கள் ஆகியவற்றை உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேற்றினார். அதன் பின்னர் விமானத்தையும் பாதுகாப்பாக தரையிறக்கினார்.
அவரது இந்தத் துரித செயல்பாடு இந்திய விமானப் படையின் விரிவான பயிற்சியைக் காட்டுகிறது. அவரது இந்தச் செயல் இந்த விமானப்படை தளத்தைச் சுற்றிலும் இருக்கும் பல பொதுமக்களின் வாழ்க்கையும் காப்பாற்றியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.