ஸ்பெஷல்
Published:Updated:

3 ஸ்டார் ரெசிப்பி

உணவு

3 ஸ்டார் ரெசிப்பி

ப்ளி ஹன்சிகா ஸ்வீட் ஸ்லிம்மாக மாறியதற்கு உணவுப்பழக்கமும் உடற்பயிற்சியுமே காரணமாம். கோலிவுட் ஏஞ்சல் ஹன்சிகா விரும்பி சாப்பிடும் ஹெல்த்தியான ரெசிப்பிக்களை செய்து காட்டியிருக்கிறார், “தி ரெசிடென்சி டவர்ஸ்” ஹோட்டலின்  சீனியர் செஃப் டி.சசிகுமார். ரெசிப்பிகளின் பலன்களைப் பட்டியலிடுகிறார் உணவியல் நிபுணர் தில்ஷாத் பேகம்.

3 ஸ்டார் ரெசிப்பி

ராஜ்மா பனீர் கறி
 
தேவையானவை: ராஜ்மா  ஒன்றரை கப்,  நறுக்கப்பட்ட பனீர் -150 கிராம், வெங்காயம் -2 (நடுத்தரமான அளவில்), தக்காளி -2, இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன், மஞ்சள் போடி - அரை டீஸ்பூன், மிளகாய்ப் பொடி -அரை டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டீஸ்பூன், சீரகப்பொடி - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்.

செய்முறை: இரவே ராஜ்மாவை ஊறவைக்க வேண்டும். ஊறிய ராஜ்மாவைத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர், இஞ்சிப்பூண்டு பேஸ்ட் சேர்த்து, பேஸ்ட் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு, தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி. மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கடைசியாக பனீர் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த ராஜ்மா மற்றும் கரம் மசாலாவைக் கடாயில் போட்டு மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை வேகவைக்கவும். இந்த ராஜ்மா பன்னீர் கறியை வேகவைத்த அரிசி சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

3 ஸ்டார் ரெசிப்பி

பலன்கள்: பனீர் மற்றும் ராஜ்மா இருப்பதால், இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்துள்ளது. போலேட், மக்னீசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால், அனைவரும் சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், பனீர் குறைவாகவும் ராஜ்மா அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

3 ஸ்டார் ரெசிப்பி

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 150 கிராம், தண்ணீர் - 200 மி.லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

செய்முறை: ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். தேவையான அளவு ஐஸ் சேர்த்து அருந்தவும்.

பலன்கள்: ஸ்ட்ராபெர்ரியில் ஆன்தோசயனின் நிறைந்திருப்பதால் கெட்ட கொழுப்பு எரிக்கப்படும். மேலும், வைட்டமின் கே, பொட்டாசியம், மக்னீசியம் போன்றவையும் இந்த ஜூஸில் கிடைக்கின்றன. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பயாட்டின், தலைமுடிகளை உறுதியாக்கும். நகங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. சருமம் பளபளக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால் ரத்த அழுத்தம், இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

டாலியா (DALIYA)

தேவையானவை: டாலியா  (சம்பா கோதுமை) - அரை கப், தண்ணீர் - ஒன்றேகால் கப், நறுக்கிய பெரிய வெங்காயம் -1, நறுக்கிய ் பச்சை மிளகாய்- 1, இஞ்சிப்பூண்டு பேஸ்ட் -அரை டீஸ்பூன், நறுக்கிய கேரட் -1, நறுக்கப்பட்ட பீன்ஸ் -6, மிளகாய் பவுடர் -அரை டீஸ்பூன் (தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக்கொள்ளவும்), மல்லிப் பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், சீரகப்பொடி -அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்

செய்முறை: சம்பா கோதுமையை  கால் கப் வெந்நீர் விட்டு, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகப்பொடி, கடுகு, வெங்காயம், தக்காளி சேர்த்து, நன்றாக வதக்கவும். பின்னர், பச்சை மிளகாய், இஞ்சிப்பூண்டு பேஸ்ட் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன் பின்னர் கேரட், பீன்ஸ், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, ஊறவைத்த சம்பா கோதுமை சேர்த்து, குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சூடாகச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

3 ஸ்டார் ரெசிப்பி

பலன்கள்: கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவு இது. காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோயாளிகள், உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு.

கிரீன் வெஜிடபிள் சாலட்

தேவையானவை: பீட்ரூட் - 6, தண்ணீர் - ஒரு கப், பேபி சாலட் (கொத்தமல்லி,பசலை கீரை ) - 8 கப், பார்ஸ்லி இ்லை - ஒரு கப், வெள்ளை வினிகர் - ஒரு டேபிள் ஸ்பூன், கல் உப்பு - கால் டீஸ்பூன், கருப்பு மிளகுப்பொடி - கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் -2 டேபிள் ஸ்பூன், சீஸ்- அரை கப், லேசாக வறுத்த வால்நட் - கால் கப், வேகவைக்காத நறுக்கிய காய்கறிகள் - தேவையான அளவு.

3 ஸ்டார் ரெசிப்பி

செய்முறை: மைக்ரோ அவனில், 375 டிகிரி சூட்டில் அரை மணி நேரம் வரை பீட்ரூட்டை வேகவைக்கவும். பீட்ரூட்டில் இருக்கும் தண்ணீர் வற்றிய பிறகு, பீட்ரூட்டை வட்ட வடிவில் நறுக்கிக்கொள்ளவும், பார்ஸ்லி இலைகள் மற்றும் பேபி சாலட், காய்கறிகள், பீட்ரூட் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வினிகர், உப்பு, மிளகுப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து லேசாகக் கிளறினால், சாலட் ரெடி.

பலன்கள்: வைட்டமின் பி6, கோலின், பீட்டைன் (Betaine), மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், செலினியம் ஆகியவை நிறைந்த உணவு. பீட்ரூட் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவை வராமல் தடுக்கும். எடை அதிகமாக உள்ளவர்கள் எடை குறைய இந்த உணவை எடுத்துக்கொள்ளவும். வைட்டமின் சி, வைட்டமின் ஏ ஆகியவை நிறைந்தது. சளி பிரச்னை உள்ளவர்கள், ஆஸ்துமா, சைனஸ் உள்ளவர்களுக்கு இந்த உணவு ஏற்றது.

- பு.விவேக் ஆனந்த், படங்கள்: எம்.உசேன்