அம்மை நோயை தடுப்பது ஈசி! நம்மிடம் இருக்கு எம்.எம்.ஆர். தடுப்பு ஊசி!

அம்மை நோய் என்றாலே, அலறுபவர்கள்தான் அதிகம். காரணம்... பயம். சொல்லிவைத்த மாதிரி சில வாரங்கள் படுக்கையிலேயே கிடத்திவிடும். சாப்பிடப் பிடிக்காது. காய்ச்சல் அனலாய்க் கொதிக்கும். எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. உடல்வலி படுத்திவிடும். மிகக் கொடுமையாக அம்மைத் தடிப்புக்கள் கொஞ்ச காலத்திற்கு வெளியே தலைகாட்ட விடாது. இத்தனை வேதனைகளில் இருந்தும் நம்மைக் காக்கிறது, ‘எம்.எம்.ஆர்’ என்ற தடுப்பு ஊசி (MMR vaccine). இது, தட்டம்மை, அம்மைக்கட்டு, ஜெர்மன் தட்டம்மை என்ற மூன்று முக்கிய அம்மை நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இதை ‘மூன்று அம்மைத் தடுப்பு ஊசி’ என்றும் அழைக்கிறார்கள்.

தட்டம்மை (Measles):
‘மீசில்ஸ்’ எனும் வைரஸ் கிருமியால், இந்த நோய் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளைத்தான் பாதிக்கிறது. சாதாரணக் காய்ச்சல் போலதான் தொடங்கும். காய்ச்சல், மூக்கில் ஒழுகல், தும்மல், இருமல், சளி, கண்கள் சிவந்துபோதல், கண்ணில் வலி, நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் முதலில் காணப்படும். பிறகு நெற்றி, முகம், கழுத்து, மார்பு, முதுகு, வயிறு, கை, கால்களில் மணலை வாரி இறைத்ததுபோல் இளஞ்சிவப்பு நிறத்தில் வியர்க்குரு அளவுக்குத் தடிப்புகள் தோன்றும். இதனால், இந்த நோய்க்கு ‘மணல்வாரி அம்மை’ என்றும் பெயர் உண்டு.
பொதுவாக இந்த நோய் இரண்டு வாரங்களில் குணமாகிவிடும். சிலருக்கு மட்டும் சிக்கல்களை உருவாக்கிவிடும். இந்தக் கிருமிகள் குடலைத் தாக்கினால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடு வரும். நுரையீரலைத் தாக்கினால், ‘நிமோனியா’ எனும் நுரையீரல் அழற்சி நோய் வரும். காதுகளைத் தாக்கினால், காதுக்குள் புண் ஏற்பட்டு சீழ் வடியும். மூளையைப் பாதித்தால், மூளை அழற்சிக் காய்ச்சல் வரும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பாதிக்குமானால், பாதிக்கப்பட்ட குழந்தை மரணம் அடையவும் வாய்ப்பு உண்டு.

அம்மைக்கட்டு (Mumps):
‘மம்ஸ்’ எனும் வைரஸ் கிருமியால் இது ஏற்படுகிறது. கன்னத்தின் இரு பக்கங்களிலும் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகளை (Parotid glands) இந்தக் கிருமிகள் பாதிக்கும்போது, அவை வீங்குகின்றன. அதுதான், அம்மைக்கட்டு. இதுவும் குழந்தைகளைப் பாதிக்கின்ற நோய்தான். காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகளோடு இந்த நோய் துவங்கும். பிறகு, கன்னத்தில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் இரண்டு பக்கத்திலும் பெரிதாக வீங்கும். பொதுவாக, இந்த நோயும் இரண்டு வாரங்களில் குணமாகிவிடும். என்றாலும், சிலருக்குச் சிக்கல்களை உண்டாக்கும். இந்தக் கிருமிகள் காது நரம்புகளைத் தாக்கினால், காது கேட்பதில் சிரமம் ஏற்படும். மூளை உறைகளைப் பாதித்தால், மூளை உறை அழற்சிக் காய்ச்சல் வரும். ஆண்களுக்கு விரைகளும் (Testes) பெண்களுக்குச் சினைப்பைகளும் (Ovaries) பாதிக்கப்படலாம். இவற்றின் விளைவாக, வருங்காலத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு குழந்தை இல்லாத நிலைமைக்குக் கொண்டுவிடலாம்.

ஜெர்மன் தட்டம்மை (Rubella):
‘ருபெல்லா’ எனும் வைரஸ் கிருமியால் இந்த நோய் ஏற்படுகிறது. இது குழந்தைகள், இளைஞர், இளம் பெண்களைப் பாதிக்கிறது. முதலில், குறைந்த அளவில் காய்ச்சல் தொடங்கும். பிறகு, தட்டம்மை நோய்க்குரிய எல்லா அறிகுறிகளும் இதில் தெரியும். அவற்றோடு, எலும்பு மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும். இந்த நோய் கர்ப்பிணிகளைப் பாதிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், பெண்களுக்கு முதல் மூன்று கர்ப்ப மாதங்கள் மிக முக்கியமானவை. அப்போதுதான் கருவிலுள்ள சிசுவுக்கு உடல் உறுப்புகள் உருவாகும். இந்தக் காலகட்டத்தில், இந்த நோய் கர்ப்பிணியைத் தாக்குமானால், கரு கலைந்துவிடலாம். அல்லது குழந்தைக்குப் பிறவியிலேயே கண்புரை, காது கேளாமை, இதயக் கோளாறுகள், மன வளர்ச்சிக்குறைவு போன்ற ஊனங்கள் ஏற்படலாம்.

நோய் வரும் வழி:
மேற்சொன்ன மூன்று தொற்று நோய்களும் காற்று மூலம் பரவக்கூடியவை. இந்த நோய்க்கிருமிகள் நோயாளியின் மூக்கு, மூச்சுக்குழல், வாய், தொண்டை, விழிவெண்படலம் ஆகிய உடல் பகுதிகளில் வசிக்கின்றன. நோயாளி தும்மும்போதும், இருமும்போதும் இவை எச்சில் திவலைகளுடன் காற்றில் கலந்து, அதை சுவாசிக்கும் நபருக்கும் பரவிவிடும். தொடுதல் மூலமாக மிக எளிதாகப் பரவிவிடும். நோயாளியோடு நெருங்கிய தொடர்புவைத்தக்க ொள்பவர்களுக்குப் பரவுவது இப்படித்தான்.

தடுப்பூசி வகை:

எம்.எம்.ஆர் தடுப்பூசி இரண்டு விதங்களில் கிடைக்கிறது. தனியாகப் போடப்படும் தடுப்பூசி, ஒரு வகை (MMR vaccine). மற்ற தடுப்பூசிகளுடன் கலந்துள்ள ‘கூட்டுத் தடுப்பூசி’ (Combination vaccine) அடுத்த வகை. இது, பொதுவாக சின்னம்மைத் தடுப்பூசி மருந்துடன் கலந்து இருக்கும். அதற்கு எம்.எம்.ஆர்.வி தடுப்பூசி என்று பெயர். இந்த மூன்று அம்மைக் கிருமிகளையும் தனித்தனியாக வீரியம் இழக்கச்செய்து, கோழிக் கருவில் வளர்த்து இந்த தடுப்பு ஊசியைத் தயாரிக்கிறார்கள். தட்டம்மைக் கிருமிகளில் ‘ஈ இசட்’ (Edmonston Zagreb strain) எனும் வகையைப் பயன்
படுத்தியும், ஜெர்மன் தட்டம்மை கிருமிகளில் ‘ஆர்ஏ’ (RA 27/3) எனும் கிருமி வகையைப் பயன்படுத்தியும், அம்மைக்கட்டுக்கான கிருமிகளில் Leningrad-Zagreb, Leningrad-3, Jeryl Lynn, RIT 4385 ஆகிய நான்கு கிருமி வகைகளைப் பயன்
படுத்தியும் இதைத் தயாரிக்கிறார்கள்.

எம்.எம்.ஆர் தடுப்பூசியை எப்போது போடுவது?
குழந்தைக்கு 9 மாதங்கள் முடிந்ததும் ஒருமுறையும், 15 மாதங்கள் முடிந்ததும் ஒருமுறையும் போட வேண்டும். இதைத் தனியாகவும் போட்டுக்கொள்ளலாம். வழக்கமாக, மற்ற தடுப்பூசிகளைப் போடும்போது, இதையும் போடலாம். ஒரே விதிவிலக்கு, காசநோய்க்கான பி.சி.ஜி தடுப்பூசி போடும்போது மட்டும் இதைப் போடக் கூடாது. அடுத்து, சின்னம்மைத் தடுப்பூசியுடன் கலக்கப்பட்டிருக்கும் ‘MMRV’ கூட்டுத் தடுப்பூசி மூலமும் இதைப் போடலாம். தற்போது இந்தக் கூட்டுத் தடுப்பூசி மேல்நாடுகளில்தான் பயன்பாட்டில் உள்ளது. விரைவிலேயே இது இந்தியாவிலும் கிடைக்கும். ஒருமுறை கொடுக்கப்படவேண்டிய தடுப்பூசி அளவு அரை மில்லி. தொடையில் அல்லது புஜத்தில் தோலுக்கு அடியில்(Subcutaneous route) போடப்பட வேண்டும்.

யார் போட்டுக்கொள்ளக் கூடாது?
‘அலர்ஜி’ உள்ளவர்கள் போடக் கூடாது. ஏற்கனவே இந்தத் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்கு ஒரு வாரத்தில் மூளை மற்றும் நரம்பு தொடர்பான பாதிப்புகள் வந்திருந்தால், மீண்டும் போடக் கூடாது. டைபாய்டு, மலேரியா போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அந்த நோய்களிலிருந்து முற்றிலும் குணமான பிறகு போட வேண்டும். கர்ப்பிணிகள் கண்டிப்பாக இதைப் போட்டுக்கொள்ளக் கூடாது. மேலும், ‘நியோமைசின்’ மருந்துக்கு அலர்ஜி உள்ளவர்கள், எய்ட்ஸ் நோய், புற்று நோய் உள்ளவர்கள், ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்கள் இதைப் போட்டுக்கொள்ளக் கூடாது.

தடுப்பூசியைப் போடவில்லை எனில்...?

ஆரம்பத்திலிருந்தே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத குழந்தைக்கு, எப்போது வேண்டுமானாலும் போடலாம். அப்போதும் இரண்டு தவணை முறையில்
தான் போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு ஊசிகளுக்கு இடையில் குறைந்தது நான்கு வாரம் இடைவெளி வேண்டும். ஏற்கனவே ஒரு தவணை போட்டிருந்தால், விடுபட்ட ஒரு தவணையை மட்டும் போட்டுக்கொண்டால் போதும்.

பக்கவிளைவுகள்
ஒரு சிலருக்கு நான்கிலிருந்து ஏழு நாட்கள் கழித்து மிதமான காய்ச்சல் வரலாம். தடுப்பூசி போடப்பட்ட உடல் பகுதியில் சிறிது வீக்கம், லேசான வலி, தோல் சிவப்பது போன்ற தொல்லைகள் ஏற்படலாம். இவை இரண்டு நாட்களில் தானாகவே சரியாகிவிடும்.
புதிய தடுப்பூசிக் கொள்கை
சமீப காலம் வரை ‘மீசில்ஸ் வாக்சின்’ (Measles vaccine) என்ற தட்டம்மைத் தடுப்பூசி மட்டும் தனியாகக் குழந்தைக்கு 9 மாதம் முடிந்ததும் போடுவது வழக்கத்தில் இருந்தது. இந்தியக் குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பு (IAP) இந்த மாதம் முதல் புதிய தடுப்பூசிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன்படி குழந்தைக்கு 9 மாதம் முடிந்ததும் மீசில்ஸ் வாக்சினை மட்டும் தனியாகப் போடத் தேவை இல்லை; அதற்குப் பதிலாக எம்.எம்.ஆர். தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதுபோல் குழந்தைக்கு 5 வயதில் ஒரு தவணை எம்.எம்.ஆர். தடுப்பூசி போடப்படுவது முன்பு வழக்கத்தில் இருந்தது. இப்போது இதிலும் ஒரு மாற்றம். இதன் இரண்டாவது தவணை ஊசியை 15 மாதங்கள் முடிந்ததும் போட்டிருந்தால் மீண்டும் 5 வயதில் போடத் தேவை இல்லை!
- போர் ஓயாது