மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் சென்றபோது கீழே தவறி விழுந்ததாகக் கூறப்படும் இளைஞர், யாரும் கவனிக்காததால் இரவு முழுவதும் காயங்களுடன் வலியில் துடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை, கரும்பாலை பகுதியைச் சேர்ந்த பாக்கியம் என்பவரின் மகன் பிரபாகரன். எட்டாம் வகுப்பு வரை படித்த இவர், குடும்பச் சூழலால் வேலை தேடி சென்னைக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

இவரைப்போலவே வேலை தேடிக் கிளம்பிய தன் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 23-ம் தேதி இரவு சென்னைக்குச் செல்வதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸில் பயணித்திருக்கிறார். அப்போது பிரபாகரன் ரயிலிலிருந்து தவறிக் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கீழே விழுந்து படுகாயமடைந்தவர், இரவு முழுவதும் முட்புதருக்குள் வலியில் துடித்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே ஊழியர்களிடம் விசாரித்தபோது, "மதுரையிலிருந்து கிளம்பிய ரயில், சோழவந்தான் நெடுங்குளம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, இந்த இளைஞர் (பிரபாகரன்) தவறி விழுந்திருக்கிறார். அவர் எதனால் விழுந்தார் என்பது தெரியவில்லை. அவர் விழுந்ததை மற்ற பயணிகளோ, உடன் வந்த நண்பர்களோ கவனிக்கவில்லை.

படுகாயத்துடன் தண்டவாளத்துக்கு அருகிலுள்ள முட்செடிகள் நிறைந்த புதருக்குள் விழுந்தவர், இரவு முழுவதும் வலியில் முனகிக்கொண்டே கிடந்திருக்கிறார். இரவு நேரம் பிரபாகரனின் உறவினர்கள் அவரை செல்போனில் தொடர்புகொண்டபோது, அவர் போனை எடுக்காததால் அச்சமடைந்திருக்கின்றனர். இதையடுத்து, பிரபாகரனுடன் சென்ற நண்பர்களைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு, `மதுரையிலிருந்து எங்களோடு வந்தவர், சோழவந்தான் வரும்போது காணவில்லை' என்று கூறியிருக்கின்றனர்.
அதோடு, உடனே காவல்துறைக்குத் தகவல் சொல்லி அவர்களுடன் சேர்ந்து மதுரையிலும், சோழவந்தானிலும் தேடிப்பார்த்திருக்கிறார்கள். கடைசியாக, நெடுங்குளம் ரயில்வே கேட் அருகே தேடியபோது முட்புதருக்குள் முனகல் சத்தத்துடன் துடித்துக்கொண்டிருந்த பிரபாகரனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். உடல் முழுவதும் காயங்களுடன் அசைய முடியாமல் கிடந்த பிரபாகரனை, ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றியிருக்கின்றனர். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது" என்றனர்.

தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துவரும் பிரபாகரன் எப்படி விழுந்தார்... அவர் விழுந்ததற்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து மதுரை ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.