மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்! - 13

சிக்கலைத் தடுக்கும் சின்னம்மை தடுப்பூசி! டாக்டர் கு.கணேசன்

அம்மை நோய்களுள் அதிக ஆபத்தானது, சின்னம்மை (Chickenpox). இது ஓர் அதிதீவிரத் தொற்றுநோய். வீட்டில் ஒருவருக்குச் சின்னம்மை வந்துவிட்டால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் இது மிக எளிதில் தொற்றிக்கொள்ளும்.

நோய் வரும் வழி:

சின்னம்மையை ஏற்படுத்துவது ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ (Varicella – Zoster) வைரஸ் கிருமிகள். இந்தக் கிருமிகள் சின்னம்மை நோயாளியின் மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல், அம்மைக்கொப்புளங்கள் ஆகிய இடங்களில் வசிக்கும். இருமல், தும்மல், மூக்கு ஒழுகல் ஆகியவற்றின் மூலம் சளித் திவலைகளுடன் வெளிவந்து, காற்றின் வழி மற்றவர்களுக்குப் பரவும்; அம்மைக் கொப்புளங்கள் உடைந்து, நீர் வெளியேறும்போது, நோயாளியுடன் புழங்கும் நபர்களுக்கு இந்தக் கிருமிகள் பரவி நோயை உண்டாக்கும். இந்த நோய் எல்லா வயதினருக்கும் வரலாம் என்றாலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 13

அறிகுறிகள்:

முதலில் தடுமக்காய்ச்சல் போலத்தான் நோய் துவங்கும். காய்ச்சலுடன், உடல்வலி, தலைவலி, மூக்கு ஒழுகல், சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்களில் மார்பு, வயிறு, முதுகு போன்ற பகுதிகளில் தடிப்புகள் (Rashes) தெரியும். முகம், கைகள், கால்களில் தடிப்புகள் பரவும். இவை மிக நெருக்கமாகவும், எண்ணிக்கையில் மிக அதிகமாகவும் காணப்படும். முன் கைகள் மற்றும் முன் கால்களில் தடிப்புகள் பரவலாக இருக்கும்.
 அடுத்த சில நாட்களில் இவை கொப்புளங்களாக மாறிவிடும். இவற்றில் நீர் கோக்கும். கொப்புளங்களில் எரிச்சல், வலி, அரிப்பு போன்ற தொல்லைகளும் சேர்ந்து
கொள்ளும். பிறகு, நீர்க்கொப்புளங்கள் சீழ்க்கொப்புளங்களாக மாறி உடையும். அடுத்த சில நாட்களில் இவை எல்லாமே காய்ந்து பொருக்குகளாக மாறி உதிரும். உடலில் அம்மைக்கொப்புளங்கள் இருந்த இடங்களில் தழும்புகள் ஏற்படும். இவை சிறிது சிறிதாக மறையும்.

சிக்கல்கள்:

சின்னம்மை நோய் குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நிமோனியா, மூளைக்காய்ச்சல், எலும்பு கீல் மூட்டு அழற்சி, இதயத்தசை அழற்சி, சிறுநீரக அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். அப்போது குழந்தையின் உயிருக்கு ஆபத்து வரலாம். கர்ப்பிணிகளுக்குச் சின்னம்மை வருமானால், கருவில் வளரும் சிசுவைப் பாதித்துப் பிறவி ஊனத்தை உண்டாக்கும். இவை எல்லாமே சின்னம்மை நோய் உள்ளவருக்கு உடனடியாகத் தோன்றுகின்ற சிக்கல்கள்.
அதே நேரத்தில் காலம் கடந்து ஒரு சிக்கல் சின்னம்மைக்கு வருவது உண்டு. அதன் பெயர் ‘அக்கி அம்மை’ (Herpes Zoster அல்லது Shingles). அதாவது சின்னம்மை நோய் சரியானாலும், இந்த நோய்க் கிருமிகள் உடலுக்குள் மறைந்திருந்து, பல வருடங்களுக்குப் பிறகு, திடீரென்று வீரியம்பெற்று, உடலில் உள்ள புறநரம்புகளைத் தாக்கும்.

 இதன் விளைவால், பாதிக்கப்பட்ட அந்த உடல் பகுதிகளில், தோல் அழற்சிபெற்று சிவப்பாகத் தெரியும். இதைத் தொடர்ந்து அந்த இடங்களில் அம்மைக்
கொப்புளங்கள் தோன்றும். பத்து நாட்களுக்குப் பிறகு இந்தக் கொப்புளங்கள் காய்ந்துவிடும். பொதுவாக, அக்கி அம்மை வந்த இடங்கள் கடுமையாக வலிக்கும். இது சரியான பிறகும் இந்தப் புறநரம்பு வலி சில மாதங்களுக்கு நீடிக்கும். ஆகவே, இந்த மாதிரியான சிக்கல்களைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இதற்குச் சின்னம்மை தடுப்பூசிகள் உதவுகின்றன.

இரண்டு வகை தடுப்பூசிகள்:

‘மோனோவேலன்ட் தடுப்பூசி’ என்று ஒரு வகை. தக்காஹஷி (Takahashi) என்ற ஜப்பான் நாட்டுக்காரர் இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். இந்த வைரஸின் ‘ஓகா ’ வகைக் கிருமியை (Oka strain) வீரியம் இழக்கச்செய்து, இந்தத் தடுப்பூசியைத் தயாரித்தார். இது பவுடராக இருக்கும். இதற்கென்றே தரப்பட்டிருக்கும் சுத்தமான தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். ஒருமுறை போடப்படும் தடுப்பூசியின் அளவு அரை மி.லி இதைக் குழந்தையின் முன்பக்கத் தொடையின் வெளிப்பக்க மத்தியில் தோலுக்கு அடியில் (Sub cutaneous route) செலுத்த வேண்டும். குழந்தைக்கு 15 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியும், 5 வயதில் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட வேண்டும். இதைத் தனியாகவோ, மற்ற தடுப்பூசிகள் போடப்படும்போதோ போடலாம். இதன் விலை அதிகம் என்பதால், இது தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்படுகிறது. ‘கூட்டுத் தடுப்பூசி’ என்பது அடுத்த வகை. சின்னம்மைக்கான கூட்டுத் தடுப்பூசி ‘MMRV’ என்று அழைக்கப்படுகிறது. இதில் மூன்று அம்மைத் தடுப்பூசி (MMR) மருந்துகளுடன் சின்னம்மைத் தடுப்பூசி மருந்தும் கலந்திருக்கிறது. மோனோவேலன்ட் தடுப்பூசியைப் போலவே இதையும் போடவேண்டும்.

எப்போது போடக்கொள்ள வேண்டும்?

தடுப்பூசி ரகசியங்கள்! - 13

 ஆரம்பத்தில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் 13 வயதுக்குள் இதைப் போடுவதாக இருந்தால், மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ளலாம். 13 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றால், இரண்டு மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும். வீட்டில், அடுத்த வீட்டில் அல்லது அலுவலகத்தில் மிகவும் நெருங்கிப் பழகும் ஒருவருக்குச் சின்னம்மை நோய் வந்துவிட்டதென்றால், அவருக்கு நோய் தொடங்கிய மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் அவரோடு பழகுகின்ற மற்றவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு தவணையை மட்டும் போட்டுக்கொண்டு, அடுத்த தவணையைப் போடாமல் விட்டவர்கள் மீண்டும் ஒரு தவணை மட்டும் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குச் சின்னம்மை வராது.

யார் போட்டுக்கொள்ளக் கூடாது?

இந்தத் தடுப்பூசிக்கும் நியோமைசின் மருந்துக்கும் அலர்ஜி உள்ளவர்கள் இதைப் போட்டுக்கொள்ளக் கூடாது. கர்ப்பிணிகள் கண்டிப்பாகப் போடக் கூடாது. திருமணமான பெண்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால்,  அடுத்த 3 மாதங்களுக்குக் கர்ப்பம் அடைவதைத் தள்ளிப்போட வேண்டும். இதைப் போட்டுக் கொண்டவர்களுக்கு அடுத்த 6 வாரங்களுக்கு ‘சாலிசிலேட்’ மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. புற்றுநோய், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் இதைப் போட்டுக்கொள்ளக் கூடாது. இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய காலத்தில், டைபாய்டு காய்ச்சல், மலேரியா போன்ற கடுமையான நோயினால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால்,  குணமான பிறகு போட்டுக்கொள்ளலாம். ஏற்கனவே சின்னம்மை வந்திருந்தால், தடுப்பூசியைப் போட வேண்டிய அவசியம் இல்லை.

பக்கவிளைவுகள்:

ஊசி போடப்பட்ட பகுதியில் சிறிது வலி, வீக்கம், தோல் சிவப்பது போன்ற தொல்லைகள் ஏற்படலாம். மிதமான காய்ச்சல் வரலாம். இவை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். காய்ச்சலுக்கு ‘பாராசிட்டமால்’ திரவ மருந்து அல்லது மாத்திரை தரலாம்.

முக்கியத் தகவல்

நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் சின்னம்மை வேகமாகப் பரவுகிறது என்றால், அப்போது குழந்தைக்கு 12 மாதம் முடிந்திருந்தாலே முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். இவர்கள் 3 மாதங்கள்் இடைவெளிவிட்டு எப்போது வேண்டுமானாலும் இரண்டாம் தவணையைப் போட்டுக்கொள்ளலாம்.

சின்னம்மை தடுப்புப் புரதம்

கர்ப்பிணிகளுக்குச் சின்னம்மை தடுப்பூசியைப் போடக் கூடாது. ஆனால், அவர்களுக்கு சின்னம்மை வந்துவிட்டால் அது குழந்தையைப் பாதிக்காமல் இருக்க, கர்ப்பிணிகளுக்குச் சின்னம்மை வந்த 4 நாட்களுக்குள் ‘சின்னம்மைத் தடுப்புப் புரதம்’ (Varicella Zoster Immunoglobulin (VZIG) என்ற ஊசி மருந்தை கர்ப்பிணியின் ஒரு கிலோ உடல் எடைக்கு 0.2 முதல் 1 மி.லி என்ற அளவில் நார்மல் சலைன் திரவத்தில் கலந்து, சிரை ரத்தக்குழாயில் செலுத்த வேண்டும். இதுபோல், தாய்க்கு சின்னம்மை நோய் இருக்கும்போது பிரசவமான குழந்தைக்கும், 28 கர்ப்ப வாரங்களுக்கு முன்பே குறைப்பிரசவமான குழந்தைக்கும், பிறக்கும்போது ஒரு கிலோ எடைக்கும் குறைவாக உள்ள குழந்தைக்கும் இது போடப்பட வேண்டும்.

- போர் ஓயாது