குடும்பம்
“தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்தான், கடைசி வரை நமக்குக் கைகொடுக்கும். இந்த இரண்டையும் நெருங்கிய நண்பர்களாக்கிக் கொண்டால், நிச்சயம் நீங்களும் வெற்றியாளர்” என்கிறார் ப்ரீத்தி சீனிவாசன்.
20 வயது வரை உற்சாகமாகத் துள்ளித்திரிந்த ப்ரீத்தியை, எதிர்பாராத விபத்து ஒன்று வீல்சேரில் முடக்கிவிட்டது. கழுத்து முதல் பாதம் வரை, உறுப்புகள் செயல் இழந்த நிலையிலும் சோர்ந்து முடங்காமல், தன்னைப் போல் இருப்பவர்களுக்காக போராடக் கிளம்பியதுதான், ப்ரீத்தியின் மகத்தான மறுபக்கம்.
கிரிக்கெட் டீம் கேப்டன், நீச்சல் வீராங்கனை என இருந்த ப்ரீத்தி, விபத்திற்குப் பிறகு எழுத்தாளர், சமூகப் போராளி, சோல் ஃப்ரீ அமைப்பின் நிறுவனர் எனத் தன் அடையாளங்களை அமைத்துக்கொண்டார். ஃபெமினா பெண் சக்தி 2014, விஜய் டி.வி-யின் சிகரம் தொட்ட பெண்கள் விருது, ரெயின் ட்ராப்ஸ் வுமன் அச்சீவர் விருது எனப் பல விருதுகளை வாங்கியுள்ள ப்ரீத்திக்கு, இப்போது வயது 35.

“அப்பா, அம்மாவுக்கு திருமணமாகி ஒன்பது வருஷங்கள் கழித்து நான் பிறந்தேன். ராத்திரி, பகல்னு பார்க்காமல் எந்த நேரமும் மேட்ச் பார்ப்பேன். அந்த, ஆர்வம் புரிந்த அப்பா, என்னைவிட கொஞ்சம் சைஸ் பெருசா இருந்த கிரிக்கெட் பேட் வாங்கிக்கொடுத்தார். எட்டு வயசுல, தமிழ்நாடு சீனியர் கிரிக்கெட் டீமுடன் த்ரில்லான விளையாட்டு. அதில் வாங்கிய ஆல் ரவுண்டர் பட்டம், பிறகு கிரிக்கெட் டீம் கேப்டனா என்னை உயர்த்தியது. கூடவே, மாநில அளவில் நீச்சலில் தங்கம் என நான் தொட்டது எல்லாம் வெற்றி.

அப்பா பொறியியல் துறையில் வேலை பார்த்ததால் மூன்று நாடு, பல மாநிலங்கள் என ஒன்பது இடங்களில் பள்ளிப் படிப்பை முடிச்சேன். அப்பாவுடன் சென்னையில் செட்டிலாகி, எம்.பி.ஏ சேர்ந்தேன். 98-ல் கல்லூரியின் முதல் வருஷம் முடிஞ்சு புதுச்சேரிக்கு ஃப்ரெண்ட்ஸ்கூட டூர் போனேன். புதுச்சேரி பீச்ல, இடுப்பளவு தண்ணீரில் நின்னுருந்தப்ப, வேகமா ஒரு அலை வந்தது. என்னை வேகமா இழுத்துட்டுப் போன அந்த அலையோட வீரியத்துல இருந்து, எழுந்திருக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். கொஞ்சம்கூட முடியலை. சுத்திப் பார்த்தேன். கொஞ்ச நேரத்துல அலை என்னை வெளியே தள்ளிடுச்சு. எந்தப் பாறையிலேயும் இடிக்கலை, ரத்தமும் வரலை, ஆனா உடலில் உணர்ச்சி மட்டும் இல்லை. ஏதோ, உடல் முழுக்க ஷாக் அடிச்ச மாதிரி இருந்தது. புதுச்சேரி ஜிப்மரிலிருந்து என்ன பிரச்னைனு டயகனைஸ் பண்ணாம, சென்னை அழைத்து வரவே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. இந்த நாலு மணி நேரம்தான், இன்னைக்கு என் வாழ்க்கையை மாத்திடுச்சுனு நினைக்கிறேன். சரியான அவசர சிகிச்சைமுறை இல்லாததுதான், இந்தியாவில் இன்றும் தொடரும் பெரும்பாலான தண்டுவடப் பிரச்னைகளுக்குக் காரணம்.

கழுத்துக்குக் கீழே எதுவும் வேலை செய்யாது. இனி, சக்கர நாற்காலிதான்னு சொன்னதை ஏத்துக்க முடியலை. துயரத்தை ஏத்துக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன். அடுத்த இடி, அப்பாவின் இறப்பு. ‘தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு எல்லா வசதிகளும் செஞ்சுதரக்கூடிய ஒரு அமைப்பு இந்தியாவில் இல்லை. ‘உனக்கு நடந்த காலதாமதம் மாதிரி யாருக்கும் பிரச்னை வரக் கூடாது, அதுக்கு எதாவது பண்ணனும்’னு அம்மா சொன்னாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான் ‘சோல் ஃப்ரீ (Soul free)’.
என்னைப் போல தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்களை, அவங்களோட பெற்றோரே நேரடியாவும் மறைமுகமாவும் தற்கொலைக்குத் தள்ளுறாங்க. அதுல மீண்டு வர்றவங்களை இந்த சமுதாயம் நோகடிக்குது. அவங்களுக்காக வேலை செய்றதுதான், இந்த அமைப்போட நோக்கம். கூடவே தண்டுவட விபத்து நடக்காமல் பாதுகாப்பது எப்படி, ஒரு விபத்து நடந்தால், தண்டுவடம் பாதிக்காம முதலுதவி செய்றது எப்படினு நாங்களே பள்ளி, கல்லூரி, ஆபீஸ்னு போய் சொல்லித்தர்றோம்.
வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை எதிர்கொண்டு, மத்தவங்களுக்காக எப்படி உதவ முடியும்னு யோசிக்கணும். அதுதான் நான் கத்துக்கிட்டது. 18 வயசுப் பொண்ணா நின்னதைவிட, இப்போ இன்னும் பல மடங்கு தன்னம்பிக்கையோட இருக்கேன்” - கம்பீரமாக கைகுலுக்குகிறார் ப்ரீத்தி.
- க.பிரபாகரன், படங்கள்: கா.முரளி
சோல் ஃப்ரீ ப்ரீத்தியின் அட்வைஸ்!
• சாலை விபத்தில் யாரேனும் அடிப்பட்டால், உதவி செய்கிறேன் என்று, விபரம் அறியாமல் அவர்களுடைய கை, கால்களைப் பிடித்து இழுத்து முதல் உதவி செய்யாதீர்கள். இதுதான் தண்டுவடப் பிரச்னைக்கு காரணம்.
• விளையாட்டுக்காகக்கூட மரத்திலிருந்து குதிப்பது, மாடியிலிருந்து சாகசம் செய்வது போன்ற செயல்களைச் செய்யாதீர்கள். இன்றைக்கு கட்டட வேலைக்கு செய்பவர்கள் பலரும், கவனக் குறைவால் விபத்தில் சிக்கி, தண்டுவடப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எந்த வேலையாக இருந்தாலும், அவசரமாக செய்யாமல் நிதானமாகச் செய்யுங்கள்.

• குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, பேருந்து படிக்கட்டில் நின்றுகொண்டு பயணிப்பது ஆகியவற்றைத் தவிருங்கள். சாலை, ரெயில்வே ட்ராக் போன்றவற்றைக் கடக்கும்போதும் வாகனம் ஓட்டும்போதும் செல்போன் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
சோல் ஃப்ரீ அமைப்பின் செயல்பாடுகள்:
• மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட திறமையை கண்டறிந்து, சுயமாய் சம்பாதிக்க தேவையான பயிற்சிகளைத் தருகிறது. அவர்களது திறமை மற்றும் உடல் திறனை அடிப்படையாகக் கொண்டு ஏதாவது ஒரு தொழில் தொடங்க மன ரீதியான ஆதரவையும் பண உதவிகளையும் செய்கின்றனர்.
• மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வாங்கித் தருவது, மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு ஸ்டைபண்டாக ஒரு குறிப்பிட்ட அளவு உதவித்
தொகை வழங்குகின்றனர்.
• படுக்கைப் புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு ஏர் பெட் (Air bed) வாங்கித் தருகின்றனர்.
• விபத்து ஏற்பட்டவுடன் இந்த அமைப்பைத் தொடர்புகொண்டால், அவர்களுக்கு மருத்துவமனைக்கே சென்று உளவியல் ரீதியான ஆலோசனை அளிப்பது, தமிழகத்தில் சிறந்த மறுவாழ்வு சென்டர்களின் தகவல்களை தருவது போன்றவற்றைச் செய்கின்றனர்.
• சோல் ஃப்ரீ அமைப்பை preethi@soulfree.org என்ற இ-மெயில் மூலமாகவும்
www.soulfree.org என்ற இணைய தளத்தின் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம்.