ஸ்பெஷல்
Published:Updated:

காரமான செங்கல்தூள்?

உணவு

- சந்தானராஜன் இயக்குனர் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா

டைகளில் வாங்கும் மிளகாய்ப் பொடியில் செங்கல் பொடி இருப்பது தெரியுமா?  இன்னும் அதிரவைக்கும் பல கலப்படங்களும் மிளகாயில் சேர்க்கப்பட்டு, தினம் தினம் நம் தட்டுகளில் பரிமாறப்படுகின்றன.

மிளகாயை அளவோடு சேர்த்துக்கொண்டால், நல்ல செரிமானத்தைக் கொடுக்கும்.  மிளகாயில் உள்ள ‘கேப்சைசின்’ என்ற வேதிப்பொருள் மூளையைத் தூண்டி, ‘எண்டோர்பின்ஸ்’             (Endorphins)என்னும் வலி நிவாரணியை உருவாக்குகிறது. ஆனால்,  இதை அதிக அளவில் உண்ணும்போது, வியர்வை ஏற்படுதல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத்திணறல் மற்றும் விக்கல் போன்ற பிரச்னைகளைத் தருகிறது. மிளகாய்ப் பொடியில் கலப்படம் செய்வதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

காரமான செங்கல்தூள்?

எப்படிக் கண்டறிவது?

குழம்பு கொதிக்கும்போது சிவப்பான நிறத்தில் எண்ணெய் மிதந்தால், மிளகாயில் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளன என அர்த்தம்.  ‘சிந்தடிக் டைகள்’ நிறத்துக்காகச் சேர்க்கப்படுவதால், புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. உணவு பாதுகாப்புச் சட்டப்படி, மிளகாய்த் தூள் பாக்கெட்களில் அடைத்தே விற்கப்பட வேண்டும். எனவே, திறந்தபடி விற்கப்படும் மிளகாய்த்தூளை வாங்க வேண்டாம்.

மிளகாய் விலை அதிகம் என்பதால், அரைக்கும்போது மிளகாய்க்காம்பு, இதழ்கள் சேர்த்து அரைக்கப்படுகின்றன. பொதுவாக, 2 சதவிகிதம் தாவர எண்ணெயை மிளகாய்த் தூளில் கலக்க அனுமதி இருக்கிறது. மிளகாய்த் தூளில் இயற்கை வண்ணமும் காரமும் நீடிக்க இது உதவும். ஆனால், தாவர எண்ணெய்க்குப் பதிலாக மினரல் எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்தால், அது புற்றுநோய் செல்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும். தோற்றத்தில் ஒரேமாதிரி இருப்பதால், செங்கல் தூளும் அதிக அளவு மிளகாய்த் தூளில் கலப்படம் செய்யப்படுகிறது. கவனமாக இருங்கள்!

- ப்ரீத்தி

எப்படி வாங்குவது?

•  நிறுவனத்தின் பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, அக்மார்க் முத்திரை, ISO 9000, லைசென்ஸ் எண் ஆகியவை லேபிளில் அச்சிட்டுள்ளதா எனப் பார்த்து வாங்கவும்.

•  மிளகாயை வாங்கி காயவைத்து, நாமே அரைத்துப் பயன்படுத்துவது நல்லது.

•  நிறம், காரம், விளம்பரம் இவற்றைக் கருத்தில்கொண்டு மட்டுமே மிளகாய்த் தூளை வாங்கக் கூடாது.