கொங்கு மண்டலத்தை அதிர வைத்த மோசடிகளில் ஈமு கோழி ஊழலும் ஒன்று. பல ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்து, பணத்தை இழந்துள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட `சுதி’ ஈமு கோழி நிறுவனத்தை தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் மற்றும் வாசு, தமிழ்நேசன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.
இந்நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள், தீவனம், செட் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, அதற்கு மாதம் ரூ.7,000 மற்றும் ஆண்டுக்கு ரூ.20,000 போனஸ் இரண்டு ஆண்டுகளுக்கு தருவதாக ஆசை காட்டியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளில் டெபாசிட் தொகை திருப்பித் தரப்படும் என்றும் கூறியுள்ளனர். இவர்களது சதுரங்க வேட்டையை நம்பி, 121 பேர் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு எந்தத் தொகையும் வழங்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பழனிச்சாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் யுவராஜ், தமிழ்நேசன், வாசு ஆகியோர் மீது ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை முதலீட்டார் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக யுவராஜ் மதுரை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.
யுவராஜ் வருகையை முன்னிட்டு, கோவை நீதிமன்ற வளாகத்தை சுற்றி அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். இதையடுத்து யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டணை , மூன்று பேருக்கும் சேர்த்து ரூ.2.47 கோடி அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பு வழங்கினார்.

இதில் தமிழ்நேசன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. அதனால், அவருக்கு பிணையில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கபட்டது.
இந்தத் தீர்ப்புக்காக நீதிமன்ற வளாகமே பரபரப்பாக காத்திருந்தது. ஆனால், யுவராஜ் காவலர்களுடன் சிரித்து பேசியபடி தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் இன இளைஞர் கோகுல்ராஜ் என்பவரை ஆணவக்கொலை செய்த வழக்கில் யுவராஜ் முக்கிய குற்றவாளியாவார். அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.