தெலங்கானாவில், தெலங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TSPSC) நடத்தவிருந்த போட்டித் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தைச் சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியை எதிர்த்து பல்வேறு எதிர்க்கட்சிகளும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வரின் தங்கையுமான ஒய்.எஸ் ஷர்மிளா தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதற்கிடையில் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்துக்குச் செல்ல முயன்ற ஷர்மிளா, தன்னை இடைமறித்த போலீஸாரை தாக்கிய சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் ஷர்மிளா பெண் காவலர் ஒருவரை கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ``எதிர்க்கட்சியினர் புலனாய்வுக்குழு அலுவலகத்தில் போராட்டம் நடத்தவுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதற்கு அனுமதி இல்லை என நாங்கள் அவரை தடுக்க முயன்றபோது ஷர்மிளா போலீஸாரை தாக்கினார்” என மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதே சமயம், காவலர்கள் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் தன்னை தற்காத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாகவும் ஷர்மிளா கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் இரண்டு எஸ்.ஐ மற்றும் ஒரு பெண் காவலரை ஷர்மிளா தாக்கியதாகக் கூறப்படுகிறது.
எஸ்.ஐ ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஷர்மிளா மற்றும் அவரது இரண்டு கார் ஓட்டுநர்கள் மீது, IPC பிரிவு 353 (பொது ஊழியரை அவரது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல்), 332 (அரசு ஊழியரை காயப்படுத்துதல்), 509 (தவறான சொல், சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

பணியில் இருந்த காவலரை தாக்கியதற்காக ஷர்மிளாவை, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஹைதரபாத் நீதிமன்றம் நேற்று இரவு உத்தரவு பிறபித்தது. உத்தரவைத் தொடர்ந்து அவர் சஞ்சல்குடா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் மே 8-ம் தேதி வரை காவலில் இருப்பார் எனக் கூறபட்டுள்ளது. மேலும் ஷர்மிளாவின் காரை ஓட்டிச் சென்ற கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதால் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார். அதனால் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஷர்மிளா ஜூப்ளி ஹில்ஸ் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போது அவரை பார்க்க அவரின் தாய் விஜயம்மா காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது அவரை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரும் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கன்னத்தில் அறைந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.