மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்! - 14

காமாலைக்கு குட் பை... டாக்டர் கு.கணேசன்

தமிழகத்தில் மஞ்சள்காமாலை நோய்க்கு இலவச மருந்து கொடுக்காத ஊரே இல்லை. அந்த அளவுக்கு நம் மாநிலத்தில் மஞ்சள்காமாலை நோய் பிரபலம்.
எது மஞ்சள்காமாலை?

இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, ஓர் அறிகுறி. கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும் ஒரு வெளிப்பாடு. இந்த பாதிப்பு இரண்டு விதங்களில் நிகழ்கிறது. ஒன்று, கிருமி சார்ந்த மஞ்சள்காமாலை; மற்றொன்று, கிருமி சாராத மஞ்சள் காமாலை (Metabolic Jaundice).
பாக்டீரியா, வைரஸ் என்று ஏதேனும் ஒரு கிருமி கல்லீரலைத் தாக்கும்போது, மஞ்சள்காமாலை ஏற்படுவது முதல் வகை.  மது குடிப்பது, தேவை இல்லாமல் மருந்து மாத்திரைகளை உட்கொள்வது, அதிகக் கொழுப்புள்ள உணவுகள் சாப்பிடுவது, பித்தப்பை வீங்கி அடைத்துக்கொள்வது என, ஏதாவது ஒரு காரணத்தால் கல்லீரல் பாதிக்கப்படும்போது ஏற்படும் மஞ்சள்காமாலை இரண்டாம் வகையைச் சேர்ந்தது.

தடுப்பூசி ரகசியங்கள்! - 14

வைரஸ்களின் ஆதிக்கம்!

கல்லீரலைப் பாதிக்கிற விஷயங்களில் ஹெபடைட்டிஸ் வைரஸ் மிக முக்கியமானது. ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி என இவற்றில் பல வகைகள் உள்ளன. இதில் ஏ மற்றும் பி வைரஸ்களின் தாக்குதல் நம் நாட்டில் அதிகம். ஹெபடைட்டிஸ் – பி குறித்து ஏற்கெனவே பார்த்து விட்டோம். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.  

ஹெபடைட்டிஸ்-ஏ மஞ்சள்காமாலை (Hepatitis –A)

‘ஹெபடைட்டிஸ் - ஏ’ வைரஸால் ஏற்படுகின்ற ஒரு தொற்றுநோய் இது. நடைமுறையில் சாதாரணமாகக் காணப்படுகின்ற ஒரு நோய். பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். எனினும், பாதிக்கப்படுபவர்களில் பாதிக்கு மேல் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். அதேசமயம், பெரியவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது போல், குழந்தைகளுக்கு அவ்வளவாக ஆபத்தை ஏற்படுத்துவது இல்லை.

நோய் வரும் வழி:

தடுப்பூசி ரகசியங்கள்! - 14

நோயாளியின் மலத்தில் இந்தக் கிருமிகள் இருக்கும். ஈக்கள் மூலம் பிற இடங்களுக்குப் பரவும். மாசடைந்த உணவு, அசுத்தமான நீர் மூலம் இவை மனித உடலில் புகுந்து நோயை ஏற்படுத்தும். நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் இது பரவலாம்.  கிருமி பரவியுள்ள இடங்களுக்குச் சென்றால், செல்பவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

அறிகுறிகள்:

பசிக்காது. காய்ச்சல், வாந்தி, களைப்பு ஏற்படும். வயிறு வலிக்கும். உடல் அரிக்கும். கண்கள், தோல் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறத்திலும், மலம் வெள்ளை நிறத்திலும் போகும்.

மஞ்சள் நிறம் ஏன்?

மஞ்சள் நிறத்தில் ‘பிலிருபின்’ என்ற ஒரு நிறமிப்பொருளைக் கல்லீரல் சுரக்கிறது. சாதாரணமாக ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 0.8 மி.கி என்ற அளவில் இருக்கும். கல்லீரல் பாதிக்கப்படும்போது இந்த சுரப்பு அதிகரிப்பதால், ரத்தத்திலும் இதன் அளவு கூடும். அப்போது கண், தோல், நகம், சிறுநீர் ஆகியவை மஞ்சள் நிறத்துக்கு மாறும்.

சிகிச்சையும் தடுப்புமுறையும்:

அலோபதி மருத்துவத்தில் இதற்கெனத் தனி சிகிச்சை இல்லை. மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே, காமாலை குணமாகிவிடும். கீழாநெல்லிக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை மற்றும் சில அனுபவ மருந்துகளை சித்த மருத்துவத்தில் தருகிறார்கள்.

ஹெபடைட்டிஸ் - பி மஞ்சள் காமாலையோடு ஒப்பிடும்போது ஹெபடைட்டிஸ் - ஏ அதிக ஆபத்து இல்லாதது. என்றாலும், மழை, வெயில் காலங்களின் தொடக்கத்தில், இது ஒரு கொள்ளை நோயாகப் பரவுகிறது. இதைத் தடுக்க அலோபதி மருத்துவம் ஹெபடைட்டிஸ் - ஏ தடுப்பூசியைக் கண்டுபிடித்து உள்ளது. இதை முறைப்படி போட்டுக்கொள்கிறவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் இந்த நோய் வருவது இல்லை.

இந்தியாவில் இந்தத் தடுப்பூசியைப் போடத் தொடங்குவதற்கு முன்பு 1,000 பேரில் 6 பேர்  ‘கோமா’ வந்து மரணம் அடைந்தனர். இந்தத் தடுப்பூசியைப் போடத் தொடங்கிய பிறகு உயிரிழப்பு குறைந்துள்ளது.

தடுப்பூசி வகைகள்:

ஹெபடைட்டிஸ் - ஏ நோய்த் தொற்றைத் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசி            (Inactivated Hepatitis –A Vaccine), உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி (Live attenuated Hepatitis – A  Vaccine) என்று இரண்டு வகைத் தடுப்பூசிகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் போட்டுக்கொள்ளலாம்.

போட்டுக்கொள்ளும் முறை:

தடுப்பூசி ரகசியங்கள்! - 14

வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசி:

வைரஸ் கிருமியின் ‘ஹெச்.எம் 175’ அல்லது ஜி.பி.எம் துணை வகையிலிருந்து (HM175/GBM Strains) இதைத் தயாரிக்கிறார்கள். குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியும், ஒன்றரை வயது முடிந்ததும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட வேண்டும். ஒருமுறை தரப்படும் தடுப்பூசி மருந்தின் அளவு அரை மி.லி. இதைத் தொடையில் தசை ஊசியாகச் செலுத்த வேண்டும்.

உயிர்நுண்ணுயிரித் தடுப்பூசி:

வைரஸ் கிருமியின் ‘ஹெச்-2’ (H2 Strain) துணை வகையிலிருந்து இதைத் தயாரிக்கிறார்கள். குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் ஒரு தவணை போட்டுக்கொண்டால் போதும். ஒரு முறை தரப்படும் மருந்தின் அளவு ஒரு மி.லி. இதைத் தோலுக்கு அடியில் செலுத்த வேண்டும். ஒருவருக்கு ஹெபடைட்டிஸ் - ஏ மஞ்சள்காமாலை வந்த பிறகு இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டியது இல்லை.

அவசியம் போட்டுக்கொள்ள வேண்டியவர்கள்:

இந்தியாவில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தத் தடுப்பூசி அவசியம். ஹெபடைட்டிஸ் - ஏ பரவியுள்ள பகுதி மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், இதைப் போட்டுக்கொள்ள வேண்டும். வீட்டில் யாருக்காவது ஹெபடைட்டிஸ் - ஏ நோய் இருந்தால், மற்றவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது மிக நல்லது. இதுபோல், விடுதிகளில் தங்கியிருப்பவர்கள், பாதுகாப்பான குடிநீரும் உணவும் கிடைக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள் இதைப் போட்டுக்கொண்டால், இந்த நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

கல்லீரல் நோயாளிகள், சிறுநீரக நோய்க்காக டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், ரத்த உறைவுக் குறைபாடு உள்ளவர்கள்,  உடல் உறுப்பு தானம் பெறுபவர்கள்,  எய்ட்ஸ் நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், ரத்த வங்கி மற்றும் ரத்தப் பரிசோதனைக் கூடங்களில் பணிபுரிபவர்கள், ரத்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கும் இது அவசியம்.

போட்டுக்கொள்ளவில்லை என்றால்?

இரண்டு வயதுக்குள் போட்டுக்கொள்ளாதவர்கள் அதற்குப் பிறகு எந்த வயதிலும் போட்டுக்கொள்ளலாம். வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசியைப் போடுவதாக இருந்தால், ஆறு மாதங்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளாகப் போட்டுக்கொள்ள வேண்டும். உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசியைப் போடுவதாக  இருந்தால், ஒரு தவணை போட்டுக்கொண்டாலே போதும். 10 வயதுக்கு மேல் இதைப் போட்டுக்கொள்கிற வர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ரத்தப் பரிசோதனை செய்துகொண்டு அதன்படி தடுப்பூசி தேவையா, இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்.

யாருக்குப் போடக் கூடாது?

அலர்ஜி உள்ளவர்கள், கர்ப்பிணிகள், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வர்கள் உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக் கூடாது. இவர்கள் வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

பக்கவிளைவுகள்:

வீக்கம், மிதமான காய்ச்சல், தலைவலி என்று சிறு தொல்லைகள் ஏற்படலாம். கடுமையானப் பக்கவிளைவுகள் எதுவும் இதற்கு இல்லை.

-போர் ஓயாது...