மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்! - 12

டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம்!டாக்டர் கு.கணேசன், படங்கள்: பா.அருண்

காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், ‘இது டைபாய்டு காய்ச்சலாக இருக்குமோ?’ என்று சாதாரண மக்களே சந்தேகப்படும் அளவுக்குப்  பரவலானது டைபாய்டு காய்ச்சல். பொது சுகாதாரக் குறைவால் உருவாகின்ற தொற்றுநோய் இது. சுகாதாரம் மிகுந்த ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் டைபாய்டு காய்ச்சல் இல்லை. சுகாதாரம் குறைந்த வளரும் நாடுகளில்தான் இதன் பாதிப்பு அதிகம்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 12

மழைக் காலங்களில் சுற்றுப்புறம் மாசடைந்து, குடிநீரும், தெருச் சாக்கடை நீரும் கலந்து, நோய்க்கிருமிகள் வாழ வசதி செய்து தருவதால், செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை டைபாய்டு காய்ச்சலுக்கான காலகட்டம்தான்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரையும் பாதிக்கும் தன்மைகொண்டது டைபாய்டு.

நோய் வரும் வழி:

‘சால்மோனெல்லா டைபி’ (Salmonella typhi) எனும் பாக்டீரியாக் கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால், இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதைச் சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீரில் இவை வெளியேறுகின்றன. இதன் காரணமாக அசுத்தமான இடங்களிலும், பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் தெரு ஓரங்களிலும் இந்தக் கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள், இந்தக் கிருமிகளைச் சுமந்துகொண்டு வீட்டில்   உள்ள பாதுகாப்பில்லாத குடிநீரிலும், உணவிலும் கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த உணவையும், குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு டைபாய்டு காய்ச்சல் வருகிறது.

ஏற்கனவே டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில் இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள்வரை வசிக்கும். அப்போது அந்த நபரின் மலத்திலும் சிறுநீரிலும்  இவை வெளியேறி, அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும். இந்த நபர்களை ‘நோய்க் கடத்துநர்கள்’ (Carriers) என்கிறார்கள்.  

அறிகுறிகள்:

ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரித்து, தலைவலியும் உடல் வலியும் கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்றுவலி வரும். உணவு சாப்பிட முடியாது. இதனால், சோர்வு அதிகரித்து, மயக்கம் வரும்.

சிக்கல்கள்:

தடுப்பூசி ரகசியங்கள்! - 12

இந்தக் காய்ச்சல் குழந்தைகளைப் பாதிக்கும்போது, ‘காய்ச்சல் வலிப்பு’ வரலாம். குடலில் ரத்தக்கசிவு, ரத்த வாந்தி ஏற்படலாம். நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைபெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘நச்சுக் குருதிநிலை’ (Septicaemia) ஏற்படலாம். இதன் மூலம் உயிருக்கு ஆபத்து நேரலாம்.

தடுப்பு ஊசியும் தடுப்பு மாத்திரையும்:

டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுக்க, தடுப்பூசியும் தடுப்பு மாத்திரையும் உள்ளன. தசை ஊசியாகச் செலுத்தப்படும் டைபாய்டு தடுப்பூசியில் (Typhoid vaccine - Injection) ‘விஐ கேப்சுலர் பாலிசாக்கரைடு தடுப்பூசி (Vicapsular polysaccharide (Vi-PS) vaccine),  ‘விஐபிஎஸ் டிடி இணைக் கூட்டுப்பொருள் தடுப்பூசி’ (Vi-PS TT Conjugate vaccine) என்று இரண்டு வகை உள்ளன. வாய் வழி விழுங்கப்படும் ‘டைபாய்டு தடுப்பு மாத்திரை’ (Typhoid vaccine – Oral) வெளிநாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் இந்த மாத்திரை தற்போது பயன்பாட்டில் இல்லை.

விஐபிஎஸ் தடுப்பூசி போடப்படும் முறை:

குழந்தைக்கு 2 வயது முடிந்ததும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். ஒருமுறை போடப்படும் தடுப்பூசியின் அளவு அரை மில்லி. இதைத் தசை ஊசியாகத் தொடை அல்லது புஜத்தில் போட்டுக்கொள்ளலாம். ஒருமுறை இதைப் போட்டுக்கொண்டால், 3 ஆண்டுகளுக்கு டைபாய்டு வருகின்ற வாய்ப்பு குறையும். ஆகவே, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். 

விஐபிஎஸ் டிடி இணைக் கூட்டுப்பொருள் தடுப்பூசி:

இதன் வீரியமும் செயலாற்றலும் அதிகம் என்பதால், இந்தத் தடுப்பூசியைத்தான் இப்போது அதிகம் பயன்படுத்துகின்றனர்.  குழந்தைக்கு 9 மாதம் முடிந்ததில் இருந்து ஒரு வயதுக்குள் இதைப் போட்டுக்கொள்ளலாம். ஊக்குவிப்பு ஊசியாக குழந்தைக்கு 2 வயது முடிந்ததும் ஒருமுறை இதைப் போட்டுவிட வேண்டும்.

முக்கியத் தகவல் மற்றத் தடுப்பூசிகள் போடப்படும்போது அவற்றுடன் டைபாய்டு தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளலாம். தற்போது, குழந்தைகளுக்கு 9 மாதங்கள் முடிந்ததும் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடுவது உண்டு. அப்படிப் போடப்பட்ட குழந்தைக்கு 4 வாரங்கள் இடைவெளிவிட்டு டைபாய்டு தடுப்பூசியைப் போட வேண்டும்.

டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு 2 வாரங்களுக்கு முன்பு, டைபாய்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தடுப்பூசி வேலை செய்யும். இது தடுப்பு மாத்திரைக்கும் பொருந்தும். ‘ஆன்டிபயாட்டிக்’ மருந்துகளைச் சாப்பிடுபவர்கள், அவற்றைச் சாப்பிட்டு முடித்த பிறகு, குறைந்தது 3 நாட்கள் இடைவெளி விட்டு, தடுப்பு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டைபாய்டு வந்தவருக்குத் தடுப்பூசி போடலாமா?

டைபாய்டு ஏற்பட்டவர்கள் கடந்த 3 வருடங்களுக்குள் டைபாய்டுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை எனில், டைபாய்டுக்கு முறைப்படி சிகிச்சை எடுத்துச் சரியான பிறகு 4 வாரங்கள் கழித்து இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

யாருக்குப் பயன்படுத்தக் கூடாது?

தடுப்பூசி அல்லது தடுப்பு மாத்திரைக்கு அலர்ஜி உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது. டெங்கு, மலேரியா போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அந்த நோய்கள் குணமான பிறகு பயன்படுத்தலாம்; தடுமம், சளி போன்ற சிறிய தொந்தரவுகள் இருக்கும்போதும் பயன்படுத்தலாம்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 12

பக்கவிளைவுகள்:

இந்தத் தடுப்பூசிக்கான பக்கவிளைவுகள் மிதமாகவே இருக்கும். ஊசி போடப்பட்ட இடத்தில் தோல் சிவப்பது, லேசான வலி, சிறிய வீக்கம், மிதமான காய்ச்சல், தலைவலி போன்ற தொல்லைகள் உண்டாகலாம். இவை தானாகவே சரியாகிவிடும்.

டைபாய்டு புள்ளி விவரம்

உலகில் வருடத்துக்கு இரண்டரைக் கோடிப் பேருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இவர்களில் 6 லட்சம் பேர் இறந்துவிடுகிறார்கள். இந்தியாவில் இந்தக் காய்ச்சல் ஏற்பட்ட பத்து நோயாளிகளில் மூன்று பேருக்கு இந்த நிலைமை ஏற்படுவதாக மருத்துவப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

வரவிடாமல் தடுக்க வழி!

டைபாய்டு காய்ச்சலை வரவிடாமல் தடுக்கத் தடுப்பு ஊசி அல்லது தடுப்பு மாத்திரை மட்டுமே போதாது. காரணம், இவற்றின் நோய் தடுக்கும் சக்தி 80 சதவிகிதம் மட்டுமே. எனவே, மற்றத் தடுப்பு வழிகளையும் பின்பற்ற வேண்டியது மிக அவசியம்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 12

  கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 12

  தெருக்களைக் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது.

தடுப்பூசி ரகசியங்கள்! - 12

  குடிநீரை நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 12

  காய்கறி மற்றும் பழங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும் சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 12

  சமைத்த உணவுகளை திறந்துவைக்கக் கூடாது. ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். திறந்தவெளிகளில் ஈக்கள் மொய்க்கும் வகையில் விற்கப்படும் உணவுகளையும் சாப்பிடக் கூடாது.

தடுப்பூசி ரகசியங்கள்! - 12

  வீடுகளிலும் தெருக்களிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் காக்கப்பட வேண்டும்.

- போர் ஓயாது