ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அக்டோபர் 17-ம் தேதி (நேற்று) கைதுசெய்யப்பட்டு, பின்னர் உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளிவந்தார்.
ஹரியானா மாநிலம், ஹன்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிடிகா கால்வத், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதை உறுதிசெய்தார். ``யுவராஜ் சிங்கை சட்டரீதியாகக் கைதுசெய்தோம். பின்னர் உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் அடிப்படையில் விடுவித்தோம்" என்றார். இதற்கு முன்பு அக்டோபர் 6-ம் தேதி காவல் நிலையத்தில் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்வில், பந்து வீச்சாளர் சாஹல் குறித்துப் பேசியபோது, யுவராஜ் பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நண்பர்களுடன் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்றும், தான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவந்த வீடியோவைத் தொடர்ந்து தலித் உரிமை செயற்பாட்டாளர், வழக்கறிஞர் ராஜத் கல்சான், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காவல்துறையில் பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்க, யுவராஜ் சிங்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு குறித்த நீதிமன்ற விசாரணைக்கு யுவராஜ் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ``யுவராஜ் சிங், வி.ஐ.பி அந்தஸ்துடன் காவல்துறை விசாரணையில் விசாரிக்கப்பட்டார். இடைக்கால ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்று ராஜத் கல்சான் கூறியிருக்கிறார்.