ஸ்பெஷல்
Published:Updated:

சுய மருத்துவம் சரியா?

கம்ப்ளீட் கைடுஹெல்த்

சுய மருத்துவம் சரியா?

“உடம்பு வலிக்குது. வரும் வழியில் அப்படியே ரெண்டு மாத்திரை வாங்கிட்டு வர்றியா?” - நம்மில் பெரும்பாலானோர் மருந்து வாங்கும் ஸ்டைல் இதுதான். உடல்வலி என்று மருந்துக்கடைகளில் கேட்டால், சிவப்பு, பச்சை, வெள்ளை டப்பாக்களில் இருந்து மாத்திரைகளை எடுத்து, ஒரு கவரில் போட்டுத் தந்துவிடுகிறார்கள். மாத்திரை சாப்பிடப்போகும் ஆள் ஆணா, பெண்ணா, குழந்தையா, என்ன வயது, வலி ஏன் வந்திருக்கிறது? என்கிற எந்த விபரமும் மருந்துக்கடைக்காரருக்குத் தெரியாது. மருந்துக்கடைக்காரர் மருந்தைப் பரிந்துரைக்கலாமா, அவர் என்ன படித்திருக்கிறார், மருந்தினால் வரும் பின்விளைவுக்கு அவர் பொறுப்பேற்பாரா என்கிற எந்தக் கேள்விக்கும் நம்மிடமும் பதில் இல்லை. இஷ்டப்படி மாத்திரைகளை விழுங்குவது சரியா?

“ஹாஸ்பிட்டல் போனா, அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்னு செலவு வெச்சிருவாங்க, மருந்துக் கடைன்னா, முப்பது ரூபாயில முடிஞ்சிரும்’’ என்பதுதான் இந்த அலட்சியத்துக்கு நாம் சொல்லும் காரணம். 30 ரூபாய் மாத்திரையில் வலி கொஞ்சம் சரியாகலாம், ஆனால், கண்டுபிடிக்கப்படாத நோய் உள்ளேயே இருந்து, நம்மை அரித்துக்கொண்டுதான் இருக்கும். “வயித்து வலினு அஞ்சு வருஷமா கடையில மாத்திரை வாங்கி சாப்பிட்டுட்டு இருந்தார், கடைசியில் ஆஸ்பத்திரிக்குப் போனா புற்றுநோய் இருக்குனு டாக்டர் சொன்னாங்க, நோய் முத்திப்போச்சாம், இனி ஒண்ணும் செய்ய முடியாதுனு சொல்லிட்டாங்க’’ என்று கடைசி நிமிடத்தில் கதறுவது இந்த அறியாமையின் விளைவுதான்.

சுய மருத்துவம் சரியா?

வளர்ந்த நாடுகளில் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துச்சீட்டு இல்லாமல், மருந்துகளை வாங்கவே முடியாது. மருத்துவர் ஆன்டிபயாடிக்கை பரிந்துரைத்தால்கூட, அது ஏன்? எதற்கு? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? போன்றவற்றை பிரின்ட்அவுட் எடுத்து, நோயாளிக்கு கொடுத்துவிட்டு, அதில் நோயாளியின் கையெழுத்தையும் வாங்கிக்கொள்வார்கள். தூக்கம் தரும் மருந்துகளை சாப்பிட்டால், வண்டி ஓட்டக் கூடாது, மீறி ஒட்டினால் அபராதம் கட்ட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.  ஆனால், இந்தியாவில் மருந்துகளுக்கு என இவ்வளவு கடுமையான சட்டங்களும், கட்டுப்பாடுகளும் இல்லை.

 சுய மருத்துவம் நல்லது அல்ல!

மருத்துவர் நோயாளியை நேரடியாகச் சந்திக்கும்போது மட்டுமே, நோயின் தன்மையை அவர் அறிய முடியும். நோயாளியின் உடல்நிலை, வயது, இயல்பு, எதிர்ப்பாற்றல், நோயின் தாக்கம் போன்ற காரணிகளைவைத்தே, ஒரு நோயாளிக்கு மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார். மருந்துக் கடைக்காரரோ, போனில் மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களோ, நோயாளியின் உடல்நிலையை அறிய மாட்டார்கள். காய்ச்சல் என மருந்தகத்திற்குச் சென்று, மருந்து வாங்கினால், அவருக்கு பாராசிட்டமால் தருவது வழக்கம். இதுவே குளிர் காய்ச்சல் என்றால் மலேரியா அல்லது டைபாய்டுக்கான மருத்துகளைக் கடைக்காரர்களே தருகின்றனர். இதைச் சாப்பிட்டால், காய்ச்சல் குறையலாம். ஆனால், பின் விளைவுகள் தீவிரமாக இருக்கும். 

எந்த மருந்தும், தேவை இல்லாமல் நம் உடலுக்குள் செல்லும்போது தொடர் வாந்தி, சிறுநீரக பாதிப்பு, வயிற்றுப் புண், எலும்பு மஜ்ஜை பிரச்னை போன்றவற்றை ஏற்படுத்தும். ஒருவருக்கு வயிற்றுவலி வரும்போது டாக்டர் எழுதித்தந்த மருந்தை, அந்த வீட்டில் யாருக்கு வயிற்றுவலி வந்தாலும் சாப்பிடுவது தவறு. இதனால், ஒவ்வாமை, சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் பாதிப்புகள் எனப் பெரிய அளவில் பிரச்னை வரலாம். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கும் வீட்டில் இருக்கும் ஒருவரே அனைவருக்கும் மருந்துகளை விநியோகித்துக்கொண்டிருப்பார். நான் இதைத்தான் சாப்பிடறேன், நீங்களும் சாப்பிடுங்க என்பதாக. இதுபோன்ற சீரியஸான பிரச்னைகளுக்கு தானாக  மாத்திரைகளைச் சாப்பிட்டால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவைகூட வரலாம்.

சுய மருத்துவம் சரியா?

 பக்க விளைவுகள்

உடலில் அலர்ஜி என மருத்துவரைச் சந்தித்தால், அவர் மாத்திரை எழுதித் தரும்போதே, அலர்ஜி மாத்திரைகள் சாப்பிட்டால் அதிக அளவில் தூக்கம் வரும் என்பதையும் குறிப்பிடுவார். நாமாக மாத்திரை வாங்கிச் சாப்பிடும்போது, பக்க விளைவுகள் பற்றி கவலைப்படாமல், மாத்திரை போட்டுக்கொண்டு வண்டி ஓட்டிக்கொண்டிருப்போம். கவனக்குறைவினால் நடக்கும் விபத்துக்களுக்கு இப்படியான மாத்திரைகளும் காரணம் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

மாத்திரைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். சத்து மாத்திரை, கிருமிகளைக் கொல்லும் மாத்திரை (Antibiotic), ஆன்டி அலர்ஜிக் மாத்திரை (Anti allergic) மற்றும் வலி நிவாரணி (Pain killers) மாத்திரைகள். இவற்றைத் தேவை இல்லாமலோ, அதிக அளவில் சாப்பிடும்போது பின்விளைவுகள் வருவது உறுதி. 

சுய மருத்துவம் சரியா?


 
 கோர்ஸ் மாத்திரைகள்

சில நோய்களுக்கு 2 வாரம் வரையோ, 3 மாதங்கள் வரையோ மாத்திரைகளைச் சாப்பிட சொல்லி, மருத்துவர்கள் பரிந்துரைப்பர். ஆனால், நோய் சரியாகிவிட்டது என்றதும் மாத்திரைகள்  சாப்பிடுவதை நிறுத்திவிடுவோம். இது தவறு. இதனால் நோய் குணமாகாது, நோயின் வீரியம்தான் அதிகமாகும். கூடவே நோய்க் கிருமிகளின் எதிர்ப்பாற்றலும் அதிகரிக்கும்.

உதாரணத்திற்கு, காச நோய்க்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை கட்டாயம் மருந்துகளைச் சாப்பிட வேண்டும், மெதுவாக வளரக்கூடிய கிருமிகளை, வளர வளரக் கொல்வதற்கே, மாதக் கணக்கில் மாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர். இருமல் சரியாகிவிட்டதே என மாத்திரைகளை நிறுத்தினால், நோய் மீண்டும் வருவது உறுதி. அதோடு, அந்த மருந்துக்கு எதிராக செயல்படும் தன்மையையும் கிருமி பெற்றுவிடும். எனவே, டாக்டர் பரிந்துரைத்த மருந்தை, பரிந்துரைத்தக் காலத்துக்குத் தவறாமல் சாப்பிடுவது அவசியம்.

 செய்யக் கூடாதவை

இரவில் குழந்தைகள் இருமினால், உடனே சிரப் ஒரு மூடி ஊற்றிக் கொடுத்துவிடுவார்கள். இது தவறு. இருமல் வந்தால், இளஞ்சூடான நீரை அருந்தத் தரலாம்.
‘ரொம்ப வீக்கா இருக்கேன், சத்து மாத்திரை வேண்டும்’ என வைட்டமின் சி, பி12 போன்ற மாத்திரைகளை நாமாக சாப்பிடுவதும் தவறு. சத்து மாத்திரைகள், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தவிரவும், உடலில் என்ன பிரச்னை என அறியாமல், சத்துக்குறைவு என நாமாக முடிவுக்கு வருவதும் தவறு. சத்துக்குறைவு எனப் பரிசோதனை முடிவுகள் இருந்தாலும்கூட, உணவுகள் மூலம் அதைச் சரிசெய்வதே சரியான அணுகுமுறை.

அவில் போன்ற மாத்திரைகளோ, சில வகை இருமல் மருந்துகளோ நன்றாகத் தூக்கம் வரும் என்பதற்காக, சிலர் தொடர்ந்து சாப்பிடுவார்கள். நாளடைவில் இது போதையாக மாறிவிடும். ஒருமுறை சாப்பிடும் மருந்தே பக்க விளைவுகளை தரும்போது, தொடர்ந்து சாப்பிட்டால், நீண்ட நாள் பாதிப்புகள் உறுதி.

சுய மருத்துவம் சரியா?

நெஞ்சு வலிக்கு மருத்துவர் ஏற்கனவே பரிந்துரைத்த அவசர கால மருந்தைச் சாப்பிட்ட பின், மேற்கொண்டு சிகிச்சைக்காக, மருத்துவமனைக்குச் செல்வது அவசியம். இதையே தொடர்ந்து சாப்பிடக் கூடாது.

மாத்திரைகள், கேப்ஸூல்களைப் பொடித்தோ, அரைத்தோ, தண்ணீரில் கரைத்தோ சாப்பிடக் கூடாது.

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மாத்திரைகளைத் தவிர, மற்ற மாத்திரைகளை வெறும் வயிற்றில் உட்கொள்ளக் கூடாது. சாப்பிட்ட பின், மாத்திரைகளைச் சாப்பிடுவதால் பின்விளைவுகளின் வீரியம் சிறிது குறையும்.

மது அருந்திவிட்டு, கட்டாயமாக மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.

 பயன்படுத்தாத மாத்திரைகளை என்ன செய்யலாம்?

டாக்டர் பரிந்துரைத்த அளவு மட்டுமே மாத்திரைகளை வாங்க வேண்டும். அதை முழுவதும் பயன்படுத்தவும் வேண்டும்.

பயன்படுத்தாத மாத்திரைகளை நண்பர்களுக்கு, செல்லப் பிராணிகளுக்கு கொடுக்கக் கூடாது. செடி, பூந்தொட்டி, மரங்களுக்கும் உரமாக இடுவதோ, மண்ணில் புதைப்பதோ கூடாது.

சிரப் மற்றும் மாத்திரைகளைக் கழிப்பறையில் ஊற்றி ஃப்ளஷ் செய்தல், ஏரி, கிணறு, கடலில் தூக்கி எறிதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.

மாத்திரைகளை சீல் செய்யப்பட்ட கவர்களில் கொட்டி,  அதில் மருத்துவ கழிவு (Medical wastage) என எழுதிக் குப்பையில் போடலாம்.

- ப்ரீத்தி,
படம்:  இரா.யோகேஷ்வரன்

சுய மருத்துவம் சரியா?

எளிய முறையில் முதலுதவி

 - சாருவாஹன், ஹோமியோபதி மருத்துவர்

•  சளி, தொண்டைக் கரகரப்பு, இருமல் பிரச்னைகளுக்கு, மிளகை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு சிறிது சிறிதாக இடைவெளி விட்டு குடிக்கலாம்.

•  தொடர் தும்மல் பிரச்னைக்கு, ஒரு டம்ளர் நீரில் அரை எலுமிச்சம் பழச்சாறு கலந்து, வெறும் வயிற்றில் குடிக்கலாம்

•  டென்ஷன் தலைவலிக்கு ஸ்ட்ராங் காபி ஏற்றது. மற்ற தலைவலிக்கு தூங்குவதே சிறந்த வழி. வலி தெரியாமல் இருக்க தைலம் தடவலாம். ஆனால், தொடர்ந்து வலித்தால், மருத்துவரிடம் செல்வது அவசியம்.

•  1-2 நாள் காய்ச்சலுக்கு எந்த மருந்தும் தேவை இல்லை. இரவில் குழந்தைகளுக்குக் காய்ச்சல் அதிகரித்தால், இளஞ்சூடான தண்ணீரில் துணியை நனைத்து, உடல் முழுதும் ஒத்திஎடுக்கலாம்.

•  வீசிங் பிரச்னைக்கு நெஞ்சுப் பகுதியில் இளஞ்சூடான ஒத்தடம் தரலாம்.

•  வாந்தி வருவதாக இருந்தால், எலுமிச்சைச் சாறு அருந்தலாம். எலுமிச்சைப் பழத்தோலின் வாசமும் நல்லது.