என் கணவருடன் செக்ஸியாகப் பேசியதில் என்ன தப்பு? - யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கேள்வி...

போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்த மதன், லைவ் வீடியோவில் வருவதைத் தவிர்த்ததுடன், உடனடியாகத் தலைமறைவானான்.
ஆபாசப் பேச்சுகள் மூலம், ஏராளமான சிறார்களை மூளைச்சலவை செய்து யூடியூபராக வலம்வந்த மதனின் அட்ராசிட்டி குறித்து ‘செக்ஸ் பேச்சு... மூளைச்சலவை... லட்சக்கணக்கில் பணம்... யூடியூபர் மதனின் கொடூர விளையாட்டு!’ என்ற தலைப்பில் கடந்த இதழ் ஜூ.வி-யில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். சமூக வலைதளங்கள் எங்கும் நெட்டிசன்களும் மதனுக்கு எதிராகக் கொதித்துக்கொண்டிருக்கும் சூழலில், சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் மதன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இந்த இதழ் முடிக்கும் ஜூன் 17-ம் தேதி இரவு வரை மதன் பிடிபடவில்லை என்றாலும், விறுவிறு சேஸிங்கில் இறங்கி, மதனுக்கு உடந்தையாக இருந்த அவனின் மனைவியைக் கைதுசெய்துள்ளது போலீஸ்!

போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்த மதன், லைவ் வீடியோவில் வருவதைத் தவிர்த்ததுடன், உடனடியாகத் தலைமறைவானான். ‘விபிஎன்’ என்ற தகவல் தொழில்நுட்பத்தை மதன் பயன்படுத்திவருவதால், அவனது லொக்கேஷனை போலீஸாரால் கண்டறிய முடியவில்லை. ஆனாலும், மதனைப் பற்றிய முழு விவரங்களைச் சேகரித்த சைபர் க்ரைம் போலீஸார், அவனது சொந்த ஊரான சேலத்துக்கும், அவன் சென்னையில் குடியிருந்த வேங்கைவாசல் வீட்டுக்கும் சென்றனர். வேங்கைவாசல் வீடு பூட்டியிருந்தது. சேலத்தில் மதனின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கு கைக்குழந்தையுடன் இருந்த அவனின் மனைவி கிருத்திகாவையும், அப்பா மாணிக்கத்தையும் அழைத்துக்கொண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.
‘‘என் சம்மதம் இல்லாமல் கிருத்திகாவைத் திருமணம் செய்துகொண்டதால், எனக்கும் மதனுக்கும் பேச்சுவார்த்தை இல்லை’’ என்று மாணிக்கம் விரக்தியாகக் கூறவே, கிருத்திகாவிடம் விசாரணை செய்தனர் போலீஸார். ஆனால், இதில் கொஞ்சமும் பதறாத கிருத்திகா, “எனக்கெல்லாம் எதுவும் தெரியாதுங்க... அவனைக் கேளுங்க’’ என்று அலட்சியமாகச் சொன்ன தோரணையைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் விடாமல், கிருத்திகாவை அழைத்துக்கொண்டு வேங்கைவாசல் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். அங்கு மதன் பயன்படுத்திவந்த கம்ப்யூட்டர், டேப்லெட், கிருத்திகாவின் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். அதை ஆய்வுசெய்த போலீஸார், முக்கிய ஆதாரங்களை ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் மீட்டெடுத்திருக்கிறார்கள்.
ஹோட்டல் பிசினஸ் டு யூடியூப் சேனல்!
இந்த வழக்கை விசாரிக்கும் சைபர் க்ரைம் பிரிவின் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘யூடியூபர் மதன், TOXIC MADAN 18 ப்ளஸ், PUBG MADAN GIRL FAN, RICHIE GAMING YT என்று மூன்று சேனல்களை நடத்திவந்திருக்கிறான். மதனும் கிருத்திகாவும் இன்ஜினீயர்கள், காதலித்துத் திருமணம் செய்திருக்கிறார்கள். மதன் படிப்பை முடித்ததும், சென்னையில் ஹோட்டல் பிசினஸ் செய்திருக்கிறான். அதில் வருமானம் வரவில்லை.
ஆன்லைன் கேம்களை விளையாடுவதில் மதனுக்கும் கிருத்திகாவுக்கும் அதிக ஆர்வமுண்டு. அதனால், ‘ஆன்லைன் கேம்களுக்கான யூடியூப் சேனலைத் தொடங்கலாம்’ என்று கிருத்திகா ஐடியா கொடுத்திருக்கிறார். அதன்படி சேனலைத் தொடங்கிய மதன் பப்ஜி கேம் தொடர்பான ட்ரிக்ஸ், டிப்ஸ்களை லைவாகச் சொல்லத் தொடங்கினான். அந்த லைவ் சாட்டிங்கில் கிருத்திகாவும் இருப்பார். வேங்கைவாசலிலுள்ள வீட்டில் வெவ்வேறு அறைகளில் இருந்தபடியே அவர்கள் பப்ஜியை லைவில் விளையாடுவார்கள். கிருத்திகா ஒரு பப்ஜி கேம் பிரியர்போல சாட்டிங் செய்தபடி, மதனிடம் செக்ஸியாகப் பேசுவார். ஒருகட்டத்தில் வரம்புக்கு மீறிய செக்ஸியான பேச்சு சிறுவர்கள் பலரையும் இழுக்கவே லட்சக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் லைவில் வரத் தொடங்கினார்கள். இதனால், குறுகிய காலத்திலேயே மதனின் யூடியூப் சேனல், பப்ஜி கேம் பிரியர்களிடம் பிரபலமானது.

கிருத்திகா சிக்கியது எப்படி?
இப்படியே சுமார் எட்டு லட்சத்துக்கும் மேலான சப்ஸ்கிரைபர்கள் சேரவே, ‘சூப்பர் சாட்’ என்ற ஆப்ஷனில் பார்வையாளர்கள் அனுப்பும் பணத்தோடு சேர்த்து வருமானம் லட்சக்கணக்கில் குவியத் தொடங்கியது. அதில் சிறிய தொகையை ஏழைகளுக்குச் செலவிட்டு, அதைச் சொல்லியே இருவரும் தங்கள் இமேஜை உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் செக்ஸியாகப் பேசுவது பெரிய அளவில் ஹிட் அடிக்கவே சில பெண்களை செட்-அப் செய்தும் அப்படிப் பேசச் சொல்லியிருக்கிறார்கள். இதில் பணம் கொட்டவே... சென்னையில் இரண்டு பங்களாக்களை வாங்கியதுடன், பி.எம்.டபுள்யூ, ஆடி கார் உட்பட மூன்று சொகுசு கார்களை வாங்கி உல்லாசமாக வலம்வந்தது மதன் - கிருத்திகா ஜோடி. சைபர் க்ரைம் போலீஸாரின் ஆய்வில், மதனின் ஆபாசப் பேச்சு வீடியோவை கிருத்திகாதான் அப்லோடு செய்தது தெரியவந்தது. மேலும், அவனது சேனலின் அட்மின் கிருத்திகாதான் என்று அதிகாரபூர்வ தகவல் கிடைத்தது. அதன் பிறகே அவரைக் கைதுசெய்திருக்கிறோம்.

‘‘மதன் சொன்னான்... நான் செய்தேன்!’’
கிருத்திகாவிடம் விசாரித்தபோது அவரிடம் துளியும் பதற்றம் இல்லை... ‘‘எனக்கு எதுவும் தெரியாதுங்க. மதன் சொன்னான், நான் செஞ்சேன். என் கணவருடன் செக்ஸியாகப் பேசியதில் என்ன தப்பு?” என்பதே அவரது பதிலாக வந்தது. தடைசெய்யப்பட்ட பப்ஜி கேம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த மதன், அதை பிட்காயினில் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. போலீஸ் தேடத் தொடங்கியதும் சென்னையிலிருந்து தப்பிய மதன், பெங்களூருக்குச் சென்றிருக்கிறான். அங்கிருந்து கிருத்திகாவிடம் போனில் பேசியிருக்கிறான். அதன் பிறகு அவன் செல்போனைப் பயன்படுத்தவில்லை. விரைவில் மதனைக் கைதுசெய்துவிடுவோம்’’ என்றார்.
கிருத்திகாவைக் கைதுசெய்த போலீஸார் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். கைக்குழந்தையுடன் அவர் சிறைக்குள் சென்றிருக்கிறார்.
மதன் சிக்கினால் வழக்கு மேலும் விறுவிறுப்படையும்!